search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோய் தொற்று"

    • நோய் தொற்று குறைய வேண்டி நவ சண்டி மகா யாகம் தொடங்கியது.
    • இந்த யாகபெரு விழா, மகாபஞ்சமுக பிரித்தியங்கிரா தேவி கோவிலில் 6 நாட்கள் நடைபெறுகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வேதியேரேந்தல் விலக்கில் உள்ள பிரசித்தி பெற்ற 24 மணிநேரமும் அன்னதானம் நடைபெறும் மகா பஞ்ச முக பிரித்தியங்கிரா தேவி கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆடிமாதத்தில் யாகபெருவிழா நடைபெறும். இந்த ஆண்டு20-வது நவசண்டியாக பெருவிழாநேற்று மாலை கணபதி ஹோமம் கடம் ஸ்தாபன நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    இந்தயாகபெருவிழா, மகாபஞ்சமுக பிரித்தியங்கிரா தேவி கோவிலில் 6 நாட்கள் நடைபெறுகிறது. உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் நோய் தொற்றுகளில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையிலும், இயற்கையின் பேரழிவுகளிலிருந்து காத்து உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளும் பேரானந்தத்துடன் வாழ வேண்டி நேற்று (23-ந் தேதி) தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை வேத முறைப்படி 6 நாட்கள் லட்சுமி நாராயண மகா யாகம், நவ சண்டி யாகம் நடைபெறுகிறது.

    நோய் தொற்றுகளாலும் பஞ்சம், பினிகள், கொள்ளை, நோய்கள் போன்றவற்றால் மக்கள் மனநலம், உடல் நலம் குன்றிய காலத்தில் அதிருத்ரம்,சத சண்டி யாகம் கொற்றவை வழிபாடு, அக்னி வழிபாடு செய்து முன்னோர்களும், நாட்டை ஆட்சி செய்த மன்னர்களும் மஹா யாகங்களை செய்து மக்களை காத்து தெய்வ அருளால் வெற்றியும் பெற்றுள்ளனர்.

    இந்த யாகங்கள் வேத சான்றோர்களை வைத்து தஞ்சை குருஜி கணபதி சுப்பிரமணியம் தலைமையில் நடைபெறுகிறது. நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெற இன்று (24-ந் தேதி) ஏகாசர கணபதி யாகமும், மஹா சுதர்சன யாகமும், குழந்தை இல்லாத தம்பதியர்களுக்காக குழந்தை செல்வம் வேண்டி நாளை (25-ந் தேதி) புத்ர காமேஷ்டி யாகமும், கடன் கஷ்டங்கள் நீங்கவும், நீண்ட ஆயுள் பெறவும், துன்பங்கள் வராமல் இருக்கவும் 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ருணமோசன கணபதி யாகமும், மிருத்ஞ்ஜய யாகமும், வன துர்கா யாகமும், ஆயுஸ்ஹோமமும் நடைபெறுகிறது.

    சகல கஷ்டங்கள் நீங்கி அஷ்ட ஐஸ்வரியமும் பெற தசமஹா வித்தியா யாகமும் மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா யாகமும் வருகிற 27-ந் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. மிக முக்கிய யாகமான மகா நவசண்டி ஹோமம் 28-ந் தேதி (வியாழக்கிழமை) ஆடி அமாவாசை தினத்தன்று நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை மகா பஞ்சமுக பிரத்யங்கிர ஸாக்த மடாலய நிர்வாகி ஞானசேகர சுவாமிஜி, மாதாஜி ராஜ குமாரி ஆகியோர் மேற்பார்வையில் பக்தர்கள் செய்து வருகின்றனர். இது குறித்து மகா பஞ்சமுக பிரத்யங்கிரா கோவிலில் உள்ள ஞானசேகர சுவாமிஜி கூறுகையில், இங்கு அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் என்பதற்காக கடந்த 19 ஆண்டுகளாக சத சண்டி, சகஸ்சர சண்டி,அயுத்த சண்டி, அதிருத்ர மகா யாகங்களும் நடத்தப்பட்டு உள்ளது.

    இப்போது உலக மக்கள் எதிர் நோக்கும் பஞ்சம், கொரோனா, குரங்கம்மை போன்ற தீய தொற்று நோய்கள் அழிய வேண்டியும் மக்கள் அனைவரும் எல்லா ஜீவ ராசிகளும் பேரானந்தத்துடன் வாழ வேண்டியும் 18 சித்தர்களும் மற்றும் காஞ்சி மஹா சுவாமிகள் அருளால் இங்கு யாகங்கள் நடைபெறுகிறது.

    இந்த யாகத்தில் எந்த கோவிலிலும் இல்லாத இந்திய மருத்துவ பொரு ளான மிளகு ஆஹுதி செய்யப்படுகிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக 24 மணி நேரமும் அன்னதானம் நடைபெறுகிறது என்றார்.

    இந்த கோவிலில் மிகப்பெரிய யாக மண்டபமும், யாக சாலைகளும் உள்ளன. லட்சுமி கணபதி, கொடிமர கணபதி, சொர்ண ஹாசர பைரவர், குண்டு முத்து மாரியம்மன், காசி அன்னபூரணி ஆகிய சன்னதிகளும் உள்ளது.

    இங்கு நடைபெறும் யாக விபரங்களை 9842858236 என்ற எண்ணில் பக்தர்கள் தொடர்பு கொள்ளலாம். மதுரை, சிவகங்கை, திருச்சி ஆகிய ஊர்களில் இருந்து எளிதாக மானாமதுரை வந்து மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோவிலை சென்று அடையலாம். பக்தர்களுக்கு காலை, மதியம், இரவு ஆகிய வேளைகளில் சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    ×