search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீண்டும் திறக்க கூடாது"

    தாமிரம் கிடைக்கவில்லை எனக்கூறி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கூடாது என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
    சென்னை:

    தாமிரம் கிடைக்கவில்லை எனக்கூறி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கூடாது என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரி அனந்தன், உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் உள்ள தனது சகோதரி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

    தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், நேற்று குமரி அனந்தனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    பின்னர் திருநாவுக்கரசர், நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தாமிரம் கிடைப்பது இல்லை என அமைச்சர் தங்கமணி கூறி இருப்பது, மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பது போல் உள்ளது. இதற்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கூடாது. தாமிரம் போன்ற பொருட்களை வாங்க அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இதை காரணம் காட்டி மின்தடை ஏற்படும் சூழ்நிலையையும் ஏற்படுத்தக்கூடாது. மின் துறை அமைச்சரின் பேச்சு, மக்களின் குரலாக இல்லாமல் ஸ்டெர்லைட்டின் குரலாக இருப்பது கண்டனத்துக்குரியது.

    மேட்டூர் அணையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்க முடியாது என்று முதல்-அமைச்சர் கூறி இருக்கிறார். தண்ணீர் திறந்துவிடவில்லை என்றால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதால் தண்ணீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    நீட் தேர்வு காரணமாக தொடரும் மாணவிகள் தற்கொலை சம்பவங்கள் வேதனையை தருகிறது. பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றுவிட்டு நீட் தேர்வில் தோல்வி அடைவதால் அவர்களின் டாக்டராகும் கனவு தகர்ந்து விடுகிறது.

    மாணவர்களின் நலனை அரசு புறக்கணித்துவிட்டது. இதற்காக பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தக்கூடாது. உயிரை மாய்த்துக்கொள்வதால் இதற்கு தீர்வு ஏற்படாது. தற்கொலை செய்வதை மாணவ-மாணவிகள் தவிர்க்க வேண்டும்.

    தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படித்துவிட்டு, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் கேள்விகள் கேட்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இன்னும் சில காலத்துக்கு நீட் தேர்வை தள்ளி வைக்க மத்திய அரசிடம், தமிழக அரசு வற்புறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×