search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவி விஷம் குடிப்பு"

    கும்பகோணம் அருகே ஆக்கிரமிப்பு வீட்டுக்கு சீல் வைத்ததால் முன்னாள் கோவில் ஊழியர் மனைவி மற்றும் தாய் வி‌ஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த பந்தநல்லூரில் உள்ள பசுபதீஸ்வரரர் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் அங்குள்ள கோட்டை பகுதியில் அமைந்துள்ளது. இந்த இடங்களில் சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த ஆக்கிரமிப்பு இடங்களில் குடியிருப்பவர்களை அகற்றி வீடுகளுக்கு சீல் வைக்க இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் இளையராஜா தலைமையில் திருவிடைமருதூர் தாசில்தார் ராஜேஸ்வரி, துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் மற்றும் அதிகாரிகள் இன்று மதியம் அங்கு திடீர் என்று சென்றனர். அங்கு ஆக்கிரமித்து குடியிருந்து வரும் ராஜா என்பவர் வீட்டுக்கு சென்று பூட்டி சீல் வைக்க முயன்றனர்.

    அப்போது வீட்டில் இருந்த ராஜா அதிகாரிகளிடம் வீட்டை காலி செய்ய கால அவகாசம் கேட்டுள்ளார். ஆனால் அதிகாரிகள் பிடிவாதமாக மறுத்து அவரது வீட்டை பலகைகளால் அடைத்து சீல் வைத்து விட்டு சென்றனர்.

    இதனால் மனமுடைந்த ராஜாவின் மனைவி அபினேஸ்வரி (வயது35) மற்றும் ராஜாவின் தாய் சந்திரா(80) ஆகிய இருவரும் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தனர். உடனடியாக இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்ப கோணம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பசுபதீஸ்வரர் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த கீழமணக்குடி, ரங்கராஜபுரம் ஆகிய கோவில்களின் ஐம்பொன் சிலைகள் மாயமான வழக்கில் கடந்தாண்டு கைது செய்யப்பட்ட 10 பேரில் பந்தநல்லூர் கோவில் முன்னாள் தலைமை எழுத்தர் ராஜாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

    இதுகுறித்து ராஜா கூறுகையில், வருகிற 11-ந்தேதி சிலை மாயமானது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது. எனவே என்னை மிரட்டும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×