search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக ஸ்டாலின் கண்டனம்"

    மதுரை அரசு மருத்துவனையில் 3 பேர் பலியானதற்கு அரசு மற்றும் சுகாதார துறையின் அலட்சியமே காரணம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். #MaduraiGovernmenthospital #Stalin
    சென்னை:

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பெய்த மழை காரணமாக 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. அப்போது அவசர சிகிச்சை பிரிவில் இருந்த 3 நோயாளிகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

    மின்தடை ஏற்பட்ட உடனேயே அரசு ஆஸ்பத்திரியில் லிப்ட் மற்றும் மருத்துவ உபகரணங்கள் எதுவும் செயல்படவில்லை. ஜெனரேட்டர் உடனே இயக்கப்படாததால் தான் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் இறந்துள்ளதாக நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

    இதனை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்துள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் இருந்த 5 நோயாளிகள் ஏற்கனவே கவலைக்கிடமாக இருந்தனர். சிகிச்சை பலனின்றிதான் அவர்கள் இறந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், மதுரை அரசு மருத்துவனையில் 3 பேர் பலியானதற்கு அரசு மற்றும் சுகாதார துறையின் அலட்சியமே காரணம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
     
    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் அப்பாவி உயிர்கள் பலியாகி இருப்பது கவலையளிக்கிறது. அரசு நிர்வாகமும், சுகாதார துறையின் அலட்சியமே முழு காரணம். எடப்பாடி பழனிசாமி அரசு முழு பொறுப்பு ஏற்பதோடு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதியும், நிவாரணமும் தேவை என பதிவிட்டுள்ளார். #MaduraiGovernmenthospital #Stalin
    நீட் தேர்வை கணினிமயம் ஆக்குவதன் மூலம் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவையும், சமூக நீதியையும் மத்திய அரசு சீர்குலைக்க முயற்சி செய்வதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். #NEET #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேசிய தேர்வு முகமை எனும் “நே‌ஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி” தான், இனிமேல் “நீட்” தேர்வுகளை நடத்தும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய பா.ஜ.க. அரசு, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமான குழப்பத்தை ஏற்படுத்தி, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைத் தகர்த்துத் தரைமட்டமாக்கி வருவதற்கு, தி.மு.க. சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நீட் தேர்வுக்குரிய தமிழ் கேள்வித்தாளை மொழி பெயர்ப்பதில் பிழைகளை ஏற்படுத்தி, தமிழ்நாட்டு மாணவர்கள் எல்லாம் டாக்டர் படிப்பில் சேர முடியாத அநீதியான அவல நிலைமையை ஏற்படுத்தியது.


    இந்நிலையில் கணினி மயமான தேர்வை அறிமுகப்படுத்துவது பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுத்திடக்கூடும் என்று தெரிந்தே அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    கிராமப்புற மாணவர்கள் அதிலும் குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் கணினியே இல்லாத குடும்பங்களில் வாழ்பவர்கள். அது மட்டுமின்றி கணினிப் பயிற்சி ஏதும் பெரிய அளவில் இல்லாதவர்கள்.

    இதுபோன்ற இயலாமை நிறைந்த சூழ்நிலையில், கிராமப்புற மாணவர்கள் எப்படி கணினி மூலம் தேர்வு எழுத முடியும் என்ற அடிப்படை சிந்தனை கூட மத்திய பா.ஜ.க. அரசுக்கு வராதது மிகுந்த வேதனையளிக்கிறது. மருத்துவப் பட்டம் பெறுவது கிராமப்புற மாணவனுக்கு நிரந்தரமாக எட்டாக் கனியாகவே இருந்து விட வேண்டும் என்ற சதி ஆலோசனை நிறைந்த உள்நோக்கத்தின் விளைவுதான் இந்த கணினி மூலம் நீட் தேர்வு என்ற மோசமான அறிவிப்பாகும்.

    நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஏழரைக் கோடி மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரிடம் அனுமதி பெறாமல் அலட்சிய மனப்பான்மையுடன் கிடப்பில் போட்டு வைத்து விட்டு, இப்படி ஆண்டுக்கு ஒரு குழப்பத்தை நீட் தேர்வில் புகுத்தி வரும் மத்திய பா.ஜ.க. அரசு கிராமப்புற மாணவர்களுக்கும், சமூக நீதிக் கொள்கைக்கும் முற்றிலும் எதிராகவே தொடர்ந்து செயல்படுகிறது.

    அனைவருக்கும் சம வாய்ப்பு என்பதைக் கருத்தில் கொண்டு, கணினி மூலம் நீட் தேர்வு என்பதை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும், ஏற்கனவே தமிழ்நாடு சட்ட மன்றம் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பியுள்ள மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை உடனே பெற்றுத் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    “வளர்ச்சி முழக்கத்தை” வெகுளித்தனமாக நம்பி ஏமாந்து வாக்களித்து விட்டார்கள் மக்கள் என்பதை மூலதனமாக்கி, கிராமப்புற மாணவர்களின் வாழ்க்கையுடன் “நீட்” தேர்வை வைத்து சித்து விளையாடி, அவர்களின் மருத்துவக் கனவையும், சமூக நீதியையும் அரக்க மனப்பான்மையுடன் சீர் குலைக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு, மாணவர்கள் தக்க நேரத்தில் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #NEET #DMK #MKStalin
    ×