search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிரந்தரமாக மூட"

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்ட நிலையில், ஆலைக்கு மாவட்ட கலெக்டர் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். #SterliteProtest #ThoothukudiShooting
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டத்தில் கடந்த 22 மற்றும் 23-ம் தேதி போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதில் காயமடைந்தவர்களை நேற்று தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு சந்திக்கும் போது, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரசாரமாக கூறினர்.

    இன்று காலை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அரசு மருத்துமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போதும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து இதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்தார்.

    இதனை அடுத்து, பிற்பகலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் உயரதிகாரிகள் உடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினனார். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு இன்று மாலை அரசாணை வெளியிட்டுள்ளது.

    பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பளித்து இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக, இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அரசாணை வெளியிடப்பட்ட சிலமணி நேரங்களில் ஆலைக்கு சீல் வைக்க மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அங்கு சென்றார். ஆலை நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அவர் ஆலைக்கு சீல் வைத்து, அரசின் நோட்டீஸை வாயில் கதவில் ஒட்டினார்.

    இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த கலெக்டர் சந்தீப் நந்தூரி, “ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது. இனி ஆலை இயங்காது. அரசாணையின் படி சீல் வைக்கப்பட்டது. ஆலைக்குள் இருக்கும் பொருட்களை சீல் வைப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்” என கூறினார்.

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
    ×