search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு அதிகாரிப்பு"

    தமிழகத்தின் முக்கிய இடங்கள் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என தொலைபேசி மூலம் வந்த மிரட்டலையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
    மதுரை:

    தமிழகத்தின் முக்கிய இடங்கள் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என தொலைபேசி மூலம் வந்த மிரட்டலையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    மதுரையில் ரெயில் நிலையம், விமான நிலையம், வழிபாட்டுத் தலங்கள், பஸ் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

    தற்போது வெடிகுண்டு மிரட்டலையடுத்து வழக்கத்தைவிட கோவிலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் அடிக்கடி மெட்டல் டிடெக்டர் உதவியுடன் கோவிலில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் இன்று கோவில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார். 5 கோபுர நுழைவு வாயில்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    ஆய்வுக்கு பின்னர் போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மதுரை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பு பணியில் கூடுதலாக 157 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடைமைகள் அனைத்தும் பரிசோதிக்கப்படுகின்றன.

    நகரில் எங்காவது சந்தேகப்படும்படியாக பொருட்கள் ஏதும் கிடந்தால் பொதுமக்கள், போலீசுக்கு தகவல் தர வேண்டுகிறோம்.

    மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் உச்சகட்ட விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேற்கண்டவாறு அவர் கூறினார்.

    மதுரை ரெயில் நிலையத்தில் நேற்று தீவிர சோதனை நடத்தப்பட்டது. ரெயில்வே இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இன்றும் 2-வது நாளாக ரெயில் நிலையத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ரெயில்வே டி.எஸ்.பி. மன்னர் மன்னன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ரெயில் நிலையம், தண்டவாளம், வளாகப்பகுதிகளில் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர். ரெயில் நிலைய கிழக்கு, மேற்கு நுழைவு வாயிலில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இங்கிருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் ரெயில்களின் அனைத்து பெட்டிகளிலும் மெட்டல் டிடெக்டர், மோப்ப நாயுடன் சோதனை நடத்தப்பட்டது.

    இதற்காக சென்னையில் இருந்து சிறப்பு பயிற்சி பெற்ற வெடிகுண்டு நிபுணர்கள் மதுரைக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். மதுரை ரெயில் நிலையத்திற்கு வரும் அனைத்து ரெயில்களிலும் சோதனை நடந்தது.

    ×