search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ 100 கோடி"

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியுங்கள், தூத்துக்குடி வளர்ச்சிப்பணிகளுக்காக மேலும் ரூ. 100 கோடியை வழங்க‌ தயார் என்று வேதாந்தா குழுமம் பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவித்தது. #Sterlite #SterlitePlant
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவரும், நீதிபதியுமான ஏ.கே. கோயல் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது வேதாந்தா குழுமம் சார்பாக வக்கீல் அரிமா சுந்தரம் வாதிடுகையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு மட்டுமே மூட அதிகாரம் உள்ளது என்றார்.

    மேலும் அவர் தனது வாதத்தில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதைத் தொடர்ந்து தாமிரம் இறக்குமதி 247 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த போராட்டத்தில் நக்ச‌லைட்டுகள் பங்கேற்றனர் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்றும் கூறினார்.

    தொடர்ந்து, வக்கீல் அரிமா சுந்தரம் தனது வாதத்தில், பெரு நிறுவன சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் (சி.எஸ்.ஆர்) கீழ் வேதாந்தா நிறுவனம் ஆண்டுக்கு ரூ. 10 கோடி வழங்கி வருகிறது.

    தூத்துக்குடியில் குடிநீர் விநியோகம், மருத்துவமனை, பள்ளி வசதிகள் உள்ளிட்ட வளர்ச்சிப்பணிகளுக்காக மேலும் ரூ. 100 கோடியை வழங்க‌ விரும்புகிறது. எனவே ஆலையை திறக்க அனுமதியுங்கள் என்றார்.

    இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் வைத்தியநாதன் வாதிடுகையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரிக்க முடியாது.

    இந்த வழக்கு விசாரணையை வருகிற 10‍-ந் தேதிக்கு ஒத்திவைத்தது. #Sterlite #SterlitePlant
    புதுவையில் 100 அடி சாலை மற்றும் பைபாஸ் சாலைக்கு கருணாநிதியின் பெயரை சூட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. #Narayanasamy #PondiCabinet #Karunanidhi
    புதுச்சேரி:

    புதுவையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுபற்றி முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-



    புதுச்சேரியில் இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரையிலான 100 அடி சாலைக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயரை சூட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள திருநள்ளார் பைபாஸ் சாலை மற்றும் பட்டமேற்படிப்பு மையம் ஆகியவற்றுக்கும்  கருணாநிதி பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டது.  பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கருணாநிதி பெயரில் இருக்கை அமைக்கப்படும்.

    புதுச்சேரியின் 4 பிராந்தியங்களிலும் உள்ள குளங்கள் மற்றும் கால்வாய்களை தூர்வார அரசு முடிவு செய்துள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குத் தேவையான மணலை அங்கிருந்து வாங்கிக் கொள்ளலாம். இதற்காக மாட்டு வண்டி ஒரு லோடுக்கு 50 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிராக்டருக்கு 100 ரூபாய், லாரிக்கு 150 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை கொம்யூன் பஞ்சாயத்து வளர்ச்சிக்காக வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Narayanasamy #PondiCabinet #Karunanidhi
    ரிசர்வ் வங்கி புதிதாக வெளியிட உள்ள சிறிய அளவிலான 100 ரூபாய் நோட்டுக்காக நாடு முழுவதும் ஏடிஎம் இயந்திரங்கள் மீண்டும் மாற்றியமைக்கப்பட உள்ளன. #ATM
    புதுடெல்லி:

    பனமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு புதிதாக 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வழக்கத்தை விட சிறிய நோட்டுகளாக இருந்ததால், அப்போது ஏடிஎம் இயந்திரங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. 

    இதனால், புதிய ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. தட்டுப்பாட்டை போக்குவதற்காக அதிகளவில் 100 ரூபாய் நோட்டுகள் (தற்போது புழக்கத்தில் இருப்பவை) கூடுதலாக அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. அதன் பிறகு ஒவ்வொரு நிறத்திலும் 200, 50, 10 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. 
     
    இந்த நிலையில், வெளிர் நீல நிறத்தில் புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி அண்மையில் முடிவு செய்துள்ளது. பழைய 100 ரூபாய் நோட்டுக்களை விட, இவை அளவில் சிறியதாக இருக்கும் என்பதால், நாடு முழுவதும் 2 லட்சத்து 40 ஆயிரம் ஏடிஎம் இயந்திரங்களை மாற்றி அமைக்க 100 கோடி ரூபாய் செலவாகும் என தகவல் வெளியாகி உள்ளது. 



    இதுபோல, ஏடிஎம் இயந்திரங்களில் புதிய ரூபாய் நோட்டுக்கான பிளேட்களை பொருத்தவும் 12 மாதங்களாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இதுபோன்ற, நடைமுறை சிக்கல்களால் புதிய 100 ரூபாய் நோட்டுகள் வெளியாவதிலும் உடனடியாக கிடைப்பதிலும் வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது. 

    சமீபத்தில் வெளியிடப்பட்ட 200 ரூபாய் நோட்டுகளை வைக்கும் விதமாக ஏடிஎம்களில் பிளேட் பொறுத்தும் பணி மற்றும் சாப்ட்வேர்களை மாற்றும் பணி இன்னும் முழுமையாக முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    2-வது நாளாக நடைபெறும் லாரிகள் வேலைநிறுத்தத்தால் மதுரையில் ரூ.100 கோடி அளவிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. #LorryStrike
    மதுரை:

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 2-வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்தது. இதனால் லாரிகள் சேவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

    மதுரையில் 4500 லாரிகள் உள்ளன. இதில் 4 ஆயிரம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் சரக்கு புக்கிங் பணிகளும் நிறுத்தப்பட்டன.

    அனைத்து லாரிகளும் விரகனூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மதுரையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சென்ற லாரிகளும் ஆங்காங்கே சரக்குகளுடன் நிற்கின்றன.

    மதுரையில் இருந்து தினமும் பல்வேறு சரக்குகள் வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு அனுப்பப்படுவது வழக்கம். லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக இந்த பணி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரூ.100 கோடி அளவிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    மதுரை சந்தைகளுக்கு வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் 2 நாட்களுக்கு ஒருமுறை லாரிகளில் வரும். நேற்று முன்தினம் சரக்கு வந்துள்ளது. இதனால் சந்தைகளில் காய்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்படவில்லை.

    லாரிகளின் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் காய்கறிகள் வரத்து பாதிக்கப்பட்டு அவற்றின் விலை உயரும் அபாயம் உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    காய்கறிகள் மட்டுமின்றி பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏற்றம் அடைய வாய்ப்புகள் உள்ளதால் லாரிகள் போராட்டத்தை விரைந்து முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என வர்த்தகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.  #LorryStrike




    ரிசர்வ் வங்கி விரைவில் லாவண்டர் வண்ணத்தில் புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது. #RBI #NewCurrency
    புதுடெல்லி:

    மத்திய அரசு கடந்த 2016-ல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்தியது. இதையடுத்து, பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அவற்றை மக்களிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெற்றுக் கொண்டது.

    இதைத்தொடர்ந்து, புதிய 2000, 500 ரூபாய் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், 200, 50 மற்றும் 10 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு வெளியானது.

    இந்நிலையில், ரிசர்வ் வங்கி விரைவில் லாவண்டர் வண்ணத்தில் புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது. இதற்கான மாதிரியை இன்று வெளியிட்டுள்ளது.

    இந்த 100 ரூபாய் நோட்டுகள் லாவண்டர் வண்ணத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இதன் ஒருபுறம், பாரம்பரியம் மிக்க குஜராத் மாநிலத்தின் பதான் நகரில் உள்ள மகாராணியின் படிக்கிணறு அச்சிடப்பட்டு உள்ளது. இந்த கிணறு யுனெஸ்கோ பட்டியலில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்படும். தற்போதுள்ள 100 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. #RBI #NewCurrency
    எட்டயபுரத்தில் இன்று நகைக்கடை சுவரை துளையிட்டு 100 பவுன் நகை மற்றும் 10 கிலோ வெள்ளி ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    எட்டயபுரம்:

    எட்டயபுரம் பெரிய கிணற்று தெருவை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் வெங்கடேஷ் ராஜா. எட்டயபுரம் வர்த்தக சங்க துணைத்தலைவர். இவர் அரசு மருத்துவமனை எதிரே ஒரு நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் பின்புறம் ஒரு தனியார் லாட்ஜ் உள்ளது.

    இந்நிலையில் இன்று காலை லாட்ஜின் சுவர் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த காவலாளி இதுகுறித்து லாட்ஜ் உரிமையாளர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

    அப்போது லாட்ஜின் பின்பக்க சுவரை துளையிட்டு நகைக்கடைக்குள் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு பெட்டியை வெல்டிங் மிஷின் கொண்டு உடைத்து 100 பவுன் தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    மேலும் அங்கிருந்த 3 சி.சி.டி.வி. கேமிராவையும், ஒரு டி.வி.யையும், கொள்ளையர்கள் தூக்கி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்ராம் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

    கொள்ளை நடந்த நகைக்கடை

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் ஒரு நகைக்கடையை உடைத்து கொள்ளை போனது. இந்நிலையில் இன்று மற்றொரு நகைக்கடையில் சுவரை துளையிட்டு 100 பவுன் நகைகள் கொள்ளை போனது எட்டயபுரம் கடை உரிமையாளர்களுக்கிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை கைது செய்து திருட்டு போன நகைகளை மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். #Tamilnews
    ×