search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்த்தேக்கம்"

    • குடிநீர் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் புதிய நீர்த்தேக்கங்கள் உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
    • புதிய நீர்த்தேக்கம் 1,200 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.56 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை மற்றும் செம்பரம்பாக்கம் 5 ஏரிகள் மற்றும் வீராணம் ஏரியை சேர்த்து 13 ஆயிரத்து 222 மில்லியன் கன அடி, அதாவது 13.22 டி.எம்.சி. நீர் சேமிக்க முடியும். சென்னை மாநகரின் மக்கள் தொகை 1 கோடியே 15 லட்சத்தை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது. இவர்களுக்கு தினசரி 992 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் முழுமையான அளவு குடிநீரை ஏரிகளால் எல்லா ஆண்டுகளும் வழங்க முடியாத நிலை இருந்து வருகிறது.

    சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு குடிநீர் மற்றும் தொழிற்சாலைகள் பயன்பாடுகளுக்காக 22 டி.எம்.சி. நீர் தேவைப்படுகிறது. இது 2035-ம் ஆண்டுகளில் 32 டி.எம்.சி.யாக உயரும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. குடிநீர் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் புதிய நீர்த்தேக்கங்கள் உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

    சென்னையின் பெருகி வரும் நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள ஒரத்தூரில் புதிய நீர்த்தேக்கத்தை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளில் இறங்கி உள்ளது. குறிப்பாக ஒரத்தூர் மற்றும் ஆரம்பாக்கம் குளங்கள் மேம்படுத்தப்பட்டு 500 மில்லியன் கனஅடி அதாவது அரை டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புதிய நீர்த்தேக்கம் உருவாக்கப்படுகிறது.

    இந்த புதிய நீர்த்தேக்கம் 1,200 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.56 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இதற்கு தேவையான நிலம் முழுமையாக கையகப்படுத்தும் பணி முடிந்ததும் பணிகள் தொடங்கும். வருவாய்த்துறை அதிகாரிகளின் உதவியுடன் நிலத்தை கையகப்படுத்தும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்து வந்தபோது, கொரோனா தொற்று பரவல் காரணமாக பணியில் தொய்வு ஏற்பட்டது. தற்போது, நிலம் கையகப்படுத்தும் பணி மீண்டும் தொடங்கப்பட்டு 70 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

    ஓரிரு வாரங்களில் நிலம் கையப்படுத்தும் பணி நிறைவடைந்துவிடும். அதன்பிறகு முழுமையான கட்டுமானம் நடத்தப்பட்டு அடுத்த ஆண்டுக்குள் புதிய நீர்த்தேக்கம் தயாராகிவிடும். புதிய நீர்த்தேக்கத்தில் இருந்து செம்பரம்பாக்கத்துக்கு தண்ணீர் வழங்க 25 கிலோ மீட்டருக்கு குழாய் பதிக்க திட்டமிட்டுள்ளது.

    மேற்கண்ட தகவல்களை தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×