search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாமக கைது"

    எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் தொடர்பாக பா.ஜனதா அலுவலகத்தை பா.ம.க.வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். #BJP #PMK

    சென்னை:

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை மோடி அரசு கொண்டு வந்துள்ளதற்கு நன்றி தெரிவித்து தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார்.

    இதற்கிடையில், இம்மருத்துவமனை அமைவதற்கு பா.ம.க.தான் காரணம் என அன்புமணி ராமதாசும் டுவிட்டரில் பதிவு செய்து இருந்தார். இதனால் டுவிட்டர் தளத்தில் அன்புமணிக்கும், தமிழிசைக்கும் காரசார கருத்து மோதல் வெடித்தது.

    டாக்டர் தமிழிசையை கண்டித்து தமிழக பா.ஜனதா அலுவலகத்தை பா.ம.க. வினர் முற்றுகையிட போவதாக அறிவித்து இருந்தனர். இதனால் தி.நகர் வைத்தியராமன் தெருவில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் போலீசார் குவிக்பபட்டனர்.

    சாலையின் 2 பக்கங்களிலும் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பா.ம.க. தொண்டர்கள் இந்தி பிரசார சபா அருகே முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி தலைமையில் திரண்டனர்.

    அவர்கள் அங்கிருந்து பா.ஜனதா அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக புறப்பட்டனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். அவர்களை பஸ்களில் ஏற்றிச் சென்றனர்.

    அப்போது பா.ஜனதா தொண்டர்கள் 20 பேர் ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் பஸ்சில் இருந்த பா.ம.க. தொண்டர்கள் கீழே இறங்கினர். இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

    போலீசார் சிரமப்பட்டு இரு தரப்பினரையும் ஆங்காங்கே தள்ளி விட்டனர். பா.ஜனதாவை சேர்ந்த மூர்த்தி என்பவரை போலீசார் பிடித்து வேனில் ஏற்றினர்.


    இதைத் தொடர்ந்து மற்ற தொண்டர்கள் கலைந்து சென்றார்கள். பின்னர் பா.ம.க.வினரை பஸ்சில் ஏற்றி அழைத்து சென்றனர்.

    ஏ.கே.மூர்த்தி தலைமையில் சுமார் 150 பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெளியில் களேபரம் நடந்து கொண்டிருந்தபோது பா.ஜனதா அலுவலகத்தில் கட்சியின் மையக்குழு கூட்டம் தேசிய செயலாளர் முரளிதரராவ் தலைமையில் நடந்தது.

    மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுச் செயலாளர்கள் வானதி சீனிவாசன், நரேந்திரன், தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் கேசவ விநாயகம், மோகன்ராஜுலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

     ஏ.கே.மூர்த்தி தலைமையில் பா.ஜனதா அலுவலகம் நோக்கி பா.ம.க.வினர் ஊர்வலமாக சென்ற காட்சி. #BJP #PMK

    ×