search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிடிவாரண்டு குற்றவாளிகள் கைது"

    வாக்குப்பதிவின்போது அசம்பாவிதங்கள், வன்முறை சம்பவங்களை தடுக்க, போலீஸ் பிடியில் சிக்காமல் இருந்துவந்த 1315 பழைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். #LokSabhaElections2019
    சென்னை:

    தமிழகம் முழுவதும் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இதையொட்டி மாநிலம் முழுவதும் போலீசார் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். இதற்காக குற்ற வழக்குகளில் தொடர்புடைய பழைய ரவுடிகளை போலீசார் வேட்டையாடி கைது செய்து வருகிறார்கள்.

    சென்னையிலும் ஓட்டுப்பதிவின் போது அசம்பாவிதங்களை தடுக்கவும், வன்முறை சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ளவும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையர்கள் தினகரன், மகேஸ் குமார் அகர்வால் ஆகியோரது மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் தேவையான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையத்துடன் இணைந்து போலீசார் மேற்கொண்டுள்ளனர். இதன்படி பழைய குற்றவாளிகள், ரவுடிகள், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டவர்களை கைது செய்ய முடிவு செய்யப்பட்டது.

    கடந்த மாதம் 10-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தன. அந்த வகையில் தேர்தல் விதி மீறல்களை கண்காணிக்கும் பணியுடன் ரவுடிகள் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டது.

    இதில் 1555 ரவுடிகள் இதுவரை பிடிபட்டுள்ளனர். சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் போலீசிடம் சிக்கியுள்ள இவர்களிடம் அந்தந்த பகுதி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், இனி தவறு செய்ய மாட்டேன் என்று எழுதி வாங்கி உள்ளனர்.

    இதனை மீறி குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதே போல வழக்கு விசாரணைக்கு சரியாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 1000-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இப்படி போலீஸ் பிடியில் சிக்காமல் டிமிக்கி கொடுத்து கொண்டிருந்த 1315 பழைய குற்றவாளிகளும் பிடிபட்டுள்ளனர்.

    சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் சட்டம்-ஒழுங்கு போலீசார் ரவுடிகளை தேடிப்பிடித்து கைது செய்து வரும் அதே வேளையில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    வருகிற 16-ந்தேதியுடன் பிரசாரம் ஓயும் நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். சென்னையில் இதுவரையில் தேர்தல் விதி மீறல் தொடர்பாக 629 வழக்குகள் போடப்பட்டுள்ளன. அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதாக 176 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பறக்கும் படை சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநகர பகுதிகளில் மட்டுமே தீவிரமாக நடைபெற்ற இந்த சோதனை கடந்த 2 நாட்களாக புறநகர் பகுதிகளிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    வரும் நாட்களில் இந்த சோதனை மேலும் தீவிரப்படுத்தப்பட உள்ளது. #LokSabhaElections2019
    ×