search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெய்வேலி சுரங்கம்"

    நெய்வேலி 3-வது சுரங்கத்துக்கு மக்களின் நிலங்களைக் கையகப்படுத்த என்எல்சி நிர்வாகமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் முயன்றால் மக்களைத் திரட்டி போராடுவேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். #Ramadoss #Neyveli
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நெய்வேலியில் மூன்றாவது நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக நெய்வேலியை ஒட்டிய 26 கிராமங்களில் வாழும் மக்களுக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது.

    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடும், பிற உரிமைகளும் இன்னும் வழங்கப்படாத நிலையில், புதிதாக நிலங்களை பறிக்க அந்த நிறுவனம் துடிப்பதும், அதற்கு தமிழக ஆட்சியாளர்கள் துணைபோவதும் கண்டிக்கத்தக்கவை.

    மூன்றாவது சுரங்கத்திற்காக கொளப்பாக்கம், அரசகுழி, கோ.ஆதனூர், பெருவரப்பூர், பெருந்துறை, ஓட்டிமேடு, கோட்டி முளை, சிறுவரப்பூர், க.புத்தூர், சாத்தபாடி, தர்மநல்லூர் உள்ளிட்ட 26 கிராமங்களில் உள்ள 4850 ஹெக்டேர், அதாவது 12,125 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. இது சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களை விட இரு மடங்கு ஆகும்.

    இரண்டாவது சுரங்கம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 10,000 ஏக்கர் நிலங்கள் இன்னும் பயன்படுத்தபடவில்லை. 1985ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இன்னும் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படவில்லை.

    இப்போது கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள நிலங்கள், இன்னும் பல பத்தாண்டுகளுக்கு தேவையான பழுப்பு நிலக்கரியை தோண்டி எடுக்கப் போதுமானவை. அதனால், புதிய நிலங்களை கையகப்படுத்தத் தேவையே இல்லை.

    யாருக்கும் தேவையில்லாத, இயற்கைக்கு எதிரான மூன்றாவது நிலக்கரி சுரங்கத் திட்டத்தை அரசும் என்.எல்.சியும் கைவிட வேண்டும்.

    அதையும் மீறி மக்களின் நிலங்களைக் கையகப்படுத்த என்.எல்.சி. நிர்வாகமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் முயன்றால், அதற்கு எதிராக நானே நேரடியாக களமிறங்கி மக்களைத் திரட்டி போராடுவேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Ramadoss #Neyveli

    ×