search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாடாளுமன்றம் ஒப்புதல்"

    மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுவதற்கு தேவையான நிதி ஒப்புதலை நாடாளுமன்றம் அளிக்கும் என்று ஜனாதிபதி டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். #DonaldTrump #MexicoWall
    வாஷிங்டன்:

    மெக்சிகோ நாட்டின் வழியாக அமெரிக்காவுக்குள் அகதிகள் சட்டவிரோதமாக நுழைவதை தடுப்பதற்காக 5.7 பில்லியன் டாலர்கள் (ரூ.39 ஆயிரம் கோடி) செலவில் தடுப்புச் சுவர் கட்ட ஜனாதிபதி டிரம்ப் மிகவும் ஆர்வமாக உள்ளார்.

    ஆனால் இதற்கான நிதியை நாடாளுமன்றம் ஒதுக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து ஜனாதிபதி டிரம்ப், அரசின் பல்வேறு துறை செலவினங்களுக்கு நிதி ஒதுக்காமல் இழுத்தடித்து வருகிறார். இதனால் அமெரிக்காவில் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக அரசுத் துறைகள் முடங்கி உள்ளன. 22 நாட்களாக அரசுத்துறை ஊழியர்கள் எந்த சம்பளமும் பெறாமல் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.



    இப்படியொரு நிலைமை அமெரிக்க வரலாற்றில் எப்போதும் ஏற்பட்டதில்லை என்று கூறப்படுகிறது. 1995-96-ம் ஆண்டு பில்கிளிண்டன் ஜனாதிபதியாக இருந்தபோது கூட அதிக பட்சமாக 21 நாட்கள்தான் அமெரிக்க அரசுத்துறைகள் முடங்கிக் கிடந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், தடுப்புச் சுவர் கட்டுவதற்கான நிதியை நாடாளுமன்றம் ஒதுக்கீடு செய்யவில்லை என்றால் நாட்டில் அவசர நிலையை அறிவிக்க தயங்கமாட்டேன் என்று அண்மையில் அறிவித்த டிரம்ப் தற்போது தனது குரலை சற்று தளர்த்திக் கொண்டு உள்ளார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், “மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுவதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் நிச்சயமாக ஒப்புதல் அளிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே நாட்டில் அவசர நிலையை உடனடியாக அறிவித்து விட மாட்டேன். அவசர நிலையை அறிவிக்கும் உரிமை எனக்கு இருந்தாலும் கூட தடுப்புச் சுவருக்கான போதிய நிதியை நாடாளுமன்றம் முறைப்படி ஒதுக்கீடு செய்துவிடும் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது.

    நாடாளுமன்றம் தனது வழக்கமான பணியை மேற்கொள்ளவேண்டும் என்பதே எங்களின் விருப்பம். அதனால் எடுத்த எடுப்பிலேயே அவசர நிலை அறிவிப்பு என்னும் நிலைக்கு போக மாட்டேன். இது நிதியை பெறுவதற்கான எளிதான வழி என்றாலும் கூட அதை விரைவாக கையாள மாட்டேன். அதேநேரம் நாடாளுமன்றம் இதைச் செய்ய தவறும் பட்சத்தில் அவசர நிலை அறிவிக்கப்படும் என்கிற எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” என்றார்.
    ×