search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாபநாசம் மலைப்பகுதி"

    பலத்த மழை மற்றும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாபநாசம் மலைப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    சிங்கை:

    பாபநாசம் மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் நேற்று பாபநாசம் அணை நிரம்பியது. இதனால் அணையில் இருந்து உபரிநீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாமிரபரணியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடும் வெள்ளம் காரணமாக தாமிரபரணி கரையோர மண்டபங்கள் மூழ்கியுள்ளன.

    பாபநாசம் மலைப்பகுதியில் அணைக்கு செல்லும் பாதையில் பழமையான பாலம் 1992-ம் ஆண்டில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அந்த பகுதியில் தற்போது புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே காரையார் கோவில் மற்றும் அணைபகுதிக்கு செல்ல 1992-ம் ஆண்டிலேயே தற்காலிக இரும்பு பாலம் அமைக்கப்பட்டது.

    தற்போது இந்த பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக பாலத்தின் அடிப்பகுதியில் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியே பொதுமக்கள் மற்றும் சுற்றுல பயணிகள், பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அகஸ்தியர் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாபநாசம் செக்போஸ்ட் இன்று காலை மூடப்பட்டது. இதன் காரணமாக மலையில் உள்ள மின்வாரிய ஊழியர்கள், காணிக்குடியிருப்பு கிராம மக்கள் நகருக்குள் வர முடியாமல் தவித்துள்ளனர்.
    பாபநாசம் மலையடிவார பகுதியில் சிறுத்தை அட்டகாசம் தொடர்வதால் வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சிங்கை:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதியில் சமீபகாலமாக வன விலங்குகள் ஊருக்குள் வந்து விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தியும், நாய்கள், ஆடுகளை தின்றும் அட்டகாசம் செய்து வருகின்றன.

    ஏற்கனவே சிங்கையை ஒட்டிய மலைப்பகுதியிலும், கடையம் கடனா அணையை ஒட்டிய பகுதிகளிலும், செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி மலைப்பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. வன விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் வனத்துறையினரிடம் வலியுறுத்தி வருகிறார்கள்.

    பாபநாசம் மலையடிவார பகுதியான திருப்பதியாபுரம், பெத்தான்பிள்ளை குடியிருப்பு, அனவன் குடியிருப்பு போன்ற பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தை அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருப்பதியாபுரம் கிராமத்தில் சிறுத்தைப்புலி ஊருக்குள் புகுந்தது. சிங்கையை அடுத்த‌ திருப்பதியாபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 56) விவசாயி.

    இவர் ஏராளமான ஆடுகளும் வளர்த்து வருகிறார். தினமும் காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுவிட்டு, மாலையில் தனது வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் ஆடுகளை அடைப்பது வழக்கம். இதேபோல் சம்பவத்தன்று ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டுசென்று கொட்டகையில் அடைத்தார்.

    பின்னர் இரவு முருகன் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென நள்ளிரவு 2 மணிக்கு ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது. உடனே திடுக்கிட்டு விழித்த முருகன் பதறிப்போய் வெளியே வந்தார். அப்போது அங்கு ஒரு சிறுத்தைப்புலி, கொட்டகையில் ஒரு ஆட்டை பிடித்து கடித்து குதறியது.

    இதனை பார்த்த முருகன் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் சத்தம் போட்டதும், சிறுத்தைப்புலி அந்த ஆட்டை அங்கேயே விட்டுவிட்டு காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டது. இதில் காயமடைந்த அந்த ஆட்டிற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பதியாபுரம் கிராமத்தில் இரவில் வீட்டைவிட்டு வெளியில் வர மக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×