search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநகர போக்குவரத்து"

    • மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 3 ஆயிரத்து 233 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • சில டிரைவர்கள் பஸ் நிறுத்தத்தை தாண்டி பஸ்சை நிறுத்துவதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.

    சென்னை :

    சென்னையில் 765 வழித்தடங்களில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 3 ஆயிரத்து 233 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சாதாரண பஸ்கள் 1,559, பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டும் பயணிக்கும் பஸ்கள் 210, டீலக்ஸ் பஸ்கள் 1,301, எக்ஸ்பிரஸ் பஸ்கள் 180, குளிர்சாதன பஸ்கள் 48 அடங்கும்.

    மாநகர பஸ்களில் அன்றாடம் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டாலும், பஸ் நிறுத்தங்கள் மாநகராட்சி நிதியின் மூலம் நிறுவப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

    'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள பஸ் நிறுத்தங்கள் நவீன மயமாக்கப்பட்டன. இந்த பஸ் நிலையங்களில் தனியார் விளம்பரங்கள் மூலம் மாநகராட்சிக்கு வருவாய் வருகிறது. இந்த நிலையில் பெரும்பாலான பஸ் நிறுத்தங்களில் விளம்பர பதாகைகள் சேதம் அடைந்துள்ளன. அரசியல் கட்சி விளம்பரங்கள், கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களும் ஒட்டப்படுகின்றன. இதனால் அழகுற காட்சி அளிக்கும் வகையில் அமைக்கப்பட்ட பஸ் நிலையங்கள் அலங்கோலமாக காட்சி அளிக்கின்றன.

    பஸ் நிறுத்தங்களை இரவு நேரங்களில் பார் போன்று மதுபிரியர்கள் பயன்படுத்துகின்றனர். சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது என பஸ் நிறுத்தங்களை அசுத்தம் செய்கின்றனர். காலி மதுபாட்டில்களை அங்கேயே போட்டு விடுவதால், கண்ணாடி துகள்கள் பயணிகளின் காலை பதம் பார்க்கும் வகையில் அச்சுறுத்துகிறது. பஸ் நிறுத்தங்களை காலை வேளையில் தூய்மை பணியாளர்கள் வேதனையுடன் சுத்தம் செய்வதை காண முடிகிறது.

    எனவே இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் பஸ் நிறுத்தங்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை போலீஸ் துறையின் 3-வது கண் என்றழைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்களை பஸ் நிறுத்தங்கள் அருகே பொருத்தினால் இரவு நேரத்தில் மதுபிரியர்கள் பஸ் நிலையங்களில் முகாமிடுவதை கண்காணித்து தடுக்க முடியும் என்பது பயணிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

    இந்த பிரச்சினை ஒருபுறம் இருக்க, சென்னையில் உள்ள ஒரு சில பஸ் நிறுத்தங்களின் மேற்கூரை ஓட்டை, உடைசலாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக சென்னை அண்ணா சாலையில் உள்ள சிம்சன் பஸ் நிறுத்தம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. 'டியூப் லைட்டு'கள் அந்தரத்தில் தொங்குகின்றன.

    சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தின் மேற்கூரையில் உள்ள ஓட்டையை மறைக்க மரக்கட்டை வைக்கப்பட்டுள்ளது. இந்த மரக்கட்டை கீழே விழுந்தால் பயணிகள் மண்டை உடைந்து போகும் ஆபத்து உள்ளது.

    மேலும் சேதம் அடைந்த பஸ் நிறுத்தங்களில் உச்சி வெயில் உள்ளே புகுந்து பயணிகள் மண்டை காய்கிறது. மழை பெய்தாலும் தண்ணீர் உள்ளே புகுந்து பயணிகளை குளிப்பாட்டி விடுகிறது. இதனால் இந்த பஸ் நிறுத்தங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மழையிலும், வெயிலிலும் அவதியுறும் நிலை உள்ளது.

    வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் (அக்டோபர்) தொடங்க இருக்கிறது. எனவே சென்னையில் உள்ள அனைத்து பஸ் நிறுத்தங்களின் மேற்கூரை தரமாக இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்து, சேதம் அடைந்த மேற்கூரைகளை சீரமைப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    பஸ் நிறுத்தம் இங்கே? நிறுத்துவது எங்கே?

    சென்னையில் 'பீக் அவர்' எனப்படும் காலை மற்றும் மாலை வேளையில் மாநகர பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் நிலைமை கரும்பு எந்திரத்தில் சிக்கிய சக்கை போன்றுதான் இருக்கிறது. வீட்டில் அவசர அவசரமாக கிளம்பி, பஸ்சில் கூட்ட நெரிசலில் சிக்கி போகும் இடத்துக்கு செல்வதற்குள் கடும் இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலையில் ஒரு சில கண்டக்டர்கள் கோபத்தில் சூடான வார்த்தைகளை பயன்படுத்துவது பயணிகளுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று இருக்கிறது.

    பெரும்பாலான டிரைவர்கள் பஸ் நிறுத்தத்தில் பஸ்களை சரியாக நிறுத்தினாலும் ஒரு சில டிரைவர்கள் பஸ் நிறுத்தத்தை தாண்டி பஸ்சை நிறுத்துவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் அந்த பஸ்சின் பின்னால் பயணிகள் ஓடிச்சென்று ஏறும் நிலை இருக்கிறது. மாநகர பஸ்களில் உள்ள இத்தகைய இன்னல்களை போக்குவதற்கு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த பயணிகளின் வலியுறுத்தலாக உள்ளது.

    கல்லூரி மாணவர் ஆர்.தினேஷ்:- டிரைவர்களும், கண்டக்டர்களும் தங்கள் கடமைகளை முறையாக செய்தாலே போதும் எந்த பிரச்சினையும் இருக்காது. காதுகேளாதோர் பயணிக்கும்போது, எதிர்பாராதவிதமாக அவர்கள் இறங்கவேண்டிய நிறுத்தத்தை மறந்து போனாலோ அல்லது வேறு ஏதாவது தேவைக்காகவோ பஸ்களை நிறுத்த சொன்னாலோ முகம் சுழிக்கிறார்கள். ஆத்திரமடைந்து திட்டுகிறார்கள். அவர்களும் மனிதர்கள்தானே... எனவே டிரைவர்களும், கண்டக்டர்களும் பஸ்களை அந்தந்த நிறுத்தத்தில் சரியாக நிறுத்த நடவடிக்கை எடுப்பதுடன், மாற்றுத்திறனாளிகளிடம் மனிதநேயத்துடன் அணுக வேண்டும்.

    கல்லூரி மாணவி சுமித்ரா:- பஸ்கள் இங்கு நிற்கும் என்ற எதிர்பார்ப்பில் பயணிகள் பஸ் நிறுத்தத்தில் நின்றால் சில அடி தூரம் தாண்டி சென்று நிறுத்தினால், எல்லா பயணிகளும் எப்படி ஏற முடியும். இதனால் வெளியூரில் இருந்து புதிதாக வரும் பயணிகள் சிரமம் அடைகின்றனர். வயதான பயணிகளும் தவிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்கள் முறையாக நின்று செல்ல வேண்டும்.

    கல்லூரி மாணவி மோகனபிரியா:- டிக்கெட் வாங்காதோரை வாங்க வைக்க மட்டும் பஸ்களை ஆங்காங்கே நிறுத்தி டிக்கெட் 'ஸ்டேஜை' சரி செய்கிறார்கள். ஆனால் பஸ் நிறுத்தங்களில் பஸ்களை சரியாக நிறுத்துவதில் மட்டும் சுணக்கம் காட்டுகிறார்கள். இந்த காட்சியை நானே பல தடவை பார்த்திருக்கிறேன். ஓரிரு பயணிகள் இருந்தாலும் பஸ்களை நிறுத்த மாட்டார்கள். இதனால் பயணிகள் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்பது தெரியாதா? கர்ப்பிணிகள், முதியோர் போன்றவர்களெல்லாம் என்ன செய்வார்கள்?.

    டிரைவர்கள் விளக்கம்

    பயணிகளின் குறைகள் குறித்து டிரைவர்கள் சிலரிடம் கேட்ட போது, 'மாநகர பஸ் நிறுத்தங்களை ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் ஆக்கிரமிக்கின்றன. அந்த வாகனங்கள் மீது மோதி விடக் கூடாது என்பதற்காகவே சில நேரங்களில் பஸ் நிறுத்தத்தை தாண்டி நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. பயணிகளை சிரமத்துக்கு உள்ளாக்க வேண்டும் என்ற உள்நோக்கம் எதுவும் கிடையாது' என்று விளக்கமளித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த ஆண்டுக்கு முன்பு வரை மாநகர பஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக இருந்தது.
    • பெண்கள் இலவச பயணம் செய்யும் பஸ்களில் முன்பக்க கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும்.

    சென்னை:

    சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். அதன்பிறகு மாநகர போக்குவரத்து கழகங்களில் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    கடந்த ஆண்டுக்கு முன்பு வரை மாநகர பஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக இருந்தது. அது தற்போது 60 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். கடந்த 1 வருடத்தில் மட்டும் 132 கோடிக்கும் அதிகமானோர் இந்த திட்டத்தில் பயன் அடைந்துள்ளனர். இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தமிழகத்தில் உள்ள போக்குவரத்து கழகங்களுக்கு அரசு ரூ.1600 கோடியை மானியமாக அளித்துள்ளது.

    பெண்கள் இலவச பயணம் செய்யும் பஸ்களில் முன்பக்க கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். அதை பார்த்தே பெண்கள் அதில் ஏறி செல்வது வழக்கம். ஆனால் சில பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் உள்ளது. சில ஸ்டிக்கர்களை தூரத்தில் நின்று படிக்க முடியாத நிலை உள்ளது.

    இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மாநகர போக்குவரத்து கழகம் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண பஸ்களை 'பிங்க்' நிறத்தில் மாற்றியுள்ளது. இந்த பஸ்கள் அறிமுகத்தின் மூலம் பெண்கள் குழப்பம் இன்றி தூரத்தில் இருந்தே பஸ்களை பார்த்து அதில் ஏறி செல்லலாம்.

    மாநகர போக்குவரத்து கழகத்தின் இந்த 'பிங்க்' நிற பஸ்கள் அடுத்த வாரம் சில வழித்தடங்களில் சோதனை ஓட்டத்தை தொடங்குகிறது. அதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அனைத்து இடங்களுக்கும் அவை விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 3,300 பஸ் சேவைகளில்பா தி சாதாரண பஸ் சேவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×