search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிகில் கவுடா"

    அரசியலில் வாரிசுகள் வரக்கூடாது என்று சட்டம் எதுவும் கிடையாது என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார். #kumaraswamy

    பெங்களூரு:

    ஜே.டி.எஸ். கட்சியின் தேசிய தலைவரான தேவகவுடா ஏற்கனவே பிரதமராக இருந்தார். அவரது மகன் குமாரசாமி கர்நாடக முதல் மந்திரியாக உள்ளார். இன்னொரு மகன் ரேவண்ணா கர்நாடக மந்திரியாக உள்ளார். குமாரசாமியின் மனைவி அனிதா எம்.எல்.ஏ.வாக உள்ளார். ரேவண்ணாவின் மனைவி பவானி மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார்.

    இந்த நிலையில் குமாரசாமியின் மகனும், நடிகருமான நிகில் கவுடாவும் அரசியலில் குதிக்கிறார். அவர் மாண்டியா எம்.பி. தொகுதியில் ஜே.டி.எஸ். வேட்பாளராக போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது குறித்து கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அரசியலில் வாரிசுகள் வரக்கூடாது என்று சட்டம் எதுவும் கிடையாது. என் மகன் நிறுத்தப்படுகிறான் என்றால் வாரிசு அடிப்படையில் அல்ல. வெற்றி வாய்ப்பு எப்படி என்பதை பொறுத்தே சீட் வழங்கப்படுகிறது.

    நமது ஜனநாயக அமைப்பில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அது அவர்களின் உரிமை. வாரிசு வளர்ப்பு என்பது முக்கியமான வி‌ஷயம் அல்ல. தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதை தான் பார்க்க வேண்டும்.

    வாரிசுகள் அரசியலுக்கு வருவது எல்லா இடங்களிலும் தான் இருக்கிறது. நாங்கள் ஒன்றும் மறை முகமாக எங்கள் வாரிசை கொண்டு வரவில்லை. மக்களை சந்தித்தே அரசியலுக்கு கொண்டு வருகிறோம். மக்களால் தேர்ந்து எடுக்கப்படுகிறோம். அது மக்களின் முடிவு.

    எங்கள் பிள்ளைகளும் இந்த நாட்டின் குடி மக்கள் தானே, தேர்தலில் நிற்க அவர்களுக்கும் உரிமை இருக்கிறது.

    என் குடும்பத்தினர் யாரும் இனி அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று 8 மாதங்களுக்கு முன்பு சொன்னதை நினைவூட்டி கேட்கிறீர்கள். 8 மாதங்களில் அரசியல் சூழல்கள் எவ்வளவோ மாறிவிட்டது. கட்சித் தொண்டர்களின் விருப்பப்படியே எல்லாம் நடக்கிறது.

    காங்கிரஸ், ஜே.டி.எஸ். தொகுதி பங்கீடு முடிந்து விட்டது. இன்னும் 2, 3 நாளில் தொகுதி பங்கீடு விவரம் வெளிவரும் எங்களுக்கு எத்தனை இடம் என்பது பிரச்சினை அல்ல. பா.ஜனதாவுக்கு எதிராக எத்தனை இடம் ஜெயிக்கிறோம் என்பது தான் முக்கியம். அதற்கேற்பவே எங்களின் களப்பணி இருக்கும். 22 முதல் 24 இடங்களை கைப்பற்றுவோம்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். #kumaraswamy 

    ×