search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களை பிளவுபடுத்தும்"

    நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கமல்ஹாசன், “மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்“ என்று ஆவேசமாக பேசினார். #KamalaHassan #MakkalNeethiMaiyam
    திருச்செந்தூர்:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். இதையடுத்து அவர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக காலை 10 மணி அளவில் நெல்லை மாவட்டம் பணகுடி பஸ் நிலையம் அருகே அவர் திறந்த காரில் வந்தார். அவருக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சி நெல்லை மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் வள்ளியூர் வழியாக திசையன்விளைக்கு கமல்ஹாசன் காரில் சென்றார்.



    அப்போது அவர்பல இடங்களில் பேசினார்.

    பின்னர் திருச்செந்தூர் தேரடி திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    எனது நற்பணி இயக்கத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியாக மாற்றி செயல்பட்டு வருகிறோம். சென்னையில் வருகிற 25-ந் தேதியில் இருந்து மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நடக்கிறது. இதில் மக்கள் நீதி மய்யம் மற்றும் நற்பணி இயக்க அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும். நமது பாதை எப்போதோ முடிவாகி விட்டது. நமது கட்டமைப்பு குறித்து நேர்காணலில் தெரிவிக்கப்படும்.

    நான் சாதி, மதங்களை எதிர்ப்பதாக சிலர் கூறுகின்றனர். நான் மனிதர்களுக்கு இடையூறாக இருக்கும் எல்லா விஷயங்களையும் எதிர்த்து நிற்கிறேன். நான் சாதி, மதங் களுக்கு அப்பாற்பட்ட வன். நான் நேசிப்பது மனிதர்களை மட்டும்தான். அவர்களின் அன்புக்கு நான் தலை வணங்குகிறேன். இனி எனக்கு வழங்கப்பட்ட வேலை, எனது எஞ்சிய வாழ்நாட்களில் மக்களுக்கு பணி செய்வது மட்டும்தான். அதனை ஏற்கனவே தொலைக்காட்சியில் தெரிவித்து விட்டேன். அதனை பொதுமக்களிடம் நேரில் கூறுவதற்காக வந்துள்ளேன்.

    சில கட்சியினர் தேர்தல் வரும்போது மட்டுமே பல்வேறு ஊர்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள். ஆனால் நான் மகாத்மா காந்தி ‘பாரத தர்ஷன்’ சுற்றுப்பயணம் மேற்கொண்டதுபோன்று, சுற்றுப்பயணம் செய்கிறேன். நான் காந்தியை பார்த்தது கிடையாது. ஆனால் அவரது கொள்கைகளை பின்பற்றி வருகிறேன். மக்களை பிளவுபடுத்தும் வகையிலும், மக்களின் நன்மைக்கு தடையாக எது வந்தாலும், அதனை தகர்த்து எறிவோம்.

    நமது நாடு பல்வேறு பாரம்பரிய பண்பாடுகளைக் கொண்டது. நமது நிலையை மேம்படுத்தி கொள்ள நாம் குரல் கொடுக்க வேண்டும். தற்போது செல்போன்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ‘மய்யம் ஆப்‘பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது நமது கட்சியின் உறுப்பினர் அட்டை போன்றது. இது அகிம்சை ஆயுதம் ஆகும். அதனை நீங்கள் பயன்படுத்தி அரசு பொறுப்பில் உள்ளவர்களிடம் உங்களின் உரிமைகளை உரிமையுடன் கேட்கலாம்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் நகர்வு அதிகரித்து கொண்டே செல்கிறது. நமது கட்சியில் இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவ- மாணவிகள் அதிகளவில் சேருகின்றனர். அடுத்த மாதம் மாணவர்களின் எழுச்சி தெரியவரும். நான் கல்லூரிக்கு செல்வதை அரசு ஆணை பிறப்பித்து தடுத்து இருக்கிறார்கள். அது எனக்கு வியப்பாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.

    நான் பள்ளிப்பாடத்தைக்கூட சரியாக முடிக்கவில்லை. அதனால் எனக்கு கல்லூரியில் அனுமதி கிடைக்காது. இருந்தாலும் மாணவர்கள் பெருந்தன்மையாக அழைக்கிறார்கள். அதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அந்த தடைகளை எல்லாம் வென்று சரித்திரம் படைப்போம். அதற்கான முன்மொழிவுகளை சினிமா பாடல்களில் கூறி இருக்கிறோம். அதனை நடைமுறையில் காண்பிப்போம். எங்கள் இளைஞர்களின் பலம் என்ன என்பதை தெரியப்படுத்துவோம். நாளை நமதே என்று நம்புங்கள். மற்றவற்றை நாங்கள் பார்த்து கொள்வோம்.

    இவ்வாறு கமல்ஹாசன் ஆவேசமாக பேசினார்.  #KamalaHassan #MakkalNeethiMaiyam
    ×