search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சார இணைப்பு எண்"

    • இதுவரை சுமார் 3 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்து உள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
    • ஆதார் இணைக்கும் வரை நுகர்வோர் ஆஃப்லைன், ஆன்லைன் முறைகள் மூலம் பணம் செலுத்த முடியாது.

    தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி அளவுக்கு மின் இணைப்புகள் உள்ளன. இதில் வீட்டு மின் இணைப்புகள் 2 கோடியே 30 லட்சம் ஆகும். இது தவிர 10 லட்சம் குடிசை மின் இணைப்புகள், 23 லட்சம் விவசாய மின் இணைப்புகள், 1 லட்சத்து 60 ஆயிரம் விசைத்தறி மின் இணைப்புகள் உள்ளன.

    இந்த 4 வகையான மின் இணைப்புகளில் வீட்டு உபயோக மின் இணைப்புக்கும், விசைத்தறி மின் இணைப்புக்கும் 100 யூனிட் மின்சாரம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

    மானியம் பெறும் பயன்பட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என்று மின்வாரியம் கடந்த 16ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

    அதன்படி மின்வாரிய இணையதளம், மின்வாரிய செயலி, கூகுள் பே, போன் பே செயலிகள் மூலம் மின் கட்டணத்தை செலுத்தும் பொதுமக்கள் பலர் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.

    மின் கட்டணம் செலுத்தும் ஒவ்வொரு அலுவலகத்திலும் கூடுதலாக ஒரு பணியாளர் நியமிக்கப்பட்டு ஆதார் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் அட்டையின் நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போதே ஆதார் நகலை கொடுத்தால் உடனே இணைத்து தருகிறார்கள்.

    இப்போது மின் வாரிய அலுவலகங்களில் கூட்டம் அதிகம் வருவதை கருத்தில் கொண்டு ஆதாரை இணைக்க மேலும் 2 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. அதாவது மின் கட்டணம் செலுத்த நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாளில் இருந்து 2 நாட்களுக்குள் ஆதாரை இணைக்க வேண்டும்.

    இது தொடர்பாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வருவாய் பிரிவு தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் மலர்விழி அனைத்து கண்காணிப்பு பொறியாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதில் கூறி இருப்பதாவது:-

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து அதை சரி பார்த்த பிறகே இணைய வழியிலும், நேரடியாகவும் மின் கட்டணத்தை வசூலிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பகுதியிலும் மின் கட்டணம் செலுத்த நிர்ணயிக்கப்பட்ட நவம்பர் 24 முதல் 30ம் தேதி வரை இறுதி நாள் உள்ள தாழ்வழுத்த பிரிவு மின் நுகர்வோர் அனைவருக்கும் 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்க வேண்டும்.

    உதாரணமாக ஒரு நுகர்வோருக்கு நவம்பர் 28ம் தேதி மின் கட்டணம் செலுத்துவதற்கு இறுதி நாள் என்றால் அவருக்கு நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும். ஆதாரை இணைக்காமல் உள்ள நுகர்வோருக்கு மட்டுமே இந்த அவகாசம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

    அரசின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் தங்களது வீட்டு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதனால் மின்வாரிய அலுவலகங்கள், இண்டெர் நெட் மையங்களில் வழக்கத்தை விட கூடுதலாக மக்கள் கூட்டம் காணப்படுகிறது.

    அடுக்குமாடி குடியிருப்புகளை பொறுத்தவரை பொது பயன்பாட்டு பகுதிகளில் உள்ள காமன் வராண்டா, மொட்டை மாடி, காம்பவுண்டு பகுதிகளுக்குள் உள்ள மின் விளக்குகளுக்காக தனியாக மீட்டர் வைத்திருந்தால் அது பொதுபயன்பாட்டில்தான் வரும். மானியம் இல்லாமல் முழு தொகையையும் செலுத்துவதால் அதற்கு ஆதாரை இணைக்க தேவை இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

    ×