search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி சோபியா"

    சோபியாவை தாக்க மர்ம மனிதர்கள் திட்டமிட்டுள்ள‌தாக தெரிய வந்துள்ளது. எனவே அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வக்கீல் ராமச்சந்திரன் கூறினார். #Sophia
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி லூயிஸ் சோபியா. இவர் கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் தனது பெற்றோருடன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தார். அப்போது அதே விமானத்தில் பா.ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் வந்தார்.

    அப்போது மாணவி சோபியா பா.ஜனதாவுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினார். இதனால் அவருக்கும், தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.



    இதுபற்றி தமிழிசை சவுந்தரராஜன் புதுக்கோட்டை போலீசில் அளித்த புகாரின் பேரில் மாணவி சோபியா கைது செய்யப்பட்டார். கைதான சோபியாவுக்கு நேற்று தூத்துக்குடி நடுவர் நீதிமன்றம் நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கியது. இதனிடையே சோபியாவின் தந்தை சாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி விமான நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீது புதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்து உள்ளேன். இதுவரை அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க‌வில்லை. சிவில் ஏவியேசன் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தாலும், அதனை சட்டப்பூர்வமாக சந்திப்போம்.

    எனது மகளின் பாஸ்போர்ட்டை முடக்கவும், அவருடைய எதிர்காலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தவும் முயற்சி செய்கிறார்கள். விமானத்தில் கோ‌ஷம் எழுப்ப வேண்டும் என்று எங்களுக்கு முன்கூட்டியே எதுவும் திட்டம் இல்லை. எங்களுக்கு எந்த அரசியல் கட்சி ஆதரவும் கிடையாது. நாங்கள் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் இல்லை. எங்களை பா.ஜனதா தொண்டர்களும், தமிழிசை சவுந்தரராஜனும் மிரட்டியதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விமானத்தில் எதற்காக கோ‌ஷம் போட்டார் என்பதை மகளைத்தான் கேட்க வேண்டும். டுவிட்டரில் முன்கூட்டியே பதிவு செய்து இருப்பதாக கூறுகிறார்கள். தூத்துக்குடியில் உள்ள எல்லோரும் ஸ்டெர்லைட்டால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதே போன்று மீத்தேன் வாயு, 8 வழிச்சாலையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சரக்கு மற்றும் சேவை வரியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதனை பதிவு செய்து உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவியின் வக்கீல் ராமச்சந்திரன் கூறுகையில், “சோபியாவை சில மர்ம மனிதர்கள் கண்காணிப்பது தெரிய வந்துள்ளது. அந்த மர்ம மனிதர்கள் சோபியாவை தாக்க திட்டமிட்டுள்ள‌தாக தெரிய வந்துள்ளது. எனவே அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    அவருடைய உயிருக்கு எந்த தீங்கும் வராமல் பாதுகாக்க வேண்டிய கடமை போலீசுக்கு உள்ளது. அவருடைய பாஸ்போர்ட்டை ஒப்படையுங்கள் என்று புதுக்கோட்டை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். ஆளும் பா.ஜனதா கட்சியினரை சந்தோசப்படுத்துவதற்காக போலீசார் வேலை பார்த்து வருகின்றனர். அதனை விடுத்து அவருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றார்.

    இதனிடையே சோபியாவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சில அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா கூறியதாவது:-

    தூத்துக்குடி விமான நிலையத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சோபியாவின் தந்தை அளித்த புகார் குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. தேவைப்பட்டால் வழக்குப் பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். வழக்கின் விசாரணை நடந்துவரும் நிலையில் அவசியம் ஏற்பட்டாலோ அல்லது அவர்கள் பாதுகாப்பு கேட்டாலோ சோபியா மற்றும் அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Sophia

    தூத்துக்குடி விமான நிலையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவி மீதான வழக்கை வாபஸ் பெற மாட்டேன் என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #TamilisaiSoundararajan #Sophia
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடிக்கு விமானத்தில் நான் சென்றேன். 3-வது இருக்கையில் அமர்ந்து இருந்தேன். விமானம் தரையிறங்கிய போது 8-வது இருக்கையில் இருந்த மாணவி சோபியா என்னை நோக்கி வந்து கைகளை உயர்த்தி பா.ஜனதா கட்சியின் பாசிச ஆட்சி ஒழிக என்று சத்தம் போட்டார். நாகரிகம் கருதி விமானத்தில் நான் எதுவும் பேசவில்லை.

    விமான நிலைய வரவேற்பு அறைக்கு வந்தபோது விமானத்தில் கோஷம் போடுவது சரியா? என்று கேட்டேன். எனக்கு பேச்சுரிமை உள்ளது, அப்படி தான் பேசுவேன் என்று அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.



    மறுபடியும், மறுபடியும் கூறியதால் அவரை பின்னால் இருந்து ஏதாவது ஒரு இயக்கம் இயக்கி இருக்கலாம் சந்தேகம் ஏற்பட்டது. அவர் நடந்துகொண்ட முறை பற்றி புகார் செய்தேன். சோபியா முகநூலில் பார்த்தால் எப்படிப்பட்ட பின்புலத்தில் இருந்து வந்துள்ளார் என தெரிந்துவிடும். பா.ஜனதாவை எதிர்த்து கோஷம் போட்டால் எல்லாரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நினைக்கிறார்கள்.

    தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். என்னுடைய இடத்தில் வேறு யாராக இருந்தாலும் மோசமாக நடந்து இருப்பார்கள். எனக்கு சமூக அக்கறை உள்ளது. இதனால் விமானத்தில் எந்த ஒரு வார்த்தையும் பேசவில்லை. நான் செய்தது சரியானது.

    போலீசார் அவருடைய பின்புலத்தை விசாரிக்கட்டும். தவறு இல்லை என்றால் விடுவிக்கட்டும். தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும்.

    இந்த பிரச்சினை தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் கருத்தை கடுமையாக கண்டிக்கிறேன். அரசியல் கட்சியையும், தலைவரையும் எதிர்த்து கோஷம் போட்டால் உங்களுக்கு மகிழ்ச்சியா?. மெட்ரோ ரெயிலில் அடித்தவர் நீங்கள். அப்போது கருத்து சுதந்திரம் எங்கே சென்றது.

    கட்சிக்கும், எனக்கும் எதிராக கோஷம் போட்டு இருக்கிறார்கள். சோபியா தரப்பில் எனக்கு எதிராக உடனே புகார் செய்திருக்க வேண்டும். மாலையில் தான் தந்திருக்கிறார்கள். நான் விமான நிலைய அதிகாரிகளிடம் தான் புகார் செய்தேன். அவர்கள் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள்.

    எனக்கு விமானத்தில் அமைதியாக பயணம் செய்ய உரிமை இருக்கிறதா? இல்லையா?. மாணவி மீதான வழக்கை வாபஸ் பெற மாட்டேன். பேச்சுரிமை என்றால் வீட்டிற்கு வந்து சண்டை போடுவார்களா?. மேடை போட்டு பேசலாம். பேச்சுரிமைக்கு ஒரு தளம் உள்ளது. எதிர்க்கட்சி தலைவரை எதிர்த்து கோஷம் போட்டால் சும்மா இருப்பார்களா?.

    இவ்வாறு அவர் கூறினார்.  #TamilisaiSoundararajan #Sophia

    மாணவி சோபியா கைது செய்யப்பட்ட விவகாரத்தால் நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் திவாரி கூறியுள்ளார். #Sophia #ManishTewari
    புதுடெல்லி:

    தூத்துக்குடி விமானத்தில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக கோஷமிட்டு, அந்தக் கட்சியின் தமிழக தலைவர் தமிழிசையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவி சோபியா கைது செய்யப்பட்ட விவகாரம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இதை காங்கிரஸ் கட்சி, நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை இருப்பதாக கூறி கடுமையாக சாடியது.



    இதுபற்றி அந்த கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் திவாரி, டெல்லியில் நேற்று கருத்து தெரிவிக்கையில், “இது அறிவிக்கப்படாத அவசர நிலை இல்லை என்றால், இந்த சூழ்நிலையை நீங்கள் என்னவென்று அடையாளப்படுத்துவீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.

    மேலும் அவர் கூறும்போது, “தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் நடந்து இருப்பது, கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்தும் உரிமை மீதான தாக்குதல் மட்டுமல்ல; நமது அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதலும் மட்டுமல்ல. இது இந்திய அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல்; ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்” என்றும் குறிப்பிட்டார்.   #Sophia #ManishTewari
    தமிழிசை சவுந்தரராஜனைப் பார்த்து பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட சோபியா கைது செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு ஆதரவாக தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #BJP #TamilisaiSoundararajan #Sophia
    தூத்துக்குடி:

    நெல்லை மாவட்டம் தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். விமானத்தில் 3-வது இருக்கையில் அமர்ந்து அவர் பயணம் செய்தார்.

    அதே விமானத்தில் 8-வது இருக்கையில் கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தூத்துக்குடியை சேர்ந்த சோபியா (வயது 28) என்ற பெண் அமர்ந்திருந்தார். அப்போது சோபியா திடீரென பா.ஜனதா கட்சிக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினார். இதனால் விமானத்தில் பரபரப்பு நிலவியது.

    இதையடுத்து விமானம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தை அடைந்ததும் தமிழிசை சவுந்தரராஜன், சோபியாவிடம் கோ‌ஷம் எழுப்பியது தொடர்பாக கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    தமிழிசைக்கு ஆதரவாக அவருடன் வந்த பா.ஜனதா நிர்வாகிகளும் சேர்ந்து பேசியதால் பரபரப்பு உண்டானது. இதைத்தொடர்ந்து விமானத்தில் மாணவி கோ‌ஷம் எழுப்பியது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன், தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் மற்றும் சம்பந்தப்பட்ட விமான நிறுவன அலுவலகத்திலும் புகார் செய்தார்.

    புதுக்கோட்டை போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆராய்ச்சி மாணவி சோபியாவிடம் விசாரணை நடத்தினர். தமிழிசை சவுந்தரராஜன் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை மற்றும் போலீசார், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் (ஐ.பி.சி.290), பொது இடத்தில் அரசு, அரசு சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு எதிராக மக்களை கிளர்ந்து எழச்செய்யும் வகையில் பேசுதல் (ஐ.பி.சி.505(1)(பி), போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல் (75(1)(சி) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் மாணவி சோபியா மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

    பின்னர் அவரை தூத்துக்குடி 3வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தமிழ்செல்வி வீட்டுக்கு அழைத்து சென்று அவரது முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து சோபியாவை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவரை நெல்லை கொக்கிரகுளம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

    இதனிடையே தனக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு இருப்பதாக சோபியா தெரிவித்தார். இதனால் அவர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சோபியாவை இன்று காலை தூத்துக்குடியை சேர்ந்த வக்கீல்கள் சிலர் சந்தித்து பேசினர். அப்போது அவர்களுடன் ஜாமீன் மனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசித்தார்.

    கைதான சோபியா எம்.எஸ்.சி பட்டப்படிப்பு முடித்து உள்ளார். தொடர்ந்து கனடாவில் உள்ள மான்ட்ரியல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். நேற்று கனடாவில் இருந்து இந்தியா திரும்பிய மாணவி சோபியாவை அவருடைய பெற்றோர் சென்னையில் இருந்து ஊருக்கு அழைத்து வந்தபோது இந்த சம்பவம் நடந்து உள்ளது.

    இதனிடையே ஆராய்ச்சி மாணவி சோபியா கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் ஏராளமானோர் கலந்துகொண்டார்கள். சோபியாவை விடுதலை செய்யவேண்டும், சோபியாவை மிரட்டிய பா.ஜ.கவினர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள். #BJP #TamilisaiSoundararajan #Sophia
    ×