search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை வாகன சோதனை"

    புதுவையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.1 கோடியே 93 லட்சத்து 90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019
    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் வினியோகம் உள்ளிட்டவற்றை தடுக்க புதுவை மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், உள்ளூர் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி மற்றும் போலீசார் நேற்று மதியம் 2 மணியளவில் நெல்லித்தோப்பு சிக்னல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தையும் மடக்கி தீவிர சோதனை நடத்தினார்கள்.

    அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் ரூ.7 லட்சத்து 90 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. அந்த பணத்துக்குரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் போலீசார் அதை கைப்பற்றி தேர்தல் துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல் புதுவை பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், முருகன் ஆகியோர் மி‌ஷன் வீதி-ரங்கபிள்ளை வீதி சந்திப்பில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக ஏ.டி.எம். மையங்களில் நிரப்புவதற்காக பணத்துடன் வந்த வாகனத்தை மடக்கி சோதனை நடத்தினர். அதில் ரூ.1 கோடியே 86 லட்சம் இருப்பது தெரிய வந்தது. அந்த பணத்துக்குரிய ஆவணங்கள் எதுவுமில்லாததையடுத்து வாகனத்துடன் பணத்தை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் நேரில் வந்து வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது புதுவையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இருந்து நேற்று மாலை ரூ.1 கோடியே 86 லட்சத்தை பெற்றுக்கொண்டு வங்கி ஏ.டி.எம். மையங்களில் நிரப்புவதற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் தகவல் தெரிவித்ததன்பேரில் வருமானத்துறையினர் பெரியகடை போலீஸ் நிலையம் வந்து வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்கள். வங்கி அதிகாரிகள் ரூ.1 கோடியே 86 லட்சத்துக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காத காரணத்தால் வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த பணத்தை அரசு கருவூலத்தில் வைத்தனர்.

    நேற்று ஒரு நாளில் புதுவையில் ரூ.1 கோடியே 93 லட்சத்து 90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.  #LokSabhaElections2019


    ×