search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக்கொம்பு கொள்ளிடம்"

    முக்கொம்பு கொள்ளிடத்தில் இன்று இரவுக்குள் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்கும் பணி முழுமையாக நிறைவடையும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #MukkombuDam #MRVijayabaskar
    திருச்சி:

    திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் 9 மதகுகள் உடைந்ததையடுத்து அதனை தற்காலிகமாக சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மணல் மூட்டைகள், பாறாங்கற்களை கொண்டு உடைந்த பகுதியில் அடைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர் தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை அணையில் 1 முதல் 5-வது மதகுகள் வரை மணல் மூட்டைகள் கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    மணல் மூட்டைகளை தாங்கும் அளவிற்கு பக்கவாட்டில் சவுக்கு கம்புகள் நடப்பட்டுள்ளன. இதேபோல வடகரை பகுதியில் 13-வது மதகில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் மணல் மூட்டைகளை ஆற்றில் ஓடும் தண்ணீருக்குள் அடுக்கி நிறுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதோடு, சவாலாகவும் அமைந்துள்ளது. மேலும் 6 முதல் 13-வது மதகு வரை உடைந்த பகுதியில் ஆற்றில் ஆழம் அதிகமாக இருப்பதால் அங்கு சவுக்கு கம்புகள் நடுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    முக்கொம்பில் மதகுகள் உடைந்த பகுதியில் ஆற்றில் சவுக்கு கட்டைகளை ஊன்றி, மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்படும் காட்சி.

    இதையடுத்து அங்கு இரும்பு குழாய்களை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. இரும்பு குழாய்கள் அணையின் மேற்கு பகுதியில் நிறுவப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் உடைந்த மதகுகள் வழியாக வெளியேறும் தண்ணீரை கட்டுப்படுத்த பாறாங்கற்களை அதிகளவில் கொட்டி, அடைப்புகள் ஏற்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அணையின் கிழக்கு பகுதியில் லாரிகள் இறங்கி செல்வதற்கு வசதியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    முக்கொம்பு அணையில் நடை பெற்று வரும் சீரமைப்பு பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முக்கொம்பு பாலம் உடைந்த பகுதியில் 24 மணி நேரமும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்பாக கொள்ளிடத்துக்கு தண்ணீர் செல்லாத வகையில் மணல் திட்டு அமைக்கப்படுகிறது.

    மேலணை உடைந்த இடத்தில் மணல் மூட்டைகள் மற்றும் பெரிய பாறாங்கற்களை கொண்டும் தடுப்பு ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கென 160 லாரிகள் மூலம் கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து பாறாங்கற்கள் கொண்டு வரப்படுகின்றன.

    உடைப்பு ஏற்பட்ட பகுதியில் 15 அடிக்கு மேல் ஆழம் உள்ளது. தண்ணீரின் வேகமும் அதிகமாக உள்ளது. இன்று இரவுக்குள் கொள்ளிடத்தில் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்கும் பணி முழுமையாக நிறைவடையும் என்றார். #MukkombuDam #MRVijayabaskar
    ×