search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீ விபத்து"

    • தீ விபத்து குறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • கடந்த வாரம் மாநகராட்சி அலுவலகத்திலும் இதே போல தீ விபத்து ஏற்பட்டு பொருட்சேதம் ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ஆர்.எஸ். ரோட்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நேற்று வழக்கம் போல் பணிகள் இயங்கி வந்த நிலையில் மாலை ஊழியர்கள் வங்கியை அடைத்து விட்டு சென்று விட்டனர். இன்று அதிகாலை 6.30 மணியளவில் வங்கியில் இருந்து புகை மண்டலமாக வெளியே வந்து கொண்டு இருந்தது.

    இதைப் பார்த்ததும் அருகில் இருந்த பொதுமக்கள் இது குறித்து திண்டுக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமையில் 2 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இதனிடையே தீ விபத்து குறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து வங்கியை திறந்து பார்த்தனர். வங்கியின் முன்புறம் உள்ள பணம் செலுத்தும் கவுண்டர்கள், அங்கிருந்த கம்ப்யூட்டர்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமாகி இருந்தது.

    இதன் மதிப்பு ரூ.பல லட்சம் இருக்கும் என தெரிய வந்துள்ளது. வங்கியில் உள்ள பணம், நகைகள், பத்திரங்கள் ஆகியவை மற்றொரு அறையில் இருந்துள்ளது. அங்கு தீ விபத்து ஏற்படாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து நகர் வடக்கு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்து உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த வங்கியின் அருகேதான் மாநகராட்சி அலுவலகம், மிகப்பெரிய ஜவுளிக்கடைகள், வர்த்தக நிறுவனங்கள், அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டு இருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கும்.

    கடந்த வாரம் மாநகராட்சி அலுவலகத்திலும் இதே போல தீ விபத்து ஏற்பட்டு பொருட்சேதம் ஏற்பட்டது. அதன் அருகில் உள்ள வங்கியிலும் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    இந்த வங்கிக்கு காவலாளி யாரும் கிடையாது. பாதுகாப்புக்காக சி.சி.டி.வி. கேமரா மட்டுமே உட்புறமும், வெளிப்பகுதியிலும் பொருத்தப்பட்டுள்ளது. காவலாளி இருந்திருந்தால் தீ விபத்து நடந்த உடனே தகவல் தெரிவிக்கப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    • உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால் தீ விபத்து.
    • விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    உத்தரப் பிரதேச மாநிலத்தில், பேருந்து தீ பிடித்து எரிந்ததில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    காசிப்பூர் பகுதியில், திருமண நிகழ்வுக்கு சென்றபோது, பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதில், பேருந்துக்குள் இருந்த பயணிகள் 20க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால், பேருந்து தீ பிடித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • தீ விபத்தில் 3 பணியாளர்கள் படுகாயமடைந்தனர்.
    • விபத்து குறித்து அண்ணா நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல ஃபுட் ஸ்ட்ரீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 3 பணியாளர்கள் படுகாயமடைந்தனர்.

    சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்து குறித்து அண்ணா நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து கோவை, பழனி உள்பட பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பஸ் நிலையத்தின் வடக்கு புறம் திருச்சி, கரூர், பழனி செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தின் பின்புறத்தில் பேக்கரி மற்றும் செல்போன் கடைகள் உள்ளது. நேற்றிரவு வியாபாரிகள் கடைகளை அடைத்து விட்டு சென்றனர். இன்று அதிகாலை பேக்கரி கடை நடத்துபவர்கள் தங்களது கடைகளை திறக்க வந்தனர்.

    அப்போது கடைகளின் ஷட்டரில் இருந்து கரும்புகை வந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் உடனே தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் ஒரு பேக்கரி கடை , 3 செல்போன் கடை ஆகியவற்றில் தீ மளமளவென பற்றி எரிந்தது.


    தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனிடையே தீயணைப்பு வாகனங்களில் இருந்த தண்ணீரும் காலியானது. உடனே தீயணைப்பு நிலைய அதிகாரிகள் தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணனை தொடர்பு கொண்டு தெரிவிக்கவே, அவர் நகராட்சி தண்ணீர் லாரிகளை அனுப்பி வைத்தார். இதையடுத்து அதன் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    இருப்பினும் பேக்கரி கடையில் இருந்த பிரிட்ஜ், பேன், டி.வி., இனிப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் செல்போன் கடைகளில் இருந்த விலையுயர்ந்த செல்போன்கள் தீயில் எரிந்து சேதமானது. அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாராபுரம் பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் மேம்பாட்டு பணிக்காக இடிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்து ஏற்பட்ட 4 கடைகளின் உரிமையாளர்களுக்கும் தற்காலிக கடை ஒதுக்கப்பட்டு கடைகள் இடிக்கப்பட இருந்தது. இந்தநிலையில் தீ விபத்து ஏற்பட்டு 4 கடைகளும் சேதமாகி உள்ளன. சேதமான கடைகளை நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • ரெஸ்டாரன்ட் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து கட்டடம் முழுவதும் பரவியது.
    • 22 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் ஏழு மாடி கட்டடம் ஒன்றின் முதல் தளத்தில் ரெஸ்டாரன்ட் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த ரெஸ்டாரன்டில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென அனைத்து மாடிகளுக்கும் பரவியது. அந்த கட்டத்தில் மேலும் சில ரெஸ்டாரன்ட்கள், துணிக்கடைகள் செயல்பட்டு வந்துள்ளனர்.

    35-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் கட்டடத்தில் சிக்கித் தவித்த 75 பேரை மீட்டனர். அதில் 42 பேர் மயக்க நிலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த தீ விபத்தில் 43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 22 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    • குல்மார்க்கில் உள்ள பைன் பேலஸ் பிளாட்டினம் என்கிற ஓட்டலில் தீ விபத்து.
    • தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாக போலீசார் தகவல்.

    வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குல்மார்க்கில் உள்ள ஓட்டல் ஒன்றில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    குல்மார்க்கில் உள்ள பைன் பேலஸ் பிளாட்டினம் என்கிற ஓட்டலில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே, தீ கொழுந்துவிட்டு எரிவதை கண்ட அங்கிருந்த மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பனிக்கட்டிகளை தூக்கி எரிந்து தீயை அணைக்க முயன்றனர். இதன் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • கார் என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள புறத்தாக்குடியில் ஒரு வீட்டில் விஷேச நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதற்கு மதிய விருந்திற்கு பிரியாணி ஆர்டர் கொடுத்திருந்தனர். அதன்படி கொள்ளிடம் நம்பர் ஒன் டோல்கேட்டில் உள்ள பிரியாணி கடையிலிருந்து ஒரு பெரிய அண்டாவில் பிரியாணியை ஏற்றிக்கொண்டு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

    காரை அன்வர்அலி (வயது55) என்பவர் ஓட்டி வந்தார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் சுங்கச்சாவடி அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது கார் என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது. அதனை தொடர்ந்து கார் தீப்பிடித்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் அன்வர்அலி காரில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் சமயபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி முத்துக்குமரன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீயணைப்பு வண்டிகள் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.
    • தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கஜுவாகாவில் 3 மாடி கட்டிடத்தில் தனியார் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை இந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 2-வது, 3-வது மாடியில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது.

    இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வண்டிகள் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

    தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. கல்வி நிறுவன கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    • தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.
    • 8 பேர் காயம் அடைந்தனர். 10 பேர் பத்திரமாக மீட்பு.

    உத்தரபிரதேச மாநிலம் கோக்ராஜ் அருகே கான்பூர் நெடுஞ்சாலையில் ஒரு பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இதில் 20 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் இன்று பிற்பகல் 12 மணி அளவில் பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பயங்கர வெடிச் சத்தம் கேட்டது.

    இதில் 5 பேர் தீயில் கருகி பலியானார்கள். 8 பேர் காயம் அடைந்தனர். 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.

    தீயணைப்பு படையினர் பல வண்டிகளில் விரைந்து சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர்.

    இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பலர் தீ மற்றும் புகை மூட்டதில் சிக்கி கொண்டனர்.
    • மின்சார மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

    சீனாவின் கிழக்கில் நான்ஜிங் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

    வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். ஆனால் பலர் தீ மற்றும் புகை மூட்டத்தில் சிக்கி கொண்டனர்.

    இந்த தீ விபத்தில் 15 பேர் பலியானார்கள். 44 பேர் காயமடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.

    முதற்கட்ட விசாரணையில் மின்சார மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது என தெரிய வந்தது.

    • மாத்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள டயர் சேமிப்பு கிடங்கில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
    • புகைமூட்டம் அருகில் இருந்த மருத்துவமனையை சூழ்ந்ததால் அங்கிருந்த நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர்.

    சென்னை:

    சென்னை மாதவரம் அருகே மாத்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள டயர் சேமிப்பு கிடங்கில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    தீ வேகமாக பரவியதால் அப்பகுதியில் கரும்புகை எழுந்தது. இந்த புகைமூட்டம் அருகில் இருந்த மருத்துவமனையை சூழ்ந்ததால் அங்கிருந்த நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர்.

    தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • திடீரென மார்க்கெட் யார்டில் பங்கர தீ விபத்து ஏற்பட்டது.
    • தீயணைப்பு வண்டிகள், ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

    குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் உள்ள பலன்பூரில் பெரிய மார்க்கெட் யார்டு உள்ளது. இன்று காலையில் இங்கு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்னர். பல நேரம் ஆகியும் தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

    மேலும் தீயணைப்பு வண்டிகள், ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து உள்ளன.

    இந்த பயங்கர தீவிபத்து நடந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.

    ×