search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி லாட்டரி சீட்டு"

    புதுவையில் ஒரு வீட்டில் போலி லாட்டரி சீட்டு தயாரித்து விற்பனை செய்த கும்பலை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தும் மறைமுகமாக பல்வேறு இடங்களில் 3 நம்பர் லாட்டரி விற்பனை நடைபெறுகிறது.

    ரகசிய தகவலின் அடிப்படையில் லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து வந்தாலும் போலீசாருக்கு டிமிக்கி காட்டி விட்டு செல்போன் மூலம் லாட்டரி விற்பனை நடந்து கொண்டுதான் உள்ளது.

    நேற்றைய தினம் முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன் கோவில் சந்திப்பில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்ற புருஷோத்தமன் மற்றும் சந்துரு ஆகிய 2 பேரையும் அதிரடி போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் சண்முகாபுரத்தில் ஒரு வீட்டில் போலி லாட்டரி சீட்டு தயாரித்து விற்பனை செய்வதாக அதிரடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அதிரடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்- இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், சந்தோஷ் மற்றும் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் ஆகியோர் நேற்று மாலை அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அரியாங் குப்பத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் வீட்டை வாடகைக்கு எடுத்து போலி லாட்டரி சீட்டுகளை தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து கிருஷ்ணனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் இதற்கு கோட்டக்குப்பத்தை சேர்ந்த பாபு என்பவர் மூளையாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.

    மேலும் பாபுவின் ஏஜெண்டாக திலாஸ்பேட்டையை சேர்ந்த ஸ்ரீராம் இருந்து வந்துள்ளார். இவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பெற்று கிருஷ்ணன், கோரி மேடு பகுதியை சேர்ந்த வேல்முருகன் ஆகியோர் விற்று பணத்தை ஸ்ரீராமிடம் கொடுத்து வந்தது தெரிய வந்தது.

    மேலும் போலி லாட்டரி சீட்டுகளை தயாரிக்க தூத்துக்குடியை சேர்ந்த ரிச்சர்டு, தேவகோட்டையை சேர்ந்த சிங்கமுகம் ஆகியோர் உதவி செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து கிருஷ்ணன், ஸ்ரீராம், வேல்முருகன், ரிச்சர்டு, சிங்கமுத்து ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டு விற்பனை பணம் ரூ.1 லட்சத்து 28 ஆயிரம், ரொக்க பணம், லாட்டரி சீட்டு தயாரிக்க பயன்படுத்திய 4 லேப்-டாப், 13 செல்போன்கள், டேப்- லெட், பிரிண்டிங் மெஷின்,4 டிக்கெட் மெஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    மேலும் போலி லாட்டரி விற்பனைக்கு மூளையாக செயல்பட்டு தலைமறைவாக உள்ள கோட்டக்குப்பத்தை சேர்ந்த பாபுவை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
    ×