search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலமைச்சர் ஸ்டாலின்"

    • இசை வளர்த்தல் என்பது கலை வளர்த்தல், கலை வளர்த்தல் என்பது பண்பாட்டை வளர்த்தல், பண்பாட்டை வளர்த்தல் என்பது நமது நாகரீகத்தை வளர்த்தல்.
    • ஆண்டுதோறும் மார்கழி மாதம் இந்தியாவில் இருந்து மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள இசை கலைஞர்களை வரவழைக்க கூடிய வேடந்தாங்கலாக மியூசிக் அகாடமி செயல்படுகிறது.

    சென்னை:

    சென்னை டிடிகே சாலையில் உள்ள மியூசிக் அகாடமியின் 96வது ஆண்டு விழா கருத்தரங்கம், கச்சேரியை துவக்கி வைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

    மியூசிக் அகாடமி இசைக்கலை ஒன்றியத்தின் 96வது ஆண்டு ஆண்டு விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைக்கிறேன். இங்கு திரு. முரளி அவர்கள் குறிப்பிட்டது போல 1975ம் ஆண்டு நடந்த ஆண்டு விழாவிலும், 1996ம் ஆண்டு நடந்த ஆண்டு விழாவிலும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தியிருக்கிறார்.

    அந்த வகையில் இந்த 96வது ஆண்டு விழாவில் நான் பங்கெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன். 1927ம் ஆண்டு நடந்த இசை மாநாட்டில் இந்திய இசையை வலுசேர்ப்பதற்காக இப்படி ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று நினைத்து உருவாக்கியிருக்கிறார்கள். எந்த அமைப்பாக இருந்தாலும் அதனை உருவாக்குவது எளிது. ஆனால் தொடர்ந்து நடத்துவதுதான் சிரமம். 96 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தியிருக்கும் அனைவரையும் வணங்குகிறேன், வாழ்த்துகிறேன்.

    இன்னும் 4 ஆண்டுகளில் இந்நிகழ்ச்சி என்பது நூற்றாண்டு விழாவாக நடைபெற போகிறது. அதிலும் நான் உறுதியாக கலந்துகொள்வேன் என்று நம்புகிறேன்.

    ஆண்டுதோறும் மார்கழி மாதம் இந்தியாவில் இருந்து மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள இசை கலைஞர்களை வரவழைக்க கூடிய வேடந்தாங்கலாக இந்த மியூசிக் அகாடமி இன்றைக்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    இசை வளர்த்தல் என்பது கலை வளர்த்தல், கலை வளர்த்தல் என்பது பண்பாட்டை வளர்த்தல், பண்பாட்டை வளர்த்தல் என்பது நமது நாகரீகத்தை வளர்த்தல் அந்த வகையில் மக்கள் மனதையும், இந்த மாநிலத்தையும் பண்படுத்தும் கடமையை இது போன்ற இசை கலை மன்றங்கள் செய்து வருவது மிகப்பெரிய தொண்டு.

    மியூசிக் அகாடமி போன்ற இசைக் கலை அமைப்புகளை ஏதோ பொழுதுபோக்கு அமைப்பு என்று சொல்லமுடியாது. இவை அனைத்து நமது பண்பாட்டை வளர்க்க கூடியவை. இந்த நிகழ்ச்சியில் விருதுகளை பெற்ற அனைத்து இசை கலைஞர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திரையுலகின் மிகப்பெரிய விருது மியூசிக் அகாடமி விருது என்பதை நீங்கள் அனைவரும் நன்றாக அறிந்ததே. அத்தகைய உரிய விருது பெற்றுள்ள நீங்கள் அனைவரும் தொடர்ந்து இத்துறைக்கு தொண்டாற்றி உங்களை போன்ற திறமைசாலிகளை உருவாக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

    • இந்தியாவில், தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும்.
    • அனைத்து மொழிகளும் மத்திய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட வேண்டும்.

    இந்தி திணிப்பு முயற்சியை கைவிடக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:

    இந்தியைத் திணிப்பதற்கான சமீபத்திய முயற்சிகள் நடைமுறைக்கு ஒவ்வாதவை, அவை நாட்டினை பிளவுபடுத்தும் தன்மை கொண்டவை. இது இந்தி பேசாத மக்களை பல விஷயங்களில் இரண்டாந்தர குடிமக்கள் போல பிரித்தாளுகின்ற தன்மை கொண்டவை. தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல தாய்மொழியைப் போற்றும் எந்த மாநிலத்திற்கும் இது ஏற்புடையதாக இருக்காது.

    வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்ட இந்தியாவில், தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளும் சரி சமமாக நடத்தப்பட வேண்டும். அனைத்து மொழிகளும் மத்திய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட வேண்டும்.

    வளமான மற்றும் பல்வேறுபட்ட கலாச்சாரப் பன்முகத்தன்மையை அந்தந்த தனித்துவமான மொழியியல் சுவைகளுடன் ஊக்குவிப்பது என்பது, இந்தியத் துணைக் கண்டத்தின் பெருமையும் வலிமையும் ஆகும். இது உலக அரங்கில் பலவித பண்பாடுகள் மற்றும் மொழிகள் கொண்ட ஜனநாயக நாடுகளுக்கு ஒரு வலுவான எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.

    ஒரே நாடு என்ற பெயரில் இந்தி மொழியை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முயற்சிகள் பல்வேறு மொழிகள் மற்றும் பண்பாடுகளைக் கொண்ட இந்திய மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருவதை சிதைப்பதோடு இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஊறுவிளைப்பதாக அமைந்திடும்.

    அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வசதிகளைக் கருத்தில் கொண்டு தமிழ் உட்பட அனைத்து மொழிகளையும் அலுவல் மொழியாக எட்டாவது அட்டவணையில் சேர்ப்பதும் அனைத்து மொழிகளையும் ஊக்குவிப்பதும் அனைத்து மொழிகளைப் பேசுவோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமவாய்ப்பினை வழங்கி முன்னேற்றத்திற்கான வழிகளை அனைவருக்கும் திறப்பதும்தான் ஒன்றிய அரசின் அணுகுமுறையாக இருக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.

    பல்வேறு வழிகளில் இந்தியைத் திணிக்கும் வகையில் அமைந்துள்ள அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை மேலும் முன்னெடுத்துச் செல்லாமல், பெருமை வாய்ந்த இந்திய ஒற்றுமைச் சுடரைத் தொடர்ந்து ஒளிரச் செய்ய வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 22.76 லட்சம் செல்லிடப்பேசிகளுக்கு எச்சரிக்கை குறுஞ் செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது.
    • மொத்தம் 49 முகாமிகளில் 4,035 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் அதிக அளவு உபரி நீரினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

    மேட்டூர் அணையிலிருந்து நேற்று (05.08.2022) மாலை 8.00 மணி முதல் 1,80,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரி நீர் வெளியேற்றப்படுவதால், பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முனனெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவிரி, கொள்ளிட கரையோர மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 4ந் தேதி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

    மேலும், இம்மாவட்டங்களுக்கு விரைந்து சென்று உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அமைச்சர்கள், கண்காணிப்பு அலுவலர்களையும் அறிவுறுத்தியிருந்தார். இதன் தொடர்ச்சியாக, நேற்று (5.8.2022) இரவு சென்னை எழிலகம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வளாகத்திலுள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்திற்கு முதலமைச்சர் வருகை புரிந்து வெள்ள நிலைமை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

    அப்போது, கூடுதல் தலைமைச் செயலர் / வருவாய் நிருவாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர், வெள்ள நிலைமை குறித்தும், மழை விபரம் குறித்தும், காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நபர்கள், நிலை நிறுத்தப்பட்டுள்ள மீட்புப் படைகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சருக்கு எடுத்துக் கூறினார்.

    மேட்டூர் மற்றும் அமராவதி அணையிலிருந்து தொடர்ந்து அதிக அளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால், ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி, பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் 22.76 லட்சம் செல்லிடப்பேசிகளுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது.

    வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக கொண்டு வந்து 49 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 10 மாவட்டங்களில் உள்ள இந்த 49 முகாம்களில் 1327 குடும்பங்களைச் சேர்ந்த 4035 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    கன மழையின் போது தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாவட்ட நிருவாகத்துடன் ஒருங்கிணைந்து ஈடுபடும் பொருட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2 குழுக்களும், நாமக்கல் மாவட்டத்தில் 1 குழுவும், ஆக மொத்தம் 66 வீரர்களைக் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையின் 3 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    மேலும், திருச்சிராப்பள்ளி, ஈரோடு, நாமக்கல், ஆகிய மாவட்டங்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 118 வீரர்களைக் கொண்ட 3 குழுக்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ள விபரங்களை முதலமைச்சர் கேட்டறிந்தார்.

    ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், கந்தன் பட்டறை நிவாரண முகாம், நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் வட்டம், பள்ளிப்பாளையம் நகராட்சி திருமண மண்டபம் நிவாரண முகாம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், மகாராஜா மண்டபம், பிச்சாண்டார் கோயில் நிவாரண முகாம் ஆகிய நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முதலமைச்சர் பேசினார்.

    அவர்களுக்கு அங்கு போதுமான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்டறிந்தார். மேலும், ஈரோடு, நாமக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர்களிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கள நிலவரம் குறித்து கேட்டறிந்து, உரிய நிவாரண நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×