search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெலுங்கானா தொழிலாளி"

    சவுதிஅரேபியாவில் தெலுங்கானாவை சேர்ந்த தொழிலாளி சித்ரவதையால் அவதிப்படுவதாக வெளியிட்டுள்ள வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் மக்தபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வீரய்யா. 2017-ம் ஆண்டு வேலைக்காக சவுதிஅரேபியாவுக்கு சென்றார்.

    தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. இந்நிலையில் அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    நான் இங்கிருந்து தப்பிக்கவே முடியாது. இரவும் பகலும் என்னை சுற்றி ஏராளமான விலங்குகள் உள்ளன. ஒரு ஒட்டகம் இறந்துவிட்டது. இதனால் கோபம் அடைந்த பணியாளர் ஒருவர் என்னை சரமாரியாக அடித்து தாக்கினார். எனக்கு உணவு கூட கொடுக்காமல் பட்டினி போட்டு சித்ரவதை செய்கின்றனர். என்னை காப்பாற்றுங்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து தெலுங்கானா ராஷ்ட்ரீய சமதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமராவ், மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், ஐக்கிய அரபு எமிரேட்சுக்கான இந்திய தூதர் நவ்தீப் சூரி ஆகியோரை தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது வீரய்யாவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். ரியாத்தில் உள்ள தூதரகம் மூலம் வீரய்யாவை மீட்கும் பணி நடந்து வருவதாக நவ்தீப் சூரி பதில் அளித்தார்.

    வீரய்யாவை போனில் தொடர்பு கொண்ட போது அவர் பதில் அளிக்கவில்லை என்றும் இதையடுத்து வீரய்யாவின் பாஸ்போர்ட் ஜெராக்ஸ், விசா ஆவணங்களை தூதரக அதிகாரிகள் கேட்டு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் நவ்தீப் சூரி தெரிவித்தார்.

    வீரய்யா வெளிட்ட வீடியோ சவுதியில் உள்ள ஒரு பாலைவன பகுதியில் தான் எடுக்கப்பட்டுள்ளது. அதில் வீரய்யாவின் பின்னால் 100-க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் செல்கிறது. இந்த பகுதி ஜோர்தான் எல்லையில் எடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

    வளைகுடா- தெலுங்கானா பொது நல மற்றும் கலாசார கூட்டமைப்பின் தலைவர் பட்குரி பசந்த் ரெட்டி, சவுதி அரேபியாவில் உள்ள தெலுங்கு மக்கள் மூலம் வீரய்யாவின் இருப்பிடத்தை கண்டு பிடிக்கும் பணிகள் நடந்து வருவதாக கூறி உள்ளார்.

    தூதரக அதிகாரிகள் குழுவை அனுப்பி வீரய்யாவை கண்டு பிடித்து மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பசந்த் ரெட்டி கூறினார்.

    வீரய்யாவின் தாயார் கடந்த மார்ச் 30-ந்தேதி இறந்துபோனார். அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்கு கூட வீரய்யாவை சொந்த ஊருக்கு அனுப்ப மறுத்து விட்டார்கள்.

    தற்போது அவரது இருப்பிடத்தை கண்டு பிடித்து மீட்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
    ×