search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக்கொம்பு கொள்ளிடம் பாலம்"

    15 ஆண்டுகளாக நடந்து வந்த மணல் கொள்ளையே முக்கொம்பு கொள்ளிடம் பாலம் இடிய காரணம் என்று விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார். #PRPandian
    திருச்சி:

    திருச்சி முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றுக்கு தண்ணீர் திறக்கப்படும் மதகுகளில் நேற்றிரவு மதகுகள் உடைந்து பாலம் துண்டிக்கப்பட்டது. இதனால் மேட்டூரில் இருந்து திருச்சி காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் முழுவதும் உடைந்த மதகுகள் வழியாக கொள்ளிடத்தில் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து விவசாய சங்கத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது :-

    காவிரி-கொள்ளிடம் ஆற்றில் கரூர் முதல் திருச்சி வரை கடந்த 15 ஆண்டுகளில் நடந்த மணல் கொள்ளையே கொள்ளிடம் இரும்பு பாலம் மற்றும் முக்கொம்பு அணை பாலம் உடைய காரணம் ஆகும்.

    கோர்ட்டு உத்தரவுப்படி ஆறுகளில் 5 அடி அளவு தான் மணல் அள்ள வேண்டும். ஆனால் அரசு குவாரிகளிலும் பல அனுமதி பெறாத திருட்டு குவாரிகளிலும் காவிரி ஆறுகளில் 50 அடி முதல் 100 அடி ஆழம் வரை மணலை அள்ளி விட்டனர்.

    பாலங்கள் அடியிலும் இந்த மணல் கொள்ளை நடந்தது. அதனால் தான் வெள்ளம் வரும் நேரங்களில் பள்ளங்களை நிரப்ப வெள்ள நீர் பாலங்களின் அருகில் உள்ள மணல் திட்டை அள்ளிக்கொண்டு செல்கிறது.

    அப்போது பாலத்தின் தூண் அருகில் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் பாலம் சுவர் வலுவிழந்து போய் விடுகிறது. இதனால் தான் பலவீனம் அடைந்து கொள்ளிடம் பழைய பாலமும், நேற்றிரவு முக்கொம்பு மேலணை பாலமும் உடைந்து ஆற்றுக்குள் விழுந்து விட்டன.

    கடந்த ஆண்டு கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி. அணையின் மதகுகள் உடைந்தது. தொடர்ந்து எடப்பாடி அருகில் உள்ள அணையிலும் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அணைகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தோம்.

    ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு நீர் மேலாண்மையில் அணைகள் பாதுகாப்பு, பராமரிப்பிற்கு ஒதுக்கீடு செய்த தொகை எவ்வளவு? செலவு செய்தது எவ்வளவு? என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.


    முக்கொம்பு அணை பராமரிப்பு குறித்து இங்குள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிக்கை அனுப்பியிருந்தாலும் அதை பராமரிக்காமல் செலவு செய்தது போல கணக்கை மட்டும் காட்டினார்களா? அதிகாரிகள் கைகளை யார் கட்டிப் போட்டது என்பதை விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

    தொடர்ந்து ஏற்படும் பாலம் பிரச்சனைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். இதை வலியுறுத்தி நாங்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

    அணைகள் கட்டப்பட்டது தண்ணீரை தேக்கி வைத்து பாசனத்திற்கு பயன்படுத்துவதற்காகத் தான் தவிர இப்படி உடைந்து வீணாக வெளியேறுவதற்காக அல்ல. தண்ணீருக்காக போராடி, அதன் மூலம் கிடைத்த நீரை தேக்கி வைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் போனது கண்டிக்கத்தக்கது. நீர் மேலாண்மை சிறப்பாக செயல்படுத்தப்படும் என்று கூறும் அரசு கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை தேக்க என்ன செய்துள்ளது.?

    இவ்வாறு அவர் கூறினார். #PRPandian
    ×