search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகர்கோவிலில் மழை"

    நாகர்கோவிலில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால் பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். #Rain
    நாகர்கோவில்:

    தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி உருவாகி உள்ளதால் தமிழகத்தில் 2 நாட்கள் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    குமரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. நாகர்கோவிலில் இன்று காலை இடி, மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகாலை 5 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழையின் வேகம் நேரம் செல்ல, செல்ல அதிகரித்தது. சுமார் 3½ மணி நேரமாக கன மழை பெய்தது.

    இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக கோட்டார் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் சிக்கித் தவித்தன. பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றி வந்த ஆட்டோக்களும் நடுவழியில் பழுதாகி நின்றது. இதனால் மாணவிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    இருசக்கர வாகனங்களில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துவந்த பெற்றோரும் மழையில் சிக்கித் தவித்தனர். ஒருசிலர் மழையில் நனைந்தவாறே பள்ளிக்கு சென்றனர். குடை பிடித்தவாறும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். அவர்கள் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளப்பெருக்கில் சிக்கி அவதிக்கு ஆளானார்கள்.

    செம்மாங்குடி ரோடு, மீனாட்சிபுரம் சாலை, கோர்ட்டு ரோடு, கே.பி. ரோடுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் வெள்ளம் அதிகமாக இருந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நாகர்கோவில் நகர் முழுவதுமே வெள்ளக்காடாக காட்சி அளித்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளிலும் மழை நீர் புகுந்தது. 3 மணி நேரத்தில் 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    ஆரல்வாய்மொழி, சுசீந்திரம், இடலாக்குடி, சாமிதோப்பு பகுதிகளிலும் மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர், பேச்சிப்பாறை அணை பகுதிகளிலும் நேற்று இரவு விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு அணைகள் நிரம்புவதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர்.

    சிற்றாறு 1 அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு அணையின் நீர் மட்டம் இன்று காலை 15.75 அடியாக உள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் 27 அடியாக இருந்தது. அணைக்கு 482 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 657 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை 70.30 அடியாக இருந்தது.

    அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதாலும் மழை பெய்து வருவதாலும் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-1, சிற்றாறு1-4, சிற்றாறு2-7, ஆணைக்கிடங்கு-3, குளச்சல்-6.4, குருந்தன்கோடு-25.6, அடையாமடை-8, திற்பரப்பு-9.8, நாகர்கோவில்- 26.2, கன்னிமார்-4.6, பாலமோர்-28.  #Rain

    ×