search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொலைத் தொடர்பு"

    • பொங்கலூர் ஊராட்சி தேவனாம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3,000-க்கு மேற்பட்டோர் வாசித்து வருகின்றனர்.
    • நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஊராட்சி தேவனாம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஐயப்பா நகர், அம்மன் நகர், என்.என்.புதூர், புதுப்பாளையம், காட்டுப்பாளையம் மற்றும் சின்னக்காட்டு பாளையம் பகுதிகளில் சுமார் 3,000-க்கு மேற்பட்டோர் வாசித்து வருகின்றனர். இங்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு, கறிக்கோழி பண்ணைகள், விசைத்தறிக்கூடங்கள் உள்ளன. இப்பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் பல்லடம், திருப்பூர், கோவை ஆகிய வெளியூர்களுக்கு சென்று பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டதால் மக்கள் தங்கள் கையில் வைத்துள்ள செல்போன்களை காட்சி பொருளாகவும் விளையாட்டு பொருளாகவும் மட்டுமே வைத்திருக்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக அவசர உதவி எண்கள் காவல்துறை எண் 100, 108 ஆம்புலன்ஸ் சேவை தீயணைப்புத்துறை சேவை 101 ஆகியவற்றை பெற முடியாமலும் ஸ்மார்ட் கார்டு எனப்படும் குடும்ப அட்டையை கொண்டு கணினி மயமாக்கப்பட்ட நியாய விலை கடைகளில் குடும்பங்களுக்கு தேவையான மாதாந்திர அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை பெற முடியாமலும் அங்குள்ள தபால் நிலையத்தில் இணையதள சேவை முடங்கி இருப்பதால் விரைவு தபால் மற்றும் மத்திய மாநில அரசுகள் வழங்கும் 100 நாள் வேலை திட்டம் பணப்பரிவர்த்தனை ஆகியவற்றை மேற்கொள்ள முடியாமலும் மூன்றாண்டுகளுக்கும் மேலாக கிராமவாசிகள் தவித்து வருகின்றனர். மேலும் கடந்த இருமுறை கொரோனா தொற்று காலகட்டங்களில் இணைய வழி கல்வி சேவையை கல்வித்துறை அமல்படுத்திய போது இப்பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவியர் தங்களிடம் செல்போன்கள் இருந்தும் நெட்வொர்க் கிடைக்காத காரணத்தால் இணையவழிக் கல்வி சேவையில் பங்கு பெற முடியவில்லை. இதன் காரணமாக வெளியூர்களில் உள்ள உறவினர் வீடுகள் மற்றும் வாடகைக்கு வீடு பிடித்து தங்கி கல்வி பயின்று வந்துள்ளனர். இதே நிலை தற்போது வரை தொடர்வதாகவும் அப்பகுதியினர் வேதனை யுடன் கூறுகின்றனர். இந்நிலையில் வம்சம் திரைப்படத்தில் செல்போன் டவர் கிடைக்காததால் மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டு 'ஹலோ' என பேசுவது போல இன்றளவும் மாணவர்கள் பலரும் அப்பகுதியில் உள்ள உயரமான மரங்களின் மீது ஏறி அமர்ந்து கொண்டு பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியைகளுடன் பேசும் அவல நிலையும் தொடர்கதையாக நீடிக்கிறது. இதனிடையே அப்பகுதியைச் சேர்ந்த சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் சிலர் பாரத பிரதமர்,முதல்வர் முதல் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வரை பலமுறை புகார்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என கூறப்படும் நிலையில் அப்பகுதி மக்களின் அவதியும் தொடர்கிறது. மேலும் பிரதான தொழிலான விவசாயத்தில் பலரும் ஈடுபட்டுள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகளின் வேளாண் கடன், பயிர் கடன் உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டு இருப்பதால் பெற முடியாமல் விவசாயிகளின் அவதியும் தொடர்வதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.

    மேலும் இணைய சேவை கிடைக்காமல் ஐ.டி., கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் பிராட் பேன்ட் மற்றும் 20 உயரத்தில் கம்பி அமைத்து அதில் டாங்கிள் பொருத்தி இணையதள பணிகளை செய்வதாகவும் கூறுகின்றனர். எனவே உடனடியாக மத்திய மாநில அரசுகள் தேவனம்பா ளையம் கிராமத்தில் தொலைத்தொடர்பு சேவையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும், தொடர்ந்து காலதாமதப்படுத்தினால் தங்களுக்கு மத்திய,மாநில அரசுகள் வழங்கிய குடும்ப அட்டை வாக்காளர் அட்டை ஆதார் அட்டை களை திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் திரும்ப ஒப்படைத்து விட்டு அங்கேயே குடியேறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    ×