search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி பிறப்பு சான்றிதழ்"

    • கதிரேசன் கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகளை கடத்தி விற்பனை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • வீ.கே.புதூர் தாசில்தார் அலுவலக சீல் வைத்து அங்கு பணிபுரியும் தாசில்தாரின் கையெழுத்தை போட்டுள்ளார்.

    தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீ.கே.புதூர் போலீஸ் நிலையம் எதிரே உள்ள தெருவில் வசித்து வருபவர் தினேஷ்(வயது 32).

    இவர் கடந்த 22-ந்தேதி தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், வீ.கே.புதூர் பகுதியை சேர்ந்த சிலர் குழந்தைகளை கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர். அதற்காக அரசு முத்திரையுடன் போலியாக பிறப்பு சான்றிதழ் தயாரித்து கொடுத்து வருகின்றனர் என்று கூறியிருந்தார்.

    இதுதொடர்பாக உடனடி விசாரணை மேற்கொள்ளுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவிட்டார். அதன்பேரில் சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதந்திரதேவி, வீ.கே.புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்னலெட்சுமி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    அதில் வீ.கே.புதூரை அடுத்த ராஜகோபாலபேரி அம்மன்கோவில் தெருவை சேர்ந்த கதிரேசன்(32), சுரண்டையை அடுத்த ஆனைகுளம் அருகே உள்ள அருணாசலபுரத்தை சேர்ந்த ஜானகி(49) ஆகியோர் போலி பிறப்பு சான்றிதழ் தயார் செய்து கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    கதிரேசன் கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகளை கடத்தி விற்பனை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக விற்பனை செய்பவர்களுக்கு கொடுப்பதற்காக போலியாக பிறப்பு சான்றிதழ்களை அச்சடித்து அதில் அரசு முத்திரையும் பதித்து அவரே கையெழுத்து போட்டுள்ளார்.

    சமீபத்தில் சென்னையை சேர்ந்த ஒரு தம்பதிக்கு சுரண்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி ஆண் குழந்தை பிறந்ததாக ஒரு சான்றிதழ் தயாரித்து உள்ளார்.

    அதற்கு வீ.கே.புதூர் தாசில்தார் அலுவலக சீல் வைத்து அங்கு பணிபுரியும் தாசில்தாரின் கையெழுத்தை போட்டுள்ளார்.

    குழந்தை பிறப்புக்கு சான்றிதழ் அளிக்க தாசில்தார் கையெழுத்து தேவையில்லை என்ற நிலையில் அதில் போடப்பட்டு இருந்த தாசில்தார் கையெழுத்தால் கதிரேசன் மாட்டிக்கொண்டார். இதற்காக ஜானகி புரோக்கராக செயல்பட்டுள்ளார்.

    இந்த சம்பவத்தில் ஈரோடு பழைய பூந்துறைரோட்டை சேர்ந்த கவிதா(39) என்பவருக்கும், வீ.கே.புதூரை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    அவர்கள் 2 பேரும் தலைமறைவாக உள்ளனர். போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×