search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாறுவோம் மாற்றுவோம்"

    தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடும் பலரும் தமிழ் மொழியில் கையெழுத்துப் போடுவதில்லை, இது அதிர்ச்சியான உண்மை என்று நடிகர் ஆரி கூறினார். #Aari #MaaruvomMaatruvom
    நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தவர் ஆரி. இவர் தனது 'மாறுவோம் மாற்றுவோம்' அறக்கட்டளை மூலம் இயற்கை விவசாயம், தமிழ் வளர்ச்சி என பல்வேறு சமூக நலன் சார்ந்த வி‌ஷயங்களிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் அளித்த பேட்டியில் இருந்து...

    சினிமா ஆசையில் சென்னை வந்த எனக்கு, எல்லோருக்கும் போல ஆரம்பத்தில் ஏமாற்றம் தான் கிடைத்தது. நம்முடைய கனவுகளுக்கு மிகப்பெரிய எதிரியாக இருப்பது சாப்பாடு, தங்குமிடம் இரண்டும் தான். எனவே, பாடி ஸ்கல்ப்டிங் பயின்று, மற்றவர்களுக்குப் பயிற்சியளிக்க ஆரம்பித்தேன். அப்படிக் கிடைத்த படம் தான் ஆட்டோகிராப். படங்களில் பணியாற்றும்போது தான் நடிப்பு என்பது கஷ்டமான வி‌ஷயம் என்பது புரிந்தது. நடிப்பை கற்றுக் கொள்வதற்காக பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன். அது முடிந்ததும், நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தேன். ஆறேழு வருடங்கள் இப்படியே சென்றதும், இனிமேல் சினிமாவில் நடிக்கலாம் என்று தைரியம் வந்தது. வாய்ப்பு தேடத் தொடங்கினேன். என்னுடைய முதல் படம் ஆடும் கூத்து. தேசிய விருது வாங்கிய அந்தப் படத்தில் சேரன், நான் இருவரும் கதாநாயகர்கள். எனக்கு ஜோடியாக நவ்யா நாயர் நடித்திருந்தார். ஆனால், அந்தப் படம் திரைக்கு வரவே இல்லை. பிறகு, ரெட்டைச்சுழி, மாலைப் பொழுதின் மயக்கத்திலே ஆகிய படங்களில் நடித்தேன். பின்னர் நெடுஞ்சாலை, மாயா படங்கள் அடையாளங்களாக அமைந்தன.



    தாய்மொழி கையெழுத்தை கையில் எடுத்தது ஏன்?

    என் தாய் மொழியில் கையெழுத்து போடுவதில் பெருமைப்படுகிறேன். தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடும் பலரும் தமிழ் மொழியில் கையெழுத்துப் போடுவதில்லை. இது அதிர்ச்சியான உண்மை. நானும் இந்த விழாவுக்காக பலரை நான் அழைத்த போது இந்த உண்மை தெரிய வந்தது. தங்களை முழுமையாக மாற்றிக் கொண்டு விழாவுக்கு வருவதாக அவர்கள் கூறினர். தமிழில் கையெழுத்து உலக மற்றும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி அமெரிக்காவில் டல்லாஸ் நகரில் பெட்னா விழாவில் நடைபெற்றது. அதனை ஒருங்கிணைத்தேன்.

    நடிப்பை விட்டு விட்டு உனக்கேன் இந்த வேண்டாத வேலை என சிலர் எனக்கு அறிவுரை கூறினர். இருப்பினும் இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் இதில் ஈடுபட்டுள்ளேன். அடுத்த ஆண்டு வள்ளுவர் கோட்டத்தில் இருந்து கன்னியாகுமரி வள்ளுவர் சிலை வரை இது தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடத்த உள்ளோம்.

    நடிப்பு என் தொழில். அது ஒரு பக்கம் போயிட்டு தான் இருக்கு. எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்னு ஒரு படம் பண்றேன். வி.இசட்.துரை இயக்கத்தில் ஒரு படம் என மொத்தம் நான்கு படங்கள் பண்ணிட்டு தான் இருக்கேன். அதுலயும் நிச்சயம் சாதிப்பேன். #Aari #MaaruvomMaatruvom

    ×