search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெகாட்ரான் தொழிற்சாலை"

    • பெகாட்ரான் நிறுவனமானது, தைவான் நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய மின்னணு உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
    • கணினி, தகவல் தொடர்பு சாதனங்கள், நுகர்வோர் மின்னணுவியல் ஆகிய பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனம்.

    சென்னை:

    சென்னையை அடுத்த மறைமலைநகர் அருகே உள்ள மகேந்திரா சிட்டியில் பெகாட்ரான் என்ற தொழிற்சாலை ரூ.1,100 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டு உள்ளது.

    ஸ்மார்ட் போன் உதிரி பாகங்கள் தயாரிப்பது உள்ளிட்ட மின்னணு பொருட்கள் இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளன.

    இந்த தொழிற்சாலை திறப்பு விழா இன்று நடைபெற்றது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பெகட்ரான் தொழிற்சாலையை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தைவான் நாட்டினுடைய மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய பெகாட்ரான் நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வந்து ஸ்மார்ட்போன் உற்பத்தியைத் தொடங்குவதை வரவேற்கிறேன்.

    இதுபோன்ற பல நிறுவனங்களை நீங்கள் தொடங்க வேண்டும். இது போன்ற பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

    பெகாட்ரான் நிறுவனமானது, தைவான் நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய மின்னணு உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கிறது. கணினி, தகவல் தொடர்பு சாதனங்கள், நுகர்வோர் மின்னணுவியல் ஆகிய பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனம். உலகின் பல்வேறு பகுதிகளில் தன்னுடைய உற்பத்தி மையங்களைக் கொண்டுள்ளதன் மூலமாக, ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிற நிறுவனங்களிலும் ஒன்றாக இது விளங்கிக் கொண்டிருக்கிறது.

    உலகப் புகழ்பெற்ற நிறுவனத்திற்கு ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்து தரக்கூடிய ஒப்பந்த உற்பத்தியாளராகவும் இந்த நிறுவனம் விளங்கி வருகிறது. முன்னணி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்ள முன் வந்துள்ளது மட்டுமின்றி, தனது உற்பத்தித் திட்டத்தினை தமிழ்நாட்டில் நிறுவியது எனக்கு உள்ளபடியே இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது. உலகப் புகழ்பெற்ற பிராண்ட் ஒன்று தமிழகத்தில் தயாராவது என்பது தமிழ்நாட்டிற்குக் கிடைத்திருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பெருமை.

    தலைவர் கலைஞர் தமிழ்நாட்டினுடைய முதல்-அமைச்சராக இருந்த நேரத்தில், ஹுண்டாய், போர்டு, மிட்சுபிசி வந்தது. எனது ஆட்சிக் காலத்தில் இத்தகைய சிறப்பு வந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் ரூ.1,100 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலமாக மட்டும், 14 ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் போகிறது. அதிலும் பெருமளவில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    பெண்களை சமூக, பொருளாதார வளர்ச்சி கொண்டவர்களாக மாற்றும்- உயர்த்தும் திராவிட மாடல் ஆட்சி காலத்தில், அதற்கு வலிமை சேர்ப்பதைப் போல உங்களது செயல்பாடு அமைந்துள்ளது பாராட்டுக்குரியது. பெண்கள் அதிகமாக நிறுவனங்களில் பணியாற்றச் செல்லும் மாநிலமாக தமிழ்நாடு இப்போது இருக்கிறது.

    இப்போது மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்து வசதியை இந்த ஆட்சி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இதனை நாங்கள் ஒரு கடமையாக நினைத்து செய்கிறோம். இதன் மூலமாக பெண்கள் பொருளாதாரச் சுதந்திரத்தை பெறுகிறார்கள்.

    பெண்கள் பணிபுரிவதற்கு ஏதுவான சூழ்நிலை தமிழ்நாட்டில் இப்போது ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், அவர்களுக்கு பாதுகாப்பு, மரியாதை இவையெல்லாம் இன்றைக்கு சிறப்பாக பாதுகாக்கப்படுகிறது.

    பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய வகையில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பது மட்டுமின்றி, பெண்கள் பணியிடங்களுக்குச் சென்று வருவதை எளிதாக்கும் வகையில் அந்தச் சூழலையும் உருவாக்கித் தந்திருக்கிறோம். அது மட்டுமல்ல, பெண்களை அதிக அளவில் பணியமர்த்தினால் அதற்கான மானியங்கள் வழங்குவது போன்ற பல ஆதரவுச் சேவைகளையும் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

    புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 18 மாதங்களில் பெகாட்ரான் நிறுவனம் உற்பத்தியைத் துவக்கியிருப்பது, தமிழகத்தில் முதலீட்டாளர்களுக்கு ஆதரவான சூழ்நிலை இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

    நான்காம் தொழில் புரட்சியில் மின்னணுவியல் துறை, மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது மாநிலத்தின் உற்பத்தி வரைபடத்தையே மாற்றி அமைத்திடக் கூடிய வல்லமை படைத்ததாக விளங்குகிறது. அதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

    வெகு விரைவில் 'தமிழ்நாடு மின்னணு வன்பொருள் கொள்கை' வெளியிடப்பட உள்ளது.

    ஒன்றிய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ், மின்னணுவியல் துறை சார்பில் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ள நிறுவனங்களை, தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தற்போது, சீனாவில்தான், புதிய செல்போன் மாடல்கள் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. அதனை மாற்றி, தமிழ்நாட்டினை அத்தகைய உற்பத்தி மையமாக மாற்றிட வேண்டும் என்ற நோக்குடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். ஸ்மார்ட்போன்கள் உற்பத்திக்கான முழு விநியோகச் சங்கிலியையும் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரும் முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

    இத்தகைய நேரத்தில் பெகாட்ரான் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தித் திட்டம் இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

    உங்களைப் போன்றே, பிற தொழில் நிறுவனங்களையும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட அழைத்து வாருங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர், அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தொழிற்சாலை தலைவர் ஜெங் ஜியான் ஜாங், மேலாண்மை இயக்குனர் லின் ஜியு டேன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்த தொழிற்சாலையை திறந்து வைக்க வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மகேந்திரா சிட்டி வாசலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ×