search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா"

    • தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை தஞ்சாவூருக்கு வருகிறார்.
    • கவர்னர் வருகையையொட்டி தஞ்சை மற்றும் திருவையாறில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் சத்குரு தியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆராதனை விழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது.

    இந்த விழாவை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

    விழாவில் தினமும் காலை 9 மணி முதல் இரவு 10.20 மணி வரை ஏராளமான இசைக்கலைஞர்கள் பாடியும், இசைத்தும் தியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளையுடன் இந்த விழா முடிவடைகிறது.

    நாளை காலை பஞ்சரத்ன கீர்த்தனை வைபவம் நடைபெற உள்ளது. இந்த விழாவை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நாளை காலை 7.45 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

    பின்னர் காலை 8.30 மணி முதல் 9 மணி வரை நாகசுரம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பின்னர், காலை 9 மணி முதல் 10 மணி வரை ஏராளமான இசைக்கலைஞர்கள் பங்கேற்று பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடியும், இசைத்தும் சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தவுள்ளனர். அப்போது, ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெறவுள்ளது.

    இதையடுத்து, காலை 10 மணிக்கு நாகசுரம், 10.30 மணிக்கு விசாகா ஹரி குழுவினரின் ஹரி கதை, முற்பகல் 11 மணிக்கு தாமல் ராமகிருஷ்ணனின் உபன்யாசம் உள்பட தொடர்ந்து இரவு 10.20 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதனிடையே, இரவு 8 மணிக்கு தியாகராஜ சுவாமிகள் வீதி உலா நடைபெறவுள்ளது.

    இவ்விழாவில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை தஞ்சாவூருக்கு வருகிறார். தஞ்சாவூரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கும் அவர், தொழில், வர்த்தக சங்க பிரதிநிதிகளைச் சந்திக்கிறார்.

    பின்னர் நாளை காலை பஞ்சரத்ன கீர்த்தனை வைபவத்தில் பங்கேற்று, மீண்டும் ஓட்டலுக்கு திரும்பிய பிறகு விவசாய சங்க பிரதிநிதிகளைச் சந்திக்கிறார். இதையடுத்து, பிற்பகலில் புறப்பட்டு திருச்சிக்குச் சென்று விமானம் மூலம் சென்னைக்குச் செல்கிறார்.

    கவர்னர் வருகையையொட்டி தஞ்சை மற்றும் திருவையாறில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • தியாகபிரம்மம் தனது கீா்த்தனைகளால் தன்னை மறந்து அப்படியே இறைவனிடம் சமா்ப்பித்தாா்.
    • தமிழ் நமக்கு உயிா்தான். மற்ற மொழிகளைக் கற்கவும், மதிக்கவும் வேண்டும்.

    திருவையாறு:

    தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் 176-ஆவது ஆராதனை விழாவை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

    தியாகபிரம்மம் ஆந்திரத்திலிருந்து இங்கு குடியமா்ந்து, தெலுங்கும், வட மொழியும் கற்றுக்கொண்டு, தமிழகத்தில் இருந்தாா். அதுதான் மிகப் பிரம்மாண்டமான எண்ணம். இந்த நிலையை நாம் மறுக்கக்கூடாது. அப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கும்போதுதான் இங்கே தியாகபிரம்மத்தின் இசையைக் கேட்பதற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வந்தனா்.

    தியாகபிரம்மம் தனது கீா்த்தனைகளால் தன்னை மறந்து அப்படியே இறைவனிடம் சமா்ப்பித்தாா். அதை இறைவனும் முழுவதுமாக ஏற்றுக்கொண்டாா்.

    நாம் அனைத்து மதங்களையும் துதிக்கவும், மதிக்கவும் வேண்டும். அந்தந்த மதத்திலுள்ள நல்லவற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் நமது கொள்கையாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்நிகழ்வில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பது முக்கியமான விஷயம்.

    தமிழ் நமக்கு உயிா்தான். மற்ற மொழிகளைக் கற்கவும், மதிக்கவும் வேண்டும். இன்னொரு மொழியைக் கற்கும்போதுதான் தமிழ் மொழியில் உள்ள நல்லவற்றை அவா்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும்.

    பாடல்களுக்கும், ராகங்களுக்கும் நோய்களைத் தீா்க்கும் சக்தி இருக்கிறது என்பதை நம்புகிறேன். அதனால், குழந்தைகளுக்கு கீா்த்தனைகளையும், ராகங்களையும் அதிகமாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என சொல்கின்றனா்.

    நாம் இப்போது விஞ்ஞானத்தில் கண்டுபிடித்ததை அன்றே மெய்ஞானம் திருவையாறில் நடந்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் ஸ்ரீதியாகபிரம்ம மஹோத்ஸவ சபா தலைவா் ஜி.கே.வாசன், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், அறங்காவலா்கள் சந்திரசேகர மூப்பனாா், சுரேஷ் மூப்பனாா், டெக்கான் மூா்த்தி உள்ளிட்டோா் பலர் கலந்து கொண்டனா்.

    இதனை தொடர்ந்து ரஞ்சனி, காயத்ரி பாட்டு கச்சேரி நடந்தது. பின்னர் குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணாபாட்டு, ஜெயந்த் புல்லங்குழல் உள்ளிட்ட பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இன்று காலை திருவையாறு அரசு இசைக்கல்லூரி மாணவர்களின் நாதஸ்வரம், தவில் வாசித்தனர். தொடர்ந்து பாட்டு, வயலின், மிருந்தங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    • தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழா இன்று மாலை தொடங்குகிறது
    • வரும் 11-ந் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழா இன்று மாலை தொடங்குகிறது. இந்த விழா வருகிற 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வரும் 11-ந் தேதி (புதன்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக 21.1.2023 (சனிக்கிழமை) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

    இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறி சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் குறிப்பிட்ட பணிகளுடன் இயங்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×