search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலமைச்சர் உறுதி"

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று நாகை மாவட்ட விவசாயிகள், பெண்களிடம் முதலமைச்சர் உறுதி அளித்தார். #EdappadiPalaniswami #GajaCyclone
    நாகப்பட்டினம்:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார். புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 கோடி நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார்.

    இதையடுத்து அவர் முதலில் புயலால் சேதமான பிரதாபராமபுரம் பகுதிக்கு சென்றார். அங்கு புயலால் வீடுகளை இழந்த பெண்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.



    அப்போது பெண்கள், வீடுகளை இழந்து குழந்தைகளுடன் சிரமப்பட்டு வருகின்றனர். மின்சாரம், குடிநீர் இல்லாமல் தவித்து வருகிறோம் என்றனர்.

    இதை கேட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    தற்போது புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்து வருகிறது. புயலால் நாகை மாவட்டம் அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவிகள் கிடைக்கும். கிராமங்களுக்கு மின்சாரம் , குடிநீர் விரைவில் வழங்க அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் பொதுமக்கள் சிலர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். இதை பெற்றுக்கொண்ட அவர், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

    இதையடுத்து விழுந்த மாவடி கிராமத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி சென்றார். அங்கு புயலால் சேதமான தென்னை, மா மரங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

    அப்போது விவசாயிகள், எங்களது வாழ்வாதாரமே போய் விட்டது. இதில் எப்படி மீண்டு வர போகிறோம் என்று தெரியவில்லை. அதிகாரிகள் விரைந்து கணக்கெடுத்தால் தான் நிவாரணம் கிடைக்கும் என்று கண்ணீர் மல்க கூறினர்.

    இதை கேட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புயல் பாதித்த பகுதிகளில் எல்லாம் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வு நடத்தி நிவாரண பணிகள் துரிதப்படுத்தி வருகிறார்கள். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அரசு தேவையான உதவியை செய்யும். விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் விரைவில் வழங்கப்படும் என்று கூறினார்.

    இதையடுத்து வேட்டைகாரனிருப்பு கிராமத்தில் அரசு நிவாரண முகாமில் தங்கியிருந்த பொதுமக்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆறுதல் கூறினார்.

    அப்போது பெண்கள் அனைவரும் கண்ணீர் மல்க தங்களது வேதனையை தெரிவித்தனர். வீடு, வாசல், தோப்பை இழந்து விட்டோம். இனி அரசு முகாமில் அடுத்தவேளை உணவுக்காக காத்திருக்கிறோம். ஆடு, மாடுகளை இழந்து வாழ்வாதாரத்தையும் இழந்து வருமானமின்றி தவிக்கிறோம். அரசு நிவாரணம் அளித்தால் தான் எங்களுக்கு வாழ்க்கையே’ என்று கூறினர்.

    இதை பொறுமையுடன் கேட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘‘தமிழக அரசு உங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கப்படும். மின்கம்பங்கள் நடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. மின்சாரம், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

    இதன்பிறகு கோவில்பத்து கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் தானிய சேமிப்பு கிடங்கை பார்வையிட்டார். சுமார் ரூ.151 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தானிய சேமிப்பு கிடங்கு முற்றிலும் சேதமாகியிருப்பதை பார்வையிட்டார். மேலும் அங்கிருந்த சேதமான நெல் மூட்டைகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தார்.

    பிறகு வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, புஷ்பவனம், பெரிய குத்தகை, வேதாரண்யம், வாய்மேடு ஆகிய பகுதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். #EdappadiPalaniswami #GajaCyclone

    ×