search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மங்கோலியா"

    ஊழல் வழக்கில் விசாரணையை எதிர்நோக்கி காத்திருக்கும் மலேசியா முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மங்கோலியா நாட்டு மாடல் அழகி கொலை வழக்கிலும் சிக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #Malaysia #NajibRazak #AltantuyaShaariibu
    கோலாலம்பூர்:

    மலேசியாவில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், 60 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்த பேரிசன் நேஷனல் கூட்டணி (பி.என்.) தோல்வியைத் தழுவியது.

    எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நஜிப் ரசாக், பிரதமர் பதவியை இழந்தார். மேலும், 92 வயது மகாதீர் முகமது பிரதமர் ஆனார். அதைத் தொடர்ந்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் புரிந்து உள்ளதாக நஜிப் ரசாக் மீது எழுந்த குற்றச்சாட்டு சூடு பிடிக்கத்தொடங்கியது. அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.

    அவரது வீட்டிலும், அவருக்கு சொந்தமான இடங்களிலும் போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தினர். அங்கு இருந்து பண கட்டுகள், நகைகள் வைத்து நிரப்பப்பட்ட ஏராளமான கைப்பைகள் சிக்கின.

    இந்த நிலையில் அவர் வரும் செவ்வாய்க்கிழமை அன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி ஊழல் தடுப்பு அமைப்பு சம்மன் அனுப்பி உள்ளது. அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படுவாரா? என்பது தெரியவரும்.

    இந்நிலையில், மலேசியா நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட மங்கோலியா நாட்டு மாடல் அழகி கொலை வழக்கில் முன்னாள் பிரதமர் நசிப் ரசாக்கை தொடர்புப்படுத்தி, மறு விசாரணை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    மங்கோலியா நாட்டை சேர்ந்தவர் அல்டன்ட்டுயா ஷாரிபு. பிரபல மாடல் அழகி. இரு குழந்தைகளுக்கு தாயான இவருக்கும் முன்னாள் பிரதமர் நசிப் ரசாக்கின் நண்பரும் அரசியல் ஆலோசகருமான அப்துல் ரசாக் பகின்டா என்பவருக்கும் இடையே காதல் இருந்ததாக முன்னர் தகவல் வெளியாகின.

    இந்நிலையில், 18-10-2006 அன்று மலேசியாவில் அல்டன்ட்டுயா ஷாரிபு(28) கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். அப்போது நஜிப் ரசாக் பாதுகாப்புத்துறை மந்திரியாகவும், துணை பிரதமராகவும் பதவி வகித்து வந்தார்.

    கடந்த 2002-ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் இருந்து மலேசியாவுக்கு இரு நீர்மூழ்கி கப்பல்களை வாங்கிய பேரத்தில் நடைபெற்ற ஊழலில் அப்துல் ரசாக் பகின்டாவுக்கும், அல்டன்ட்டுயா ஷாரிபுவுக்கும் பங்கிருந்ததாகவும், இந்த விவகாரம் வெளியே கசியாமல் இருப்பதற்காக அல்டன்ட்டுயா கொல்லப்பட்டதாகவும் அப்போது தகவல்கள் வெளியாகின.

    இந்த கொலை தொடர்பாக அப்துல் ரசாக் பகின்டா மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஆனால், கொலை செய்ய தூண்டியதான வழக்கில் இருந்து கடந்த 2008-ம் ஆண்டில் அவர் விடுவிக்கப்பட்டார்.

    இவ்வழக்கில் கைதாகி, மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இரு போலீசாரில் ஒருவர் மரண தண்டனைக்கு எதிரான அப்பீல் வழக்கில் ஜாமினில் வெளியே வந்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார். இவர்கள் இருவருமே நஜிப் ரசாக்கின் பாதுகாப்பு படையில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


    கொலை வழக்கில் கைதான போலீசார்

    மலேசியாவில் இருந்து தப்பியோடி ஆஸ்திரியா நாட்டுக்கு சென்ற போலீஸ்காரர் சிருல் அசார் உமர் என்பவர் அந்நாட்டு குடியுரிமைத்துறை அதிகாரிகளிடம் கடந்த 2015-ம் ஆண்டு பிடிபட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    மலேசிய அரசு தனக்கு பொது மன்னிப்பு அளித்தால் அல்டன்ட்டுயா ஷாரிபுவை கொல்லுமாறு தனக்கு கட்டளை பிறப்பித்த பெரும்புள்ளி யார்? என்பதை வெளிப்படையாக அறிவிக்கவும், கோர்ட்டில் வந்து வாக்குமூலம் அளிக்கவும் நான் தயாராக இருக்கிறேன் என சமீபத்தில் சிருல் அசார் உமர் குறிப்பிட்டிருந்தார்.

    தற்போது மலேசியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் பல்வேறு நாட்டு தலைவர்களும் புதிய பிரதமரும் மலேசியா நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவருமான மஹதிர் முகம்மதுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அவ்வகையில், நேற்று அவருக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்து வாழ்த்து கடிதம் அனுப்பிய மங்கோலியா நாட்டு அதிபர்
    பட்டுல்கா கல்ட்மா, இரு குழந்தைகளுக்கு தாயான தங்கள் நாட்டுப் பெண்ணும் மாடல் அழகியுமான அல்டன்ட்டுயா ஷாரிபு மலேசியாவில் கொல்லப்பட்ட விவகாரத்தை உங்களது கவனத்துக்கு கொண்டு வருவதன் மூலம் இதற்கான நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் மங்கோலியா நாட்டு அரசு இணையதளத்திலும் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், மலேசியா மன்னரின் பொது மன்னிப்பின்படி சிறையில் இருந்து விடுதலையான அன்வர் இப்ராகிம், அல்டன்ட்டுயா ஷாரிபு கொலை வழக்கில் முன்னர் முறையான, நியாயமான விசாரணை நடத்தப்படவில்லை. எனவே, தற்போது நஜிப் ரசாக் மற்றும் அவரது நண்பர் அப்துல் ரசாக் பகின்டா ஆகியோரையும் இணைத்து மறுவிசாரணையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    ஆஸ்திரியா நாட்டில் சிறைபட்டிருக்கும் சிருல் அசார் உமருக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு, அவரை மலேசியாவுக்கு அழைத்து வந்தால் மங்கோலியா மாடல் அழகி கொலை தொடர்பான மறுவிசாரணை சூடு பிடிக்கலாம். அப்போது, குற்றம்சாட்டப்படுபவர்கள் பட்டியலில் அப்துல் ரசாக் பகின்டா, நஜிப் ரசாக் ஆகியோரும் இணைக்கப்படலாம் என மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

    இதனால், ஏற்கனவே ஊழல் வழக்கில் விசாரணையை எதிர்நோக்கி காத்திருக்கும் மலேசியா முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மங்கோலியா நாட்டு மாடல் அழகி கொலை வழக்கிலும் சிக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  #Malaysia #NajibRazak #AltantuyaShaariibu
    ×