search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை ஜெயில் கைதி மரணம்"

    திருட்டு வழக்கில் கைதான புதுவை ஜெயில் கைதி திடீரென மரணம் அடைந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி கரிக்கன் நகர் புதுநகரை சேர்ந்த செல்வகுமார் மகன் ஜெயமூர்த்தி (வயது 21).

    கூலி தொழிலாளியான ஜெயமூர்த்தியை கடந்த 21-ந் தேதி மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் புதுவை பாகூர் போலீசார் கைது செய்தனர். மறுநாள் புதுவை கோர்ட்டில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    ஜெயிலில் இருந்த ஜெய மூர்த்திக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஜெயிலில் உள்ள மருத்துவ மனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் புதுவை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜெய மூர்த்தி இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஜெயமூர்த்தியின் உறவினர்கள் புதுவை அரசு மருத்துவமனை முன்பு கூடினர். அங்கு அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஜெயமூர்த்தி சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உடலை பரிசோத னைக்கு எடுத்து செல்ல விடாமல் தடுத்தனர். மேலும் பாகூர் போலீசார் தாக்கியதால் தான் ஜெயமூர்த்தி இறந்துள்ளார். எனவே, பாகூர் போலீசார் மீது வழக்குபதிவு செய்ய வேண்டும் என அவர்கள் கோ‌ஷமிட்டனர்.

    இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் தலைமையில் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட வில்லை.

    இதனிடையே தகவல் அறிந்து அங்கு வந்த தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார். இதன் பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    பாகூர் போலீசார் மீது ஜெயமூர்த்தியின் உறவினர்கள் பெரியகடை போலீசாரிடம் புகார் அளித்தனர்.

    புகாரை விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதன் பேரில் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


    ஜெயமூர்த்தியின் உடல் தொடர்ந்து அரசு ஆஸ் பத்திரியிலேயே உள்ளது. புதுவையில் உள்ள கதிர் காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் தான் பிரேத பரிசோதனை நடத்துவது வழக்கம்.

    ஜெயமூர்த்தி உடலை அங்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்தனர். ஆனால், அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்தால் உண்மை வெளிவராது என்று கூறி அவருடைய உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பரிசோதனை நடத்த வேண்டும். நீதிபதி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் பிரேத பரி சோதனை செய்ய வேண்டும், அனைத்து நிகழ்வுகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்டனர்.

    இது சம்பந்தமாக முடிவு எடுக்க காலதாமதம் ஆனதால் அரசு ஆஸ்பத்திரியிலேயே உடல் இருக்கிறது.

    இதற்கிடையே ஜெயில் சூப்பிரண்டு பாஸ்கர் காலாப்பட்டு போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். காவலில் இருந்த கைதி உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். காவல் கைதி இறந்தால் நடுவர் மன்ற விசாரணை நடத்தப்படும்.

    எனவே, அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து 176-வது பிரிவு மர்ம மரணம் என்ற சட்டத்தின் கீழ் காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே காலாப்பட்டு ஜெயிலில் இருந்து 14 கைதிகளை வழக்குகளில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் வேனில் அழைத்து வந்தனர்.

    ஆனால், ஜெயமூர்த்தி இறந்த தகவலை அறிந்த கைதிகள் வேனில் இருந்து இறங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வழக்குகளில் போலீசார் கைது செய்யும் போது போலீஸ் நிலையத்தில் வைத்தும் அடிக்கிறார்கள். அடுத்து ஜெயிலுக்கு வந்த பிறகு ஜெயில் காவலர்களும் அடிக்கிறார்கள்.

    அவர்களுக்கு உரிய சிகிச்சைகளை உடனடியாக அளிப்பதில்லை. இதனால் தான் உயிர் இழப்பு ஏற்படுகிறது என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் 15 நிமிடமாக இந்த போராட்டம் நடந்தது. பின்னர் போலீசார் சமாதானப்படுத்தி அவர்களை கோர்ட்டுக்குள் அழைத்து சென்றனர்.

    பாகூர் சப்-இன்ஸ் பெக்டர் ஜெயகுருநாதன் மற்றும் போலீசார் அடித்ததால்தான் ஜெயமூர்த்தி இறந்ததாக உறவினர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய குருநாதனிடம் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இந்த தகவலை முதல்- அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். மேலும் நீதி விசாரணையும் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

    இறந்த ஜெயமூர்த்திக்கு கவுசல்யா என்ற மனைவியும் ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளது.

    ×