search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு"

    மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கைதான தலைமை ஆசிரியரை சஸ்பெண்டு செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

    நெல்லை:

    நெல்லை டவுனில் பாரதியார் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஜூலியட் ரவிச்சந்திரன் (வயது 48) என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் 8, 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவிகள், தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் நெல்லை மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தனர்.

    அவர் அதுகுறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேவ் ஆனந்த்துக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அவருடைய தலைமையில் நெல்லை கல்வி மாவட்ட அலுவலர் ரேணுகா, குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள் கார்த்திகா, பாலமுருகன், பரிமளா ஆகியோர் கொண்ட குழுவினர் அந்த பள்ளிக் கூடத்தில் விசாரணை நடத்தினர். 

    மாணவிகளிடமும், ஆசிரியர்களிடமும் தனித் தனியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் தலைமை ஆசிரியர் ஜூலியட் ரவிச்சந்திரன், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி ஆன‌து. இதுபற்றிய தகவல் கலெக்டர் ஷில்பாவிடமும் தெரிவிக்கப்பட்டது. அவருடைய உத்தரவின் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேவ்ஆனந்த் நெல்லை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி வழக்குப்பதிவு செய்து, ஜூலியட் ரவிச்சந்திரனை கைது செய்தார். அவர் மீது ‘போக்சோ’ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் ஜூலியட் ரவிச்சந்திரனை போலீசார் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இதனிடையே கைதான தலைமை ஆசிரியர் ஜூலியட் ரவிச்சந்திரனை ‘சஸ்பெண்டு’ செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் உத்தரவிட்டார்.

    ×