search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய முதியோர் தடகள போட்டி"

    • 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அரியானாவை சேர்ந்த 105 வயது பாட்டி ராம்பாய் புதிய சாதனை படைத்தார்.
    • எனது அடுத்த இலக்கு சர்வதேச போட்டியில் பங்கேற்பது.

    வதேதரா:

    இந்திய தேசிய தடகள சம்மேளனம் சார்பில் தேசிய முதியோர் தடகள போட்டிகள் குஜராத் மாநிலம் வதேதரா நகரில் நடந்தது.

    இதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அரியானாவை சேர்ந்த 105 வயது பாட்டி ராம்பாய் புதிய சாதனை படைத்தார். அவர் 45.40 வினாடிகளில் பந்தய தூரத்தை ஓடி கடந்தார்.

    இதுபோல கடந்த ஞாயிற்றுகிழமை நடந்த 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் ஒரு நிமிடம் 52.17 வினாடிகளில் ஓடி சாதனை படைத்தார். 105 வயதில் தேசிய போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்த பாட்டி ராம்பாய்க்கு மைதானத்தில் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    சாதனை படைத்த பாட்டி ராம்பாய் கூறும்போது, எனது அடுத்த இலக்கு சர்வதேச போட்டியில் பங்கேற்பது. அதிலும் சாதனை படைத்து வெற்றி பெறுவேன். இதற்கான பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவேன், என்றார்.

    அவரிடம் இந்த வயதில் சாதனை படைத்த நீங்கள், இளம்வயதில் தடகள போட்டிகளில் பங்கேற்காதது ஏன்? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு சிரித்தபடி பதில் அளித்த அவர் அந்த வயதில் என்னை யாரும் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்றார்.பாட்டி ராம்பாயின் வெற்றி பற்றி அவரது பேத்தி ஷர்மிளா சங்வான் கூறியதாவது:-

    பாட்டி ராம்பாய் 1917-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி பிறந்தார். அரியானா மாநிலத்தை சேர்ந்த அவர் அங்குள்ள வயல் வெளிகளில் மட்டுமே ஓடி கொண்டிருந்தார். அதன்பின்பு தான் முதியோர் தடகள போட்டிகளில் பங்கேற்க தொடங்கினார்.

    அதன்பின்பு மராட்டியம், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் நடந்த போட்டிகளில் பங்கேற்றார். இதில் 10-க்கும் மேற்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்றுள்ளார்.

    சைவ உணவு வகைகளை மட்டுமே பாட்டி சாப்பிடுவார். தினமும் 250 கிராம் நெய், 500 கிராம் தயிர் சாப்பிடுவார். மேலும் தினமும் 2 முறை அரை லிட்டர் பால் குடிப்பார்.

    வயலில் வேலை செய்தாலும் தினமும் 2 முதல் 3 கிலோ மீட்டர் தூரம் ஓடுவார். அந்த பயிற்சிதான் அவர் போட்டிகளில் வெற்றி பெற உதவியது, என்றார்.

    வெற்றியை பெறவும், சாதனை படைக்கவும், வயது தடையில்லை என்பதை பாட்டி ராம்பாய் நிரூபித்துள்ளார். 105 வயதில் தடகள போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்த ராம்பாய், முதியோருக்கு ஒரு முன்மாதிரியாகவும், தூண்டுதலாகவும் மாறியுள்ளார்.


    ×