search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூத்துக்குடி கோர்ட்டு"

    வக்கீல் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வைகோ மீது வழக்குப்பதிவு செய்ய தூத்துக்குடி கோர்ட்டு உத்தரவிட்டது. #Vaiko #ThoothukudiCourt
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு தொடர்பாக கடந்த 6-ந் தேதி ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ ஆஜராக வந்தார். அப்போது அங்கு இருந்த சில வக்கீல்கள் வைகோவை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் வக்கீல்களுக்கும், ம.தி.மு.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் தென்பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    இந்த நிலையில் வக்கீல் ஜெகதீஷ்ராம் என்பவர் தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், நான் தூத்துக்குடி பூபாலராயர்புரம் 1-வது தெருவில் குடியிருந்து வருகிறேன். தூத்துக்குடி கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறேன். நான் ரஜினிகாந்த் மீது பற்று கொண்டவர் என்பதால், கடந்த 30-5-18 அன்று தூத்துக்குடிக்கு வருகை தந்த நடிகர் ரஜினிகாந்துடன் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றேன். இதனை பலரும் பார்த்து உள்ளனர். அதே போன்று ம.தி.மு.க.வை சேர்ந்தவர்களும் பார்த்து உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி அன்று மதியம் 2.30 மணிக்கு நான் நீதிமன்ற பணிகளை முடித்து விட்டு வக்கீல்கள் ஓய்வுக்காக அமரும் இடத்தில் அமர்ந்து இருந்தேன். அப்போது 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு வழக்கு விசாரணைக்காக ஆஜராகிவிட்டு வெளியே வந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, உத்தரவின் பேரில் அவருடன் வந்தவர்கள் என்னை இரும்பு கம்பிகள் மற்றும் அங்கு கிடந்த நாற்காலிகளால் தாக்கினர். அங்கு இருந்த சக வக்கீல்கள் என்னை, அவர்களிடம் இருந்து மீட்டனர். மேலும் அவர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது சம்பந்தமாக தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் எனது மனு மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எதிரிகள் மீதும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேற்படி எதிரிகள் என்னை ஆபாசமாக திட்டி, அடித்து, கொலைமிரட்டல் விடுத்து, கொலை செய்ய முயற்சித்து, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 147, 148, 294(பி), 323, 324, 307, 506(2)-ன் கீழ் தண்டிக்கத்தக்க குற்றம் புரிந்து உள்ளனர். ஆகையால் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறி உள்ளார்.

    மனுவை விசாரித்த முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு அண்ணாமலை, மனு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த தென்பாகம் போலீசாருக்கு உத்தரவிட்டார். #Vaiko #ThoothukudiCourt
    ×