search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடந்து பள்ளி செல்லும் மாணவர்கள்"

    • 70 ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்கள் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தான் கல்வி பயின்று வருகின்றனர்.
    • 30-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் சென்று கல்வி பயில்கிறார்கள்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் இலுப்பநத்தம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் எஸ்.புங்கம்பாளையம் பகுதியில் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகின்றன.

    வெங்கட்ராமபுரம், அண்ணா நகர், அம்மன் புதூர், காரனூர், இலுப்பநத்தம், பழைய சாலை, இடுகம்பாளையம், பகத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ மாணவிகள் சென்று கல்வி பயின்று வருகின்றனர். இலுப்பநத்தம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 6-வது வார்டுக்குட்பட்ட வெங்கட்ராமபுரம், அண்ணா நகர், பழைய சாலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 30-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் சென்று கல்வி பயில்கிறார்கள்.

    இந்த கிராம பகுதியில் இருந்து கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்கள் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தான் கல்வி பயின்று வருகின்றனர். இப்பகுதி மாணவ, மாணவிகளின் வசதிக்காக பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்கள், ஊராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கு மனுவாக வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால் இதுவரை இப்பள்ளி மாணவர்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனால் மாணவர்கள் தினசரி 4 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் நிலை உருவாகி உள்ளது. எனவே இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து கிராம பகுதிகளில் இருந்து எஸ்.புங்கம்பாளையம் அரசுப் பள்ளிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து 6-வது வார்டு உறுப்பினர் சத்தியமூர்த்தி கூறியதாவது:-

    எஸ்.புங்கம்பாளையம் பகுதியில் கடந்த 70 ஆண்டுகளாக பள்ளி செயல்பட்டு வருகிறது. எனது வார்டுக்குட்பட்ட வெங்கட்ராமபுரம், அண்ணா நகர், பழைய சாலை உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

    கடந்த 2002 -ம் ஆண்டு இப்பள்ளியில் 9 மற்றும் 10-ம் வகுப்பு தொடங்கப்பட்டது.

    அதன் பின் 2012 -ம் ஆண்டு 11 மற்றும் 12-ம் வகுப்புகள் தொடங்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளில் மேல்நிலைப் பள்ளிகளுக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இப்பள்ளியில் இப்பகுதி மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வந்தனர். ஆனால் பஸ் வசதி இல்லாததால் தினசரி 4 கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர், போக்குவரத்து அலுவலகம், மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மனுக்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு சார்பில் இக்கிராமத்திற்கு பேருந்துகள் வழங்கப்படாமல் உள்ளது. எனவே காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று வரும் வகையில் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சிறுமுகை வழியாக தினசரி புளியம்பட்டி, அன்னூர் பகுதிகளுக்கு எஸ்.புங்கம்பாளையம் பகுதிக்கு 10 ஏ, 16, 24, 10சி, 10இ உள்ளிட்ட பஸ்கள் சென்று வருகின்றன. இதில் ஏதாவது ஒரு பஸ்சை காலை, மாலை நேரங்களில் மாணவர்கள் சென்று வரும் வகையில் மாற்றிவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் பெரும்பாலும் கூலி தொழிலாளர்கள் தான் அதிகளவில் உள்ளனர். மழைக்காலங்களில் குழந்தைகள் மழையில் நனைந்தபடி 4 கிலோமீட்டர் சென்று வருவதால் அவர்களுக்கு நோய்கள் ஏற்பட்டு அவர்கள் விடுமுறை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி வருகின்றன. எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் எங்கள் கிராமத்தின் வழியாக அரசு பஸ்களை இயக்கி மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    ×