search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதி கும்பாபிஷேகம்"

    திருப்பதி மகா கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடந்தது. கும்பாபிஷேகத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கோவிலை சுற்றியும் மாடவீதிகளிலும் குவிந்திருந்தனர். #tirupati #kumbabishekam #tirupatikumbabishekam
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி, கடந்த 11-ந் தேதி சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி மகா கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கியது.

    12-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. அன்றைய தினமே மூலவர் ஏழுமலையான் மற்றும் இதர சன்னதி தெய்வங்கள், உற்வச மூர்த்திகளின் ஜீவ சக்தி கலசங்களில் மாற்றி யாகசாலையில் நேற்று வரை வைத்து அர்ச்சகர்கள் யாகம் செய்தனர்.

    13-ந் தேதி 8 வகையான பொருட்களை இடித்து அர்ச்சகர்கள் அஷ்டபந்தனம் தயாரித்தனர். மேலும் மூலவர் சன்னதி, இதர சன்னதிகளின் கோபுரங்களுக்கு மராமத்து பணி மேற்கொள்ளப்பட்டு தங்க கொடிமரம் புனரமைக்கப்பட்டது.

    14-ந் தேதி அஷ்டபந்தன சமர்ப்பணம் நடந்தது. ஏழுமலையான் திருவடி மற்றும் பீடத்தின் இடைவெளியில் அஷ்டபந்தன பசை நிரப்பப்பட்டது. நேற்று சம்பிரதாய முறையில் கோவில் சுத்தம் செய்யப்பட்டது. மூலவருக்கு மகா சாந்தி அபிஷேகமும், பூர்ணாஹூதியும் நடந்தது.

    இதைத்தொடர்ந்து, இன்று அதிகாலை 3 மணி முதல் 3.30 மணிவரை யாக சாலை பூஜை நடந்தது. பிறகு ஆகம விதிகளின்படி காலை 10.15 மணியளவில் அஷ்டபந்தன பாலாலய மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது.

    தலைமை தீட்சிதர் வேணு கோபாலசாமி தலைமையில் அர்ச்சகர்கள் வேத மந்திரம் முழங்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.



    மூலவர் ஏழுமலையானுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்த அதே நேரத்தில், வரதராஜ பெருமாள், வகுளமாதேவி, பாஷ்யகாருலவாரு, யோக நரசிம்மர், விஷ்வசேனர் சன்னதிகளிலும் புனித நீர் ஊற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து கோவிலில் உள்ள மற்ற பரிவார மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற தேவஸ்தான அதிகாரிகள், பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    கும்பாபிஷேகத்தில் இருந்து ஜீவசக்தியை மீண்டும் மூலவர், விமான கோபுரம், பரிவார மூர்த்திகளுக்கு சமர்ப்பித்தனர். பிறகு, மூலவர் ஏழுமலையானுக்கு நைவேத்தியம், அட்சததாரோ பணம், பிரம்மா கோஷா ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

    கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் உள்ளே பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை இருந்தாலும் கும்பாபிஷேகத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கோவிலை சுற்றியும் மாடவீதிகளிலும் குவிந்திருந்தனர்.

    இன்று மாலை ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏழுமலையான் பெரிய சே‌ஷ வாகனத்திலும், பின்னர் உற்சவர் மலையப்ப சாமி மட்டும் தனியாக கருட வாகனத்திலும் எழுந்தருளி கோவிலின் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலத்தப்படுத்தப் பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவையொட்டி, கடந்த 11-ந்தேதி முதல் சிறப்பு தரிசனம், நடைப்பாதை தரிசனம், வி.ஐ.பி. தரிசனம் உள்பட அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டிருந்தன. இலவச தரிசனத்தில மட்டும் குறைந்த அளவிலான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இன்று இரவு 12 மணி முதல் வழக்கம் போல் அனைத்து தரிசனங்களும் தொடங்கும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அடுத்த மகா கும்பாபிஷேகம் 2030-ம் ஆண்டு நடக்கிறது. #tirupati #kumbabishekam #tirupatikumbabishekam
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) காலை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அதையொட்டி நேற்று மூலவர், பரிவார மூர்த்திகளுக்கு சதுர்தச கலச ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) காலை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மகா கும்பாபிஷேகம் அன்று குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டதால், திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது. எனவே திருமலையில் உள்ள நான்கு மாடவீதிகள் உள்பட அனைத்து வீதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

    மகா கும்பாபிஷேக விழா நிகழ்ச்சியின் 4-வது நாள் நிகழ்ச்சிகளாக நேற்று யாக சாலையில் வைதீக காரிய கர்மங்கள் நடந்தன. காலை 6 மணியில் இருந்து 12 மணி வரை மூலவர் வெங்கடாஜலபதி, வகுளமாதா தேவி, விமான வெங்கடேஸ்வரர், வரதராஜசாமி, கருடாழ்வார், யோகநரசிம்மர், பாஷிங்கார் மற்றும் பேடி ஆஞ்சநேயர் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு சதுர்தச கலச ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணிவரை கலச ஸ்நாபன திருமஞ்சனம், மகா பூர்ணாஹூதி ஆகியவை நடந்தன. யாக சாலையில் உள்ள உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு மகா சாந்தி திருமஞ்சனம் நடந்தது. இரவு யாக சாலையில் வைதீக காரிய கர்மங்கள் நடந்தன. இந்த மகா சாந்தி திருமஞ்சனம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும்.


    கும்பாபிஷேகத்தையொட்டி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்த காட்சி.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முக்கிய நிகழ்ச்சியான இன்று (வியாழக்கிழமை) மகா கும்பாபிஷேகம் காலை 10.16 மணியில் இருந்து 12 மணிக்கிடையே நடக்கிறது. அப்போது கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மூலவர் வெங்கடாஜலபதிக்கு மகா அபிஷேகம் செய்யப்படும் நேரத்தில் கோவிலில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. கும்பத்தில் இருந்து ஜீவசக்தியை மூலவர், விமான கோபுரம், பரிவார மூர்த்திகளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. பின்னர் மூலவருக்கு நைவேத்தியம், அட்சத தாரோபணம், பிரம்மாகோஷா ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி பெரிய சேஷ வாகனத்திலும், பின்னர் உற்சவர் மலையப்பசாமி மட்டும் கருட வாகனத்திலும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். 
    திருப்பதி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி ஏழுமலையானுக்கு அஷ்டபந்தனம் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் திருப்பதி வெறிச்சோடியது. இதனால் உண்டியல் வருமானம் குறைந்தது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 16-ந்தேதி காலை 10 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கோவிலில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் 28 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, அதில் ஹோமங்கள் மற்றும் சிறப்புப்பூஜைகள் நடந்து வருகின்றன. தங்கத் தர்ப்பை ஒன்றை தேவஸ்தானம் உருவாக்கியிருந்தது. அதன் மூலமாக மூலவர் வெங்கடாஜலபதி, பரிவார மூர்த்திகளின் ஜீவசக்தி முழுவதும் 18 கும்பங்களுக்கு மாற்றப்பட்டது. அந்த 18 கும்பங்கள் யாக குண்டத்தில் வைக்கப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட வேத விற்பன்னர்கள் சங்கசூரணம், கைரீகம், வெள்ளைகுக்கிலம், லக்கை, வெண்ணெய், திபுலசூரணம், சிவப்பு பஞ்சு, தேனைவைணம் ஆகிய 8 வகையான திரவியங்களால் அஷ்டபந்தன சூரணம் தயார் செய்து, மூலவர் வெங்கடாஜலபதியின் பத்ம பீடத்திலும், கோவிலில் உள்ள அனைத்துப் பரிவார மூர்த்திகளின் பீடத்திலும் வைக்கப்பட்டது. அந்த நேரத்தில் கோவிலில் ராமுலவாரிமேடை பகுதியில் உள்ள கதவுகள் மூடப்பட்டன. கோவிலுக்குள் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    கோவில் வளாகத்தில் யாகம் நடக்கும் நேரத்தைத் தவிர, மற்ற நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி நேற்று திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ்-2 வழியாக காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணிவரையிலும், மதியம் 1 மணியில் இருந்து மாலை 6 மணிவரையிலும், இரவு 7 மணியில் இருந்து 12 மணிவரையிலும் மொத்தம் 35 ஆயிரத்து 400 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.



    தேவஸ்தானத்தின் தொடர் கெடுபிடியால் திருப்பதிக்கு பக்தர்களின் வருகை மிகவும் குறைந்தது. இதனால் திருப்பதியில் உள்ள சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லை. அலிபிரி-திருமலை இடையே பஸ் போக்குவரத்தும் குறைக்கப்பட்டது. தலைமுடி காணிக்கை செலுத்துமிடம், லட்டு பிரசாதம் விநியோக மையம், தரிசன வரிசைகள், தங்கும் அறை வழங்கும் மையங்களிலும் பக்தர்கள் கூட்டம் குறைந்து வெறிச்சோடுகிறது.

    அன்னதான மையத்தில் மிக குறைவான பக்தர்கள் மட்டுமே இலவச உணவை சாப்பிடுகின்றனர். பக்தர்கள் அதிகம் வராததால் இலைகள் போடப்பட்டு, பக்தர்களுக்காக ஊழியர்கள் காத்திருக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. தொடர்ந்து பக்தர்களின் வருகை குறைந்ததால், உண்டியல் வருமானமும் குறைந்தது. ஒரு நாளைக்கு சராசரியாக உண்டியல் வருவாய் ரூ.3 கோடி இருக்கும்.

    தற்போது பக்தர்களின் வருகை குறைந்ததால், நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை ஏழுமலையனின் உண்டியல் வருமானம் ரூ.73 லட்சமாக குறைந்தது. 6,994 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

    கும்பாபிஷேகத்திற்காக மூலவர் கருவறையிலும் ஆனந்த நிலையம் என்று அழைக்கப்படும் தங்க கோபுரத்திலும் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணி இன்றும் நடக்க உள்ளது. கருவறைக்குள் அர்ச்சகர்கள் மட்டுமே செல்ல முடியும் என்பதால் மராமத்து பணிகளை அர்ச்சகர்கள் மட்டுமே செய்து வருகின்றனர். மேலும் யாகசாலையில் உள்ள கும்பத்திற்கு தொடர்ந்து வேதபண்டிதர்கள் மற்றும் ரூத்விக்குகள் மூலமாகயாகம் நடைபெற்று வருகிறது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அங்குரார்ப்பணத்துடன் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கின. அதையொட்டி விஸ்வசேனர் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சாத்திர முறைப்படி மகா கும்பாபிஷேக விழா 16-ந்தேதி நடக்கிறது. அதையொட்டி மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கின. அதற்காக கோவில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

    யாக சாலையில் வைதீக காரியகர்ம பூஜைகளை மேற்கொள்ள நேற்று வரை மொத்தம் 45 வேத விற்பன்னர்கள் திருமலைக்கு வரவழைக்கப்பட்டனர். நேற்று இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை யாக சாலையில் அங்குரார்ப்பணம் நடந்தது. உற்சவர் விஸ்வசேனர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    மகா கும்பாபிஷேக நிகழ்ச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணியில் இருந்து 9 மணிவரை, புதிதாக அமைக்கப்பட்ட யாக சாலையில் உள்ள ஹோம குண்டங்களில் அக்னி வளர்க்கப்பட்டு யாகம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து புண்ணியாவதனம், பஞ்சகாவ்யாராதனை, வாஸ்து ஹோமம், ரக்‌ஷாபந்தனம் ஆகியவை நடக்கின்றன. இரவு 9 மணியளவில் கோவிலில் உள்ள மூலவர் வெங்கடாஜலபதி, பரிவார மூர்த்திகளின் சக்தியை 18 கும்பங்களில் ஆவாகனம் செய்யப்படுகிறது. அந்தக் கும்பங்களுக்கு தினமும் நித்யகைங்கர்யம் செய்யப்படுகிறது.

    நாளை (திங்கட்கிழமை), நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஆகிய இரு நாட்களில் 8 ரகமான திரவியங்களால் அஷ்டபந்தனம் தயார் செய்து மூலவரின் பத்ம பீடத்தில் வைக்கப்படுகிறது. 15-ந்தேதி (புதன்கிழமை) காலை கைங்கர்யம், மகா சாந்தி ஹோமம், பூர்ணாஹூதி, மதியம் 1 மணியளவில் மூலவர் வெங்கடாஜலபதிக்கு 14 கலசங்களுடன் மகா சாந்தி, திருமஞ்சனம் செய்யப்படுகிறது. யாக சாலையில் உள்ள உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு அபிஷேகம் நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக 16-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை கலா வாகனம் என்ற பூஜை நடக்கிறது. மூலவர் வெங்கடாஜலபதிக்கும், தங்க விமான பிரகாரத்துக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து ஆராதனை, நைவேத்தியம், பிரம்மஹோச பூஜைகள், அச்சதோரோபணம் ஆகியவை நடக்கின்றன.

    அன்று இரவு 8 மணியளவில் பெரிய சேஷ வாகனம், கருட வாகனம் ஆகியவற்றில் உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். 17-ந்தேதி வழக்கம்போல் அனைத்துத் தரிசன முறைகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். 
    திருப்பதியில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் அங்குரார்ப் பணத்துடன் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதனையொட்டி 6 நாளில் 1 லட்சத்து 94 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
    திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தினமும் வருகின்றனர். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் மகாசம்ப்ரோசணம் எனப்படும் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடக்கிறது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் அங்குரார்ப்பணத்துடன் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 16-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.

    இதனையொட்டி கோவில் வளாகத்தில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் தயார் நிலையில் உள்ளது. யாக குண்டங்களில் பயன்படுத்துவதற்காக டன் கணக்கில் நெய் டின்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் கும்பாபிஷேகத்தின்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி முதல் நாளான இன்று 50 ஆயிரம் பக்தர்களும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பக்தர்களும், 13-ந் தேதி (திங்கட்கிழமை) 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.

    அதேபோல் 14-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார்சிங்கால் தெரிவித்துள்ளார்.

    6 நாட்களிலும் மொத்தம் 1 லட்சத்து 94 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
    திருப்பதி கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று நள்ளிரவு 12 மணி முதல் டைம் ஸ்லார்ட் அட்டை பெற்ற இலவச தரிசனம், நடைபாதை தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 16-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிகளின்படி நடத்தப்படும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் வரும் 11-ந் தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெற உள்ளன. இதையொட்டி நாளை அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேக நிகழ்ச்சிகளுக்கு எந்தவித தடங்கலும் ஏற்படக்கூடாது என்பதற்காக நாளை முதல் 16-ந்தேதி வரை 6 நாட்கள் ரூ.300 சிறப்பு தரிசனம், இலவச தரிசனம், நடைபாதை தரிசனம், வி.ஐ.பி. தரிசனம், ஆர்ஜித சேவைகள், முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கைக்குழந்தையுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம் என அனைத்து வகை தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது.

    இந்த நாட்களில் திருமலைக்கு வரும் பக்தர்கள் இலவச தரிசன முறையில் மட்டுமே சாமியை தரிசிக்க இயலும். தினமும் 18 ஆயிரம் முதல் 35 ஆயிரம் பக்தர்கள் வரை மட்டுமே அனுமதிக்க இயலும் என தேவஸ்தானம் அறிவித்திருந்தது.



    இந்த நிலையில் அந்த முடிவில் திடீர் மாற்றத்தை தேவஸ்தானம் செய்துள்ளது. கோவிலுக்குள் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    அதனால் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் டைம் ஸ்லார்ட் அட்டை பெற்ற இலவச தரிசனம், நடைபாதை தரிசனத்தை திடீரென ரத்து செய்துள்ளது. தரிசன முறையில் தேவஸ்தானம் கொண்டு வந்த திடீர் மாற்றத்தால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இன்று காலையில் திருப்பதிக்கு வந்த நடைபாதை தரிசன பக்தர்கள் ஏழுமலையானை வழிபட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    ஏற்கனவே ஆன்லைனில் புக்கிங் செய்யப்பட்டிருந்த 300 ரூபாய் தரிசனத்தை மட்டும் 11-ந்தேதி வரை அனுமதிக்கின்றனர். அதன் பின்னர் 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்த நாள்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களை இலவச தரிசனத்தில் மட்டும் அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 16-ந்தேதி நள்ளிரவு 12 மணி முதல் வழக்கம் போல் அனைத்து தரிசனங்களும் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 
    திருப்பதியில் கும்பாபிஷேக நாட்களில் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்குள் அனுமதிப்பது தொடர்பாக பக்தர்கள் தங்கள் ஆலோசனைகளை தெரிவிக்க தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது. #TirupatiTemple
    திருமலை:

    திருப்பதியில் ஆகஸ்ட் மாதம் 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேகத்திற்கான அங்குரார்ப்பணம் 11-ந்தேதி மாலை நடைபெறுகிறது. பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேக நாட்களில் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க முடியாது என்று தேவஸ்தானம் அறிவித்தது.

    தேவஸ்தானத்தின் முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தன. இந்த நிலையில் தேவஸ்தான நிர்வாகத்துக்கு ஆலோசனை வழங்கி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தேவஸ்தான நிர்வாக முடிவை மறுசீலனை செய்து கும்பாபிஷேக நாட்களில் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களையாவது தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

    இதையடுத்து தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவில்களில் நடைபெறும் கும்பாபிஷேகத்தின் போது பக்தர்கள் பெருமளவில் வந்து யாகசாலை பூஜையை கண்டு தரிசிப்பது வழக்கம். சாதாரண கோவில்களில் நடைபெறும் போதே லட்சக்கணக்கான எண்ணிக்கையில் பக்தர்கள் கூடுவார்கள்.

    எனவே ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேக நாட்களில் ஏராளமான எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை இருக்கும் என்று கருதினோம். கும்பாபிஷேக நாட்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு மட்டுமே தரிசன வசதியை ஏற்படுத்தி கொடுக்க முடியும் என்பதாலும், சாமி தரிசன வாய்ப்பு கிடைக்காமல் அதிக பக்தர்கள் மனவேதனைக்கு உட்படுவார்கள் என்பதாலும் கும்பாபிஷேக நாட்களில் பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்க இயலாது என்று கூறினோம்.

    ஆனால் சமூக வலைத்தளங்களில் தேவஸ்தான நிர்வாகத்தின் முடிவுக்கு பின்னால் இருக்கும் உண்மை மறைக்கப்பட்டு வேறுவிதமான வி‌ஷ பிரசாரம் நடைபெற்று வருகிறது.

    இந்த வி‌ஷயத்தில் நாங்கள் நினைத்ததை சாதித்தே தீருவோம் என்று உறுதியாக இருக்க வேண்டிய அவசியம் தேவஸ்தான நிர்வாகத்துக்கு கிடையாது.

    எனவே கும்பாபிஷேக நாட்களில் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்குள் அனுமதிப்பது பற்றிய தகவல் கருத்துக்கள் ஆலோசனைகள் ஆகியவற்றை இம்மாதம் 23-ந்தேதிக்குள் தேவஸ்தான நிர்வாகத்துக்கு பக்தர்கள் அனுப்பி வைக்க கேட்டுக் கொள்கிறேன்.

    பக்தர்கள் வழங்கும் ஆலோசனைகள், கருத்துகள் குறித்து 24-ந்தேதி திருப்பதி மலையில் நடைபெற இருக்கும் அறங்காவலர் குழு ஆலோசனை கூட்டத்தில் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.

    அதன் பின்னர் கும்பாபிஷேக நாட்களில் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதி பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். அபிஷேகம் நடைபெற இருக்கும் 6 நாட்களிலும் சேர்த்து அதிகபட்சம் 34 மணி நேரம் மட்டுமே பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்க முடியும்.

    எனவே நிலைமையை கருத்தில் கொண்டு பக்தர்கள் தங்கள் ஆலோசனைகளை தேவஸ்தானத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TirupatiTemple
    ×