search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழ வியாபாரி கைது"

    • கோவை குரும்பபாளையம் வில்லேஜ் நகரை சேர்ந்த பழ வியாபாரியான செந்தில்குமார் என்பவர் பெயரில் வெடிபொருட்கள் வாங்கப்பட்டது தெரியவந்தது.
    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் செந்தில்குமாரை கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

    கோவை:

    கோவை கார் குண்டு வெடிப்பு மற்றும் மங்களூரு குண்டு வெடிப்பை தொடர்ந்து கோவையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் இரவு நேரத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    2 குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்களும் ஆன்லைனிலேயே வெடிபொருட்கள் வாங்கி உள்ளனர். இதையடுத்து கோவை மாவட்டத்தில் ஆன்லைனில் யாராவது வெடிபொருட்கள் வாங்கினாரா? என்பது குறித்து போலீசாரும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் ஆன்லைன் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது கோவை குரும்பபாளையம் வில்லேஜ் நகரை சேர்ந்த பழ வியாபாரியான செந்தில்குமார் என்பவர் பெயரில் வெடிபொருட்கள் வாங்கப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் செந்தில்குமாரை கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

    அப்போது அவர், வெடி பொருட்களை தான் வாங்கவில்லை என்றும், தனது கடையில் வேலை பார்த்து வரும் கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன் ஆர்டர் செய்ததாக தெரிவித்தார்.

    உடனே போலீசார் மாரியப்பனை பிடித்து என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் தனது ஊரில் முன்விரோதத்தில் ஒருவரை வெடிகுண்டு வீசி கொலை செய்வதற்காக வெடி பொருட்களை வாங்கியது தெரியவந்தது.

    போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி. நான் தற்போது கோவை சரவணம்பட்டியில் தங்கி, பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள செந்தில்குமாரின் தள்ளுவண்டி பழ வியாபாரத்தில் வேலை பார்த்து வருகிறேன்.

    எனது சொந்த ஊரை சேர்ந்த மகாராஜன் என்பவர் என்னிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் அவரை கொலை செய்வதற்கு திட்டமிட்டேன். அவரை சாதாரணமாக கொலை செய்வதை விட வெடிகுண்டு வீசி கொலை செய்ய முடிவு செய்தேன்.

    இதற்காக செந்தில்குமாரின் செல்போனில் ஆன்லைனில் பொட்டாசியம், அமோனியம், சல்பர் உள்ளிட்டவற்றை தலா 100 கிராம் அளவிற்கு ஆர்டர் செய்தேன்.

    மருந்துகள் வந்ததும் அதனை வைத்து நாட்டு வெடி தயாரிக்க முடிவு செய்திருந்தேன். வழக்கமாக மகாராஜன் எங்கள் ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவுக்கு வருவார். அங்கு அவரை தீர்த்து கட்டுவதற்காக காத்திருந்த போது தான் போலீசாரிடம் சிக்கி கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து சரவணம்பட்டி போலீசார் அவர் மீது வெடி மருந்துகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்து பொட்டாசியம், சல்பர் உள்ளிட்ட வெடிபொருட்களையும் கைப்பற்றினர்.

    ×