search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவையில் வெடிகுண்டு"

    • அனைத்து கொலைகளும் ரவுடிகளுக்குள்ளாகவே யார்? தாதா என்ற போட்டியில் நடந்து வருகிறது.
    • வாணரப்பேட்டையை சேர்ந்த பாம் ரவி இதே காரணத்தால் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவையில் தொடர் வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் நடந்ததையொட்டி ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    புதுவையில் ரவுடிகள் தங்களது எதிரிகளை கொல்ல நாட்டு வெடிகுண்டுகளை முக்கிய ஆயுதமாக கையில் எடுத்து வருகிறார்கள். வெடிகுண்டுகளை முதலில் வீசி எதிராளிகளை நிலைகுலைய செய்து விட்டு பின்னர் அரிவாளால் வெட்டி கொலை செய்கிறார்கள்.

    புதுவையில் நடைபெறும் அனைத்து கொலைகளும் ரவுடிகளுக்குள்ளாகவே யார்? தாதா என்ற போட்டியில் நடந்து வருகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாணரப்பேட்டையை சேர்ந்த பாம் ரவி இதே காரணத்தால் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவத்தில் அப்பாவி வாலிபர் ஒருவரும் பலியானார். அதன் பிறகு நடந்த சம்பவங்களும் இதே பாணியிலேயே வெடிகுண்டு வீசி ரவுடிகள் கொலை செய்யப்பட்டனர். போலீசார் அவ்வப்போது ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்தினாலும் வெடிகுண்டுகளை எங்கேயாவது மறைவான இடத்தில் பதுக்கி வைத்து அதனை ரவுடிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு லாஸ்பேட்டையில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. வீடு அருகே வியாபாரி வீட்டின் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. அந்த சம்பவத்தில் இன்னும் துப்பு துலக்க படாத நிலையில் மறுநாள் உப்பளம் துறைமுகத்தில் வெடிகுண்டு வைத்திருந்த ரவுடி அய்யப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்து வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.

    நேற்று முன்தினம் இரவு கொட்டும் மழையில் சண்முகாபுரம் பாரதிபுரத்தை சேர்ந்த ரவுடி பன்னீர்செல்வத்தை அவரது எதிராளிகள் வெடிகுண்டு வீசி கொலை செய்தனர்.

    தொடர்ந்து நடைபெற்று வரும் வெடிகுண்டு கலாச்சாரத்தால் பொதுமக்கள் மட்டுமின்றி ரவுடிகளும் கலக்கமடைந்துள்ளனர். தங்களை எதிராளிகள் எப்படியும் வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவார்களோ என்ற பயத்தோடு இருந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா தலைமையில் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜிந்தா கோதண்டராமன், பக்தவச்சலம், வம்சித ரெட்டி மற்றும் லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் கருவடிக்குப்பம் மற்றும் சாமிபிள்ளைத்தோட்டம் பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    ஆனால் ரவுடிகளின் வீடுகளில் வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் எதுவும் சிக்கவில்லை. எனினும் ரவுடிகள் 15 பேரை போலீசார் பிடித்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×