search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாம்பன் ரெயில் நிலையம்"

    ராமேசுவரத்தில் பயங்கரவாதிகளின் வெடிகுண்டு மிரட்டலையடுத்து பாம்பன் ரெயில் பாலத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #BombThreat
    ராமேசுவரம்:

    இலங்கையில் கடந்த வாரம் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த சம்பவத்துக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

    இலங்கையை தொடர்ந்து பயங்கரவாதிகள் இந்தியாவிலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன.

    தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் உள்ள ரெயில், விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் கூடும் முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

    குறிப்பாக இலங்கையை யொட்டி உள்ள ராமேசுவரம் கடல் பகுதியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து பயங்கரவாதிகள் கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவுவதை தடுக்க கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று கர்நாடக போலீஸ் டி.ஜி.பி.யை தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசிய மர்ம நபர், தமிழகத்தில் முக்கிய இடங்களை வெடிகுண்டு வைத்து தகர்க்க இருப்பதாகவும், குறிப்பாக ராமேசுவரத்தில் பேரழிவை ஏற்படுத்த உள்ளதாகவும் கூறி மிரட்டல் விடுத்தார்.

    இதைத்தொடர்ந்து கர்நாடக போலீசார் கொடுத்த தகவலின்பேரில் தமிழகத்தில் போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது.

    வெடிகுண்டு மிரட்டலையடுத்து ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ராமேசுவரம் கோவில், பஸ் நிலையம், ரெயில் நிலையம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, துறைமுகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ரோந்து சுற்றி வந்தனர்.

    குறிப்பாக பாம்பன் ரெயில் பாலம் தகர்க்கப்படும் என தொலைபேசியில் பேசிய மர்ம நபர் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல்டிடெக்டர், மோப்பநாய் உதவியுடன் பாம்பன் ரெயில் பாலத்தில் நேற்று நள்ளிரவு வரை அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர். 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை.

    இதேபோல் பாம்பன் சாலை பாலத்திலும் சோதனை நடத்தப்பட்டது. பயங்கரவாதிகள் மிரட்டலையடுத்து 2 பாலத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #BombThreat
    ×