search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோட்டக்கலைப் பயிர்"

    • நீர்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.
    • கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தகவல்

    நாகர்கோவில்:

    வடகிழக்கு பருவமழையின் போது தோட்ட பயிர்களை பாதுகாப்பது குறித்து கலெக்டர் அரவிந்த் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வாழை காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு மரத்தின் அடியில் மண் அணைக்க வேண்டும். சவுக்கு அல்லது யூக்கலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்த வேண்டும்.

    பல்லாண்டு பயிர்கள் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றிட வேண்டும். நல்ல காற்றோட்டம் அமையும் பொருட்டு கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைத்தல் வேண்டும். தோட்டத்தில் தேவையான வடிகால் வசதி செய்திட வேண்டும்.

    மிளகு உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும். டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனாஸ் பூஞ்சாண உயிரியல் கொல்லி மருந்துகளை வேர்ப்பகுதியில் முன்தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிராம்பு மற்றும் ஜாதிக்காய் உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும். காய்ந்து போன இலைகள் மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றிட வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைத்தல் வேண்டும். நிழலினை ஒழுங்குப்படுத்த கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.

    கொக்கோ காய்ந்து போன இலைகள் மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றிட வேண்டும். அதிகப்படியான இலைத்தளைகளை கவாத்து செய்தல் வேண்டும். மரத்தின் தண்டுப்பகுதியில் போர்டோக்கலவையை தெளிக்க வேண்டும்.

    ரப்பர் சிறிய செடிகள் காற்றினால் பாதிக்கா வண்ணம் தாங்கு குச்சிகளால் கயிற்றால் கட்ட வேண்டும். செடியின் அடிப்பாகத்தை சுத்தம் செய்து உள்நோக்கி சாய்வு அமைத்து வடிகால் வசதி செய்ய வேண்டும். ரப்பர் பால் வடிக்கும் பகுதியில் பாதுகாப்பு பூச்சு பூச வேண்டும். மழைப்பாதுகாப்பு கவசம் பயன்படுத்த வேண்டும்.

    இதர தோட்டக்கலைப் பயிர்களுக்கான வழிமுறைகள் தோட்டக்கலைப் பயிர்களான மரவள்ளி , மிளகாய் , தக்காளி , வெண்டை , கொத்தமல்லி , கத்தரி , பூண்டு மற்றும் இஞ்சி போன்ற பயிர்களுக்கு உரிய காலத்தில் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். அனைத்து வயல்களிலும் அதிக நீர் தேங்கா வண்ணம் உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும்.

    நீர்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர்திசையில் குச்சிகளால் முட்டு கொடுத்து புதியதாக நடவு செய்த செடிகள் சாயா வண்ணம் பாதுகாக்கவும். வயல்களில் தேவையான பயிர்ப்பாதுகாப்பு நடவ டிக்கை மேற்கொள்ளப் பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×