search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை கவர்னர்கள்"

    புதுச்சேரி மாநிலத்தில் துணைநிலை கவர்னர் கிரண்பேடியுடன் மேலும் 4 கவர்னர்கள் செயல்பட்டு வருவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டி உள்ளார். #CMNarayanasamy
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் 2019 புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    2018-ம் ஆண்டு மத்திய அரசில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய நிதி முறையாக கிடைக்காவிட்டாலும், மாநிலத்தில் இருந்து நாம் திட்டத்திற்காக, திட்டமில்லா செலவினங்களுக்காக ஒதுக்கிய தொகையை செலவிட தடைகள் இருந்தாலும், அதையெல்லாம் மீறி பல துறைகளில் வளர்ச்சி கண்டுள்ளோம்.

    நம் மாநிலத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாத தன்மை, மாநிலத்தில் கவர்னர் அதிகார வரம்பு மீறி செயல்படுவது. இதனால் திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டாலும், பொதுத்துறை, கூட்டுறவு நிறுவனங்களின் சம்பளத்தை தவிர மற்றவற்றை முறையாக நிறைவேற்றி வருகிறோம்.

    விவசாயம், கல்வி, மருத்துவம், சுற்றுலா, சட்ட ஒழுங்கு பாதுகாப்பு, நகர சுத்தம் என பல விருதுகளை பெற்றுள்ளோம். மத்திய அரசின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளோம். இந்த அங்கீகாரமானது மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் செய்ய முடியாது.

    இப்போது நிதி அயோக், உலக வங்கி இணைந்து நடத்திய கணக்கெடுப்பில் புதுவை மாநிலம் மக்கள் நிம்மதியாக வாழ அனைத்து வசதியும் பெற்ற மாநிலங்களில் இந்திய அளவில் 5-வது இடம் பெற்றுள்ளது. இது நிர்வாகத்தை எப்படி செம்மைப்படுத்தியுள்ளோம்? என்பதை தெளிவாக காட்டுகிறது.

    திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படாவிட்டால், கோப்புகளை திருப்பி அனுப்பியிருக்காவிட்டால் 2018-ல் இன்னும் பல சாதனைகளை படைத்திருப்போம். தடைகளை உடைத்தெறிந்து 2019-ல் மாநில வளர்ச்சிக்கு அயராது பாடுபடுவோம்.

    சிறப்பு மாநில அந்தஸ்து கேட்டு கிடைக்காததால், புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை வைத்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். தற்போது இவ்வி‌ஷயம் தீவிரமாகியுள்ளது.

    முன்பு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும், அரசியல் கட்சிகள் வலியுறுத்துவார்கள், பொதுக்கூட்டத்தில் பேசுவார்கள். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல முயற்சி எடுத்தாலும் மாநில அந்தஸ்து தரப்படவில்லை.

    தற்போது என்.ஆர். காங்கிரஸ் தவிர மற்ற அனைத்து அரசியல் கட்சியினரை சந்தித்து மாநில அந்தஸ்து தேவை பற்றி எடுத்துக்கூறியுள்ளோம். மத்திய அரசு நிதி கமி‌ஷனில் சேர்க்காத நிலை, நமக்கு கிடைக்க வேண்டிய வரி விகிதாச்சாரப்படி கிடைக்காதது. அதிகாரம் இருந்தும் திட்டங்களை செயல்படுத்த தடை என பல கஷ்டங்கள் உள்ளன. புதுவைக்கு மாநில அந்தஸ்து தருவது ஏற்புடையது என சுஷ்மா சுவராஜ் தெரிவித்திருந்தார். இதையெல்லாம் நாங்கள் வலியுறுத்தினோம்.

    முதல் முறையாக அனைத்து அரசியல் கட்சியினரையும் டெல்லிக்கு அழைத்துச்சென்று மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவதை எங்கள் ஆட்சியில் ஏற்படுத்தியுள்ளோம். இது மத்திய அரசுக்கு அழுத்தம் தரும்.

    அரசியல் கட்சியினர், எம்.எல்.ஏ.க்கள், சமூக அமைப்புகள் இணைந்து வருகிற 4-ந்தேதி பாராளுமன்றம் முன்பு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. 21 அரசியல் கட்சிகள் கலந்துகொள்கிறது. பா.ஜனதா, சிவசேனா தவிர அனைத்து அரசியல் கட்சிகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தர கடிதம் அனுப்பியுள்ளோம்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர்கள், திரிணாமுல், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, ராஷ்ட்ரிய ஜனதாதளம், பகுஜன்சமாஜ் போன்ற அரசியல் கட்சிகளுக்கும் கோரிக்கை வைத்துள்ளோம்.



    ஜனாதிபதி 2016-ம் ஆண்டு கவர்னர் கிரண்பேடியை புதுவை மாநிலத்திற்கு கவர்னராக நியமித்தார். துணை நிலை ஆளுநர் அலுவலகம் அரசு ஒப்புதல் இல்லாமல் துணைநிலை ஆளுநர் செயலகம் என மாற்றி கடிதம் அனுப்புகிறார். கிரண்பேடி கவர்னரா? அல்லது 5 கவர்னர்கள் அங்கு பணிபுரிகிறார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    தேவநீதிதாஸ் பதவிக்காலம் முடிந்ததும் அவரை பதவி நீட்டிப்பு செய்ய உள்துறை அமைச்சகத்திற்கு கவர்னர் கடிதம் அனுப்பினார். உள்துறை அமைச்சகம் அதற்கு அனுமதி தரவில்லை. அதை மறைத்து கவர்னர் தேவநீதிதாசை ஆலோசகராக நியமித்துள்ளதாக எனக்கு கடிதம் அனுப்பினார். அதை நான் மறுத்து கன்சல்டன்டாகவே தேவநீதிதாசை நியமிக்க வேண்டும் என நான் கூறினேன்.

    ஆனால் கவர்னர் உள்துறை அமைச்சக உத்தரவை மீறி தேவநீதிதாசை நியமித்துள்ளார். நான் உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியும் பதில் வரவில்லை.

    ஓ.எஸ்.டி. அண்ட் கன்சல்டன்ட் என தேவநீதிதாசை நியமித்தது தவறானது. கவர்னர் அலுவலகத்திற்கு செயலாளர் இல்லை. புதுவையில் உள்ள எந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியையும் செயலாளராக நியமிக்கலாம் என கடிதம் அனுப்பினேன். ஆனால் கவர்னர் யாரையும் நியமிக்காமல் தேவநீதிதாசை செயலாளர் போல நியமித்துள்ளார். அதிகாரிகளை அழைப்பது, கூட்டம் நடத்துவது என கவர்னர் வேலையை தேவநீதி தாஸ் செய்ய முடியாது. அவர் 2-வது கவர்னராக செயல்படுகிறார்.

    மற்றொரு அதிகாரியான ஸ்ரீதர் அரசு அதிகாரிகளுக்கு தேர்வு வைக்கிறார். இவர் 3-வது துணைநிலை ஆளுநர். 4-வது துணைநிலை ஆளுநராக காவல்துறை அதிகாரி உள்ளார். 5-வதாக கேர்டேக்கர் ஒருவர் உள்ளார். அவர் 5-வது துணைநிலை ஆளுநராக செயல்படுகிறார். அதிகார துஷ்பிரயோகம் மிகப்பெரும் அளவில் நடக்கிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வரும்.

    கவர்னர் கிரண்பேடி 3 மாதம் இருப்பார். அதன்பிறகு மற்ற அதிகாரிகள் எங்கே செல்வார்கள்? புதுவை சிறிய மாநிலம். அவர்கள் பணியை அவரவர் செய்ய வேண்டும். இந்த அதிகார துஷ்பிரயோகத்திற்கு 3 மாதத்தில் விடை கிடைக்கும். புதுவையில் அரசு ஆட்சி நடக்கிறதா? கோமாளிகள் ஆட்சி நடக்கிறதா? என தெரியவில்லை.

    பொய்யான தகவல்களை மக்களுக்கு கொடுக்கின்றனர். ஆனால் கவர்னர் கிரண்பேடியின் செயல்பாடு வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கிறது என்பதை புதுவை மக்கள் உணர்ந்துள்ளனர்.

    கவர்னரால் திட்டத்தை தள்ளிப்போட முடியும். தடுத்து நிறுத்திவிட முடியாது. மக்களுக்கு செய்ய முடியவில்லையே என்றுதான் நாங்கள் வருந்துகிறோம்.

    புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் கவர்னர் கிரண்பேடியை எதிர்த்து வருகின்றன. எனவே 2019-ம் ஆண்டு புதுவை மாநில மக்களுக்கு நன்மைகளை அளிக்கும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார். #CMNarayanasamy

    ×