search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்திரிகையாளர் நல வாரியம்"

    • பத்திரிகையாளர் நல வாரியத்தின் 2-வது கூட்டம் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
    • நல வாரியத்தில் சேர்க்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் தகுதியை நிர்ணயிப்பது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை அளிப்பதற்காக பத்திரிகையாளர் நல வாரியம் 1.12.2021 அன்று தோற்றுவிக்கப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக பத்திரிகையாளர்கள் நல வாரியத்திற்கு வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து பயனாளிகளைத் தேர்வு செய்து, நலத்திட்ட உதவிகள் வழங்க ஏதுவாக செய்தித்துறை அமைச்சரை தலைவராகவும், அலுவல்சார் உறுப்பினர்களாக 7 பேரும், அலுவல் சாரா உறுப்பினர்களாக 'தினத்தந்தி' குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் உள்பட 6 செய்தியாளர்களைக் கொண்ட நல வாரியக்குழு அமைக்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் நல வாரியத்தின் முதலாவது குழு கூட்டம் 22.4.2022 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் பத்திரிகையாளர் நல வாரியத்தின் 2-வது கூட்டம் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நேற்று காலை 11 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் வீ.ப.ஜெயசீலன், பத்திரிகையாளர் நல வாரியத்தின் அலுவல்சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள 'தினத்தந்தி' குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், தினகரன் நாளிதழ் ஆசிரியர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், தீக்கதிர் நாளிதழ் செய்தியாளர் எஸ்.கவாஸ்கர், புதிய தலைமுறை தொலைக்காட்சி சிறப்பு நிருபர் எம்.ரமேஷ், தி வீக் செய்தி வார இதழின் முதன்மை சிறப்பு நிருபர் லட்சுமி சுப்பிரமணியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

    இந்த நல வாரியத்தில் சேர்க்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் தகுதியை நிர்ணயிப்பது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற சில பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது மற்றும் இறந்துபோன பத்திரிகையாளரின் வாரிசுகளுக்கு குடும்ப நல நிதி அனுமதிப்பது பற்றி இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இறுதியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையுரை ஆற்றினார். பத்திரிகையாளர் நல வாரியத்தின் அடுத்த கூட்டத்தை இன்னும் 2 மாதங்களுக்குள் கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ×