search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூத்துக்குடி வறண்டு குளங்கள்"

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஆற்றுத் தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்துங்கநல்லூர்:

    நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள சேர்வலாறு, பாபநாசம், மணிமுத்தாறு, குண்டாறு உள்பட 8 அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அணைக்கட்டிற்கு வரும் 4 ஆயிரம் கன அடிநீரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அதே போல் 156 அடி கொண்ட சேர்வலாறு அணைக்கட்டில் இருந்தும் 9 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடனாநதி, ராமநதி ஆகிய அணைகளும் நிரம்பி அவற்றில் இருந்து சுமார் 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காட்டாற்று வெள்ளம் அனைத்தும் தாமிரபரணியில் கலக்கிறது. இதனால் தாமிரபரணியில் 15 ஆயிரம் கனஅடி நீர் வெள்ளமாக செல்கிறது.இருப்பினும் நெல்லை மாவட்டத்தில் 6 அணைக்கட்டும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2 அணைக் கட்டும் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் அணைக்கட்டு மூலமாக மருதூர் மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு மூலமாக வடகால், தென்கால் ஆகிய கால்வாய் வழியாக 46 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. இங்கு சுமார் 50-க்கு மேற்பட்ட குளங்கள் உள்ளன. இந்த குளங்களில் தற்போது வரை 20 சதவீத குளங்கள் கூட முழுமையாக நிரம்பவில்லை.

    இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, வெள்ளக் காலங்களில் தண்ணீர் வீணாக கடலில் கலக்காமல் இருப்பதற்காகத்தான் சடையனேரி கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் உடன்குடி பகுதி மற்றும் அதன் வழியாக சுமார் 50-க்கும் மேற்பட்ட குளங்கள் பயன்பெறும். இதையடுத்து கலெக்டர் சடையநேரி கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார். ஆனால் எங்கள் பகுதிக்கு கலெக்டர் கூறியபடி தற்போது வரை தண்ணீர் வரவில்லை. இதற்கான எந்தவித நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கப்படவில்லை.

    மேலும் அதிகாரிகள் முறையாக தண்ணீர் பகிர்மானத்தினை கையாளதா காரணத்தினால் தான் இதுபோன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்துள்ள மழை மற்றும் ஆற்றில் வருகின்ற தண்ணீரினை வைத்து தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி பாசன குளங்களை நிரப்பி இருக்க வேண்டும். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஆற்றுத்தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    ×