search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனநோயாளி"

    • திருச்சியில் ஆதரவின்றி சுற்றி திரியும் முதியவர்கள், மனநோயாளிகள் - அடைக்கலம் கிடைக்குமா? எதிர்பார்ப்பில் சமூக ஆர்வலர்கள்
    • முதியவர்கள் கால் போன போக்கில் நடந்து மாநகர பகுதிகளில் அடைக்கலமாகி ஆங்காங்கே கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு ஆதரவின்றி அழுக்கு ஆடையுடன் சுற்றி திருகிறார்கள்.

    திருச்சி,

    திருச்சி மாநகரில் சமீப காலமாக ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் மன நோயாளிகளின் நடமாட்டம் அதிகரித்து கொண்டு செல்கிறது. வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மனநோயாளிகளை ஈவு இரக்கமில்லாமல் அவர்களது உறவினர்கள் வாகனத்தில் அழைத்து வந்து நெடுஞ்சாலை பகுதிகளில் இறக்கி விட்டு செல்கிறார்கள்.

    பின்னர் அவர்கள் கால் போன போக்கில் நடந்து மாநகர பகுதிகளில் அடைக்கலமாகி ஆங்காங்கே கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு ஆதரவின்றி அழுக்கு ஆடையுடன் சுற்றி திருகிறார்கள். இதேபோன்று குழந்தைகளை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய முதியவர்களும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படும் வேதனையான நிகழ்வுகளும் நடக்கின்றன.

    திருச்சி மாநகரில் தற்போதைய நிலையில் 150 க்கு மேற்பட்ட முதியவர்கள் மனநலம் குன்றியவர்கள் சுற்றி திரிவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

    இது போன்ற சாலை ஓரங்களில் ஆதரவு இல்லாமல் சுற்றித் திரியும் மன நோயாளிகள் மற்றும் முதியவர்கள் மழை வெயில் மற்றும் கடும் குளிரில் உணவின்றி, மருத்துவ வாய்ப்பின்றி, உயிருக்கு பாதுகாப்பற்ற நிலையில் இருப்பவர்களை மீட்க ஹீ டு இந்தியா தொண்டு நிறுவனம் முன் வந்தது.

    திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிக ஆதரவற்றோர் நடமாட்டம் இருந்ததால் அந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு மேற்கண்ட தொண்டு நிறுவனம் சார்பில் மீட்பு பணிக்கு உதவ கோரிக்கை வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு மற்றும் போலீசார் ஆதரவற்றவர்களில் நேரில் சந்தித்து விசாரணை செய்தனர்.

    பின்னர் கங்காரு மனநல காப்பக பணியாளர்கள் மற்றும் ட்ரீம் இந்தியா நெட்வொர்க் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் சத்திரம் பஸ் நிலையம்,மெயின் கார்டு கேட் பகுதிகளில் சுற்றித்திரிந்த 6 மன நோயாளிகள், 3 முதியவர்கள் என மொத்தம் 8 பேரை ஒரே நாளில் மீட்டனர்.

    அதன் பின்னர் போலீசார் மீட்கப்பட்டவர்களை திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள கங்காரு மனநல காப்பகம் மற்றும் கங்காரு முதியோர் இல்லத்தில் ஒப்படைத்தனர்.

    இந்த இல்லத்தின் முதன்மை சேவகர் தீபா ராஜா கூறும் போது, மீட்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் உரிய மருத்துவ முதலுதவி மற்றும் உளவியல் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உறவினர்களை கண்டுபிடிக்கும் பணி அல்லது மறுவாழ்வு பணிக்கு சில வாரங்களில் இல்லத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

    மேற்கண்ட இல்லத்தின் இயக்குனர் ராஜா கூறும்போது,

    திருச்சி மாவட்டம் முழுவதும் இன்றைய தேதியில் 1,500 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்கள் மனநலம் குன்றியவர்கள் சாலைகளில் ஆதரவு இல்லாமல் சுற்றி திரிவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் அனைவரையும் மீட்க எங்களுக்கு ஆசைதான். ஆனால் இங்கு தங்க வைப்பதற்கான கட்டுமான வசதிகள் இல்லை. மத்திய,மாநில அரசுகள் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுத்து செல்கின்றன. அதேபோன்று இந்த ஆதரவற்ற மற்றும் முதியோர்களை பாதுகாக்கவும் திட்டங்களை தீட்ட வேண்டும். தாலுகா வாரியாக ஒரு முதியோர் இல்லத்தை கட்டுமானம் செய்து அதனை முறையாக தன்னார்வலர்களிடம் ஒப்படைத்து கண்காணித்தாலே இத்தனை பேர் சாலைகளில் ஆதரவு இல்லாமல் சுற்றுவது தடுக்கப்படும் என்றார்.

    சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    திருச்சி மாநகராட்சி நிர்வாகம் மாநகரை அழகுப்படுத்தும் திட்டங்களுக்கு பல கோடிகளை செலவழிக்கிறது. இதில் சொற்ப தொகையை ஆதரவற்றோரை மீட்டு பாதுகாக்க கொடுக்கலாம்.

    பொதுவாக இது போன்ற ஆதரவற்றோர் இல்லங்கள் மாவட்டத்தின் தலைநகரங்களில் மட்டுமே இயங்கி வருகின்றன.

    அதுவும் சொந்த கட்டிடங்கள் இல்லாமல் அதனை நடத்தும் தன்னார்வலர்கள் வாடகை உள்ளிட்ட செலவினங்களால் திக்கு முக்காடுகின்றனர்.

    இன்றைக்கும் பல அரசு கட்டிடங்கள் எந்த பயன்பாடும் இல்லாமல் இருக்கின்றது. இது போன்ற கட்டிடங்களை கூட ஆதரவற்றோர் காப்பகத்துக்கு கொடுக்க முடியும். ஒரு சில மனநலம் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் கூட இடையூறுகள் ஏற்படுகின்றன. இவற்றையெல்லாம் தவிர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×