search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய பேரிடர் மேலாண்மை குழு"

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க கோரிய வழக்கில், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவை கூட்டி முடிவெடுக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #Mullaperiyar #MullaperiyarDam
    புதுடெல்லி:

    கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், திறக்கப்படும் தண்ணீர் இடுக்கி அணைக்கு வந்து சேருகிறது. இடுக்கி அணையும் நிரம்பியுள்ளதால் அங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட் 2014-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. மேலும், பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளவும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, அணையின் பலம் குறித்து கேரள மக்களிடையே அச்சம் நிலவுவதால் அணையின் நீர்மட்டத்தை தற்காலிகமாக 136 அடியாக குறைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    இதற்கு பதில் கடிதம் எழுதிய தமிழக முதல்வர் அணை பாதுகாப்பாக இருப்பதால் நீர்மட்டத்தை குறைக்க தேவையில்லை என கூறியிருந்தார்.

    இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 143 அடியில் இருந்து குறைக்க கோரி இடுக்கியை சேர்ந்த ரசூல்ராய் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, முல்லைப் பெரியாறு அணை நீர் இருப்பு, நீர் மேலாண்மை தொடர்பாக நாளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத்தை கூட்ட மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    கூட்டத்தில், நீர்மட்டத்தை தற்காலிகமாக 139 அடியாக குறைப்பது குறித்து ஆராயுமாறு நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

    இது தொடர்பான அறிக்கையை நாளை பிற்பகல் 2 மணிக்கு தாக்கல் செய்ய வேண்டும் என கூறிய நீதிபதிகள், வழக்கை நாளைய தினத்துக்கு ஒத்தி வைத்தனர்.
    ×