search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் ஜூனியர் உலக கோப்பை"

    • ஜூனியர் டி20 உலக கோப்பையை இந்திய பெண்கள் அணி முதல் முறையாக வென்று வரலாறு படைத்தது.
    • சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பெண்கள் அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

    போட்செப்ஸ்ட்ரூம்:

    பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) கடந்த 14-ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் சூப்பர்சிக்ஸ் சுற்று முடிவில் இந்தியாவும், இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

    இரு அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்தது. டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் ஷபாலி வர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    முதலில் பேட் செய்த இங்கிலாந்து 17.1 ஓவரில் 68 ரன்னில் சுருண்டது. சுலப இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 14 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 69 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உலக கோப்பையை உச்சிமுகர்ந்தது.

    இந்தியாவின் திதாஸ் சாது ஆட்ட நாயகி விருதையும், இங்கிலாந்து கேப்டன் கிரேஸ் ஸ்கிரிவென்ஸ் தொடர் நாயகி விருதையும் (மொத்தம் 293 ரன் மற்றும் 9 விக்கெட்) பெற்றனர்.

    பெண்கள் கிரிக்கெட்டில் இந்திய இளம் படை அறிமுக உலக கோப்பை தொடரிலேயே பட்டம் வென்று சாதித்துள்ளது. அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

    இந்நிலையில், உலக கோப்பையை கைப்பற்றி தேசத்துக்கு மகத்தான பெருமை சேர்த்துள்ள இந்திய பெண்கள் அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா வாழ்த்து தெரிவித்தார். ஒட்டுமொத்த வீராங்கனைகள் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், வெற்றியைக் கொண்டாடும் வகையில் வரும் 1-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தியா, நியூசிலாந்து இடையிலான கடைசி டி20 போட்டியை நேரில் பார்க்க ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய ஜூனியர் அணிக்கு அழைப்பும் விடுத்துள்ளார்.

    • 19 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்றது.
    • சாம்பியன் பட்டம் வென்ற யு 19 இந்திய மகளிர் அணிக்கு உ.பி. முதல் மந்திரி வாழ்த்து தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலக கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

    இறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 17.1 ஓவரில் 68 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    அடுத்து களமிறங்கிய இந்திய அணி 14 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து வெற்றி பெற்றது. இதன்மூலம், இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 19 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்றது.

    சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற யு-19 இந்திய மகளிர் அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட்டை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்த திறமையான இளம் பெண்கள் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தினர். இந்த சாம்பியன்கள் நமது இளைஞர்களுக்கு, குறிப்பாக சிறுமிகளுக்கு ஒரு உத்வேகம். இந்த வரலாற்று வெற்றி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

    • பெண்கள் ஜூனியர் உலக கோப்பையின் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது.
    • இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்தை சந்திக்கிறது.

    கேப் டவுன்:

    19 வயதுக்கு உட்பட்ட முதலாவது மகளிர் டி20 உலக கோப்பை தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஷபாலி வர்மா தலையிலான இந்திய அணி கலந்து கொண்டு ஆடி வருகிறது.

    குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம், இலங்கை, அமெரிக்கா அணிகளும், குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், ஜிம்பாப்வே, ருவாண்டா அணிகளும், குரூப் சி பிரிவில் அயர்லாந்து, இந்தோனேசியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், குரூப் டி பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, யுஏஇ, ஸ்காட்லாந்து உள்ளிட்ட அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    இதிலிருந்து இந்தியா, ஆஸ்திரேலியா, வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, யுஏஇ, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், ருவாண்டா, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின.

    சூப்பர் 6 சுற்றின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், இரு குரூப்பிலும் முதல் இரு இடங்களைப் பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

    இந்நிலையில், இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்தை சந்திக்கிறது. இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதுகிறது.

    • முதலில் ஆடிய இலங்கை 59 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 7.2 ஓவரில் 60 ரன்கள் எடுத்து வென்றது.

    போட்செப்ஸ்ட்ரூம்:

    பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் லீக் சுற்று முடிவில் 12 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.

    2-வது சுற்றில் 12 அணிகள் சூப்பர் சிக்ஸ் என்ற அடிப்படையில் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. சூப்பர் சிக்சில் தனது இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை நேற்று எதிர்கொண்டது.

    முதலில் பேட் செய்த இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 59 ரன்கள் மட்டுமே எடுத்தது. விஷ்மி குணரத்னே அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் பர்ஷவி சோப்ரா 4 விக்கெட்டும், மன்னட் காஷ்யப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 60 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடம் களமிறங்கிய இந்தியா 7.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சவுமியா திவாரி 28 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    சூப்பர் சிக்ஸ் சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்தியா தோல்வி அடைந்தது.

    • பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.
    • இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட 16 அணிகள் இதில் பங்கேற்கின்றன.

    பெனோனி:

    ஐ.சி.சி. சார்பில் பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவின் பெனோனி, போட்செப்ஸ்ட்ரூம் ஆகிய நகரங்களில் நடத்தப்படுகிறது. இன்று தொடங்கி வரும் 29-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொள்கின்றன.

    இதில் களம் காணும் அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம், இலங்கை, அமெரிக்கா, 'பி' பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், ருவாண்டா, ஜிம்பாப்வே, 'சி' பிரிவில் அயர்லாந்து, இந்தோனேசியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், 'டி' பிரிவில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் மொத்தம் 12 அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெறும். இவை சூப்பர் சிக்சில் தலா 6 அணிகள் வீதம் பிரிக்கப்பட்டு மல்லுக்கட்டும். சூப்பர் சிக்சில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதியை எட்டும்.

    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் கோப்பையை வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருக்கின்றன.

    போட்டிக்கான இந்திய அணி வருமாறு: ஷபாலி வர்மா (கேப்டன்), சுவேதா செராவத், ரிச்சா கோஷ், திரிஷா, சவும்யா திவாரி, சோனியா மெந்தியா, ஹர்லி காலா, ஹிரிஷிதா பாசு, சோனம் யாதவ், மன்னத் காஷ்யப், அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா, திதாஸ் சாது, பலாக் நாஸ், ஷப்னம் ஷகில்.

    இந்திய அணி இன்று மாலை 5.15 மணிக்கு போட்டியை நடத்தும் ஒலுலே சியோ தலைமையிலான தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. 16-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 18-ந்தேதி ஸ்காட்லாந்தையும் எதிர்கொள்கிறது.

    அரையிறுதி ஆட்டங்கள் (ஜன.27) மற்றும் இறுதிப்போட்டி (ஜன.29) போட்செப்ஸ்ட்ரூமில் நடக்கிறது. இந்த 3 ஆட்டங்களுக்கும் மாற்று நாள் (ரிசர்வ் டே) உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    ×