search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகர்கோவில் அரசு பஸ்"

    நாகர்கோவில் பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் அரசு பஸ்சில் கொண்டுவந்த ரூ.52½ லட்சத்தை பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019
    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி கன்னியாகுமரி தொகுதியில் 54 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

    பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். நிலையான கண்காணிப்பு அதிகாரி சரஸ்வதி தலைமையிலான குழுவினர் இன்று காலை நாகர்கோவில் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது திருச்சியில் இருந்து நாகர்கோவில் வந்த அரசு பஸ் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின்போது பஸ்சில் இருந்த 2 பேரிடம் லட்சக்கணக்கில் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பணம் வைத்திருந்தவர்கள் மதுரையை சேர்ந்த கனகராஜ், திண்டுக்கல்லை சேர்ந்த முகமது அனிபா என்பது தெரிய வந்தது.

    அவர்கள் 2 பேரும் பணத்தை துணியில் கட்டி இடுப்பில் சுற்றி வைத்திருந்தனர். அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    கனகராஜிடம் இருந்து ரூ.22 லட்சத்து 50 ஆயிரமும், முகமது அனிபாவிடம் இருந்து ரூ.30 லட்சமும் சிக்கியது. பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் இருவரிடமும் இல்லை. அந்த பணம் எங்கிருந்து யாருக்கு கொண்டு வரப்பட்டது. ஹவாலா பணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பறிமுதல் செய்யப்பட்ட ரூ.52½ லட்சம் பணத்தை கண்காணிப்பு குழுவினர் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமாரிடம் ஒப்படைத்தனர்.

    பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பறக்கும்படை அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில் ரூ.28 லட்சத்து 66 ஆயிரத்து 855-ம், குளச்சல் தொகுதியில் ரூ.2 லட்சமும் சிக்கி உள்ளது.

    இதுவரை மாவட்டம் முழுவதும் நடந்த சோதனையில் கன்னியாகுமரி தொகுதியில் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 190-ம், நாகர்கோவில் தொகுதியில் ரூ.39 லட்சத்து 8 ஆயிரமும், ஒரு கிலோ 300 கிராம் வெள்ளியும், 4 கார்களும், குளச்சல் தொகுதியில் ரூ.14 லட்சத்து 70 ஆயிரத்து 200, 288 கிராம் நகையும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    பத்மநாபபுரம் தொகுதியில் ரூ.59 லட்சத்து 22 ஆயிரத்து 561-ம், 39 கிராம் தங்கம், 11 வாகனங்களும், விளவங்கோடு தொகுதியில் ரூ.5 லட்சத்து 66 ஆயிரமும், கிள்ளியூர் தொகுதியில் ரூ.5 லட்சத்து 38 ஆயிரத்து 750 பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மொத்தத்தில் இன்று காலை வரை குமரி மாவட்டம் முழுவதும் ரூ.1 கோடியே 74 லட்சத்து 97 ஆயிரத்து 701 ரொக்கப்பணமும், 327 கிராம் தங்கமும், ஒரு கிலோ 300 கிராம் வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. #LokSabhaElections2019

    ×